Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2016
S M T W T F S
« Mar   May »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 673 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா?

courageousகுழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை மட்டும் அல்ல அது ஒரு விஞ்ஞானமும் கூட. அந்த விஞ்ஞான உண்மைகளை குழந்தை மனோதத்துவ மருத்துவர்கள் (Child Psychologist) புத்தங்களாகத் தந்துள்ளனர். ஆனால் அவற்றைஎல்லாம் படிக்க பெற்றோருக்கு மனதில்லை, நேரமும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த வரை, அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதை வைத்து குழந்தைகளையும் வளர்க்க முற்படுகிறார்கள். எந்த விஞ்ஞான கல்வியும் இல்லாத பல போலி மருந்துவர்கள் தொலைக் காட்சிகளில் பேசுவதும், சிகிச்சை அளிப்பதும் இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது.

அந்தக் காலங்களில் 8 அல்லது 10 குழந்தைகளை வைத்து ஒரு தாயார் அவதிப்பட்டபோது குழந்தைகளை அடித்து துன்புறுத்தி பணியவைத்தார். “அடியாமாடு படியாது” என்பதும் “முருங்கையை ஒடிச்சுவளர்க்கணும்; பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்” என்பதும் ஊரறிந்த பழமொழி. ஆக குழந்தைகளைத் துன்புறுத்தி கட்டுப்பாடு பண்ணுவது தான் நம் நாட்டின் வழிமுறையாக இருந்திருக்கிறது. ஆனால் விஞ்ஞான உண்மைகள் அடிப்படையில் இந்த அநாகரிகமுறை கைவிடப்பட்டிருக்கிறது. நவீன உலகில் குழந்தைகள் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை, பேசிப் புரிய வைத்து விரும்பத்தக்க நடைமுறையை ஏற்படுத்திவிடலாம் என்று வந்திருக்கிறது. இன்று குழந்தைகளை அடிப்பதும் குற்றமாகிவிட்டது; இருப்பினும் அது ஒரு புறம் இருக்கட்டும்.

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது!

இன்று பல பெற்றோர்கள், அதுவும் ஓரளவு வசதி படைத்தவர்கள் குழந்தைகளை எந்தக் கஷ்டமும் அனுபவிக்காதவாறு வளர்க்க முற்படுகிறார்கள். தெருவில் விளையாட விடுவதில்லை, சைக்கிள் மிதிக்க அனுமதிப்பதில்லை, மற்றநண்பர்களோடு பழக விடுவதில்லை, பஸ்ஸில் செல்ல அனுமதிப்பதில்லை, தனியாக ஒரு இடத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை. இப்படி வளர்க்கப்பட்ட பல குழந்தைகள் மனித திறமையின்றி தைரியமின்றி கோழைகளாவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும், கோபக்காரர்களாகவும், வீட்டிலேயே தூங்கி வழியும் மனிதர்களாகவும் காண முடிகிறது..

வாட்ஸ் அப்பில் வந்த ஒரு கதையினை எடுத்துக்காட்டி உங்களது கேள்விக்கு பதில் தருகிறேன் (இந்த கட்டுரையின் ஆசிரியர் பெயர் அதில் குறிப்பிடவில்லை எனவே அதை பகிர இயலவில்லை)

கழுகுகள் நமக்கு கற்றுத்தரும் பாடம்

கழுகுகளை, வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்தியும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே  இருந்து விட்டால் வலிமையாகவும், தந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை, குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப்பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்கவிட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் கூட்டிலிருந்து வெளியே தள்ளிவிடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.

குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும் காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக ஆனந்தமாக தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்தச் சுதந்திரத்தையும்  ஆனந்தத்தையும்  தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்  பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும்  அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது  முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.கழுகிற்கும் கப்பலுக்கும் மட்டுமல்ல; மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து “நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த தவறை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.

பெற்றோர் செய்யும் தவறு

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. ”நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது” என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்தபோது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறிவிடுகிறார்கள். அதற்காக “நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட’ என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் ‘எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது’ என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.வீட்டு வேலைகள் பிள்ளைகள் செய்தாலென்ன?விடுமுறை காலங்களில் சம்பளத்திற்கு வேலை செய்தால் என்ன தவறு? வளர்ந்துவிட்ட பணக்கார நாட்டுப் பிள்ளைகள் கூட படிக்கும் காலத்தில் வேலை செய்கிறார்களே.

“I have learnt so much from my mistakes…. I am thinking of making few more” என்கிறார் ஒரு அறிஞர். தவறுகள் செய்தாலும் சில பாடங்கள் சரியாக கற்றுக்கொள்ளட்டும். வேலை செய்யாவிட்டால் தானே தவறுகள் செய்ய வாய்ப்புகிடைக்கும்

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்.அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பதுபோலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போதுபெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல என்று அந்தக் கட்டுரை நீழ்கிறது.இதில் நல்ல கருத்தும் இருக்கிறது.

“Life is tough; But you are tougher” என்பதை பிள்ளைகளுக்கு உணர வையுங்கள்.சாதிக்க துடிக்கும் உங்களது தங்க மகன் செய்ய வேண்டிய முதல் காரியம், தினமும் காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் பயிற்சி கொடுக்க வேண்டும். இன்புற்று தூங்குபவனை தட்டி எழுப்ப தாட்சணயம் பார்க்காதீர்கள்.

நான் சொல்லும் பதில் இதுதான். குழந்தைகளை இயற்கையாகவே ஓடி விளையாட அனுமதியுங்கள். தோட்டம் பக்கம் போனால் போகட்டும். பயிர் செய்யட்டும். ஆடு மாடுகள் கூட மேய்க்கட்டும். சைக்கிள் கூட ஓட்டட்டும். மற்ற குழந்தைகளுடன் விளையாடட்டும், ஊருக்கு தனியே போகட்டும்.105 புதிதாக எதையும் செய்யட்டும். பொத்தி பொத்தி வளர்த்தால் அந்தக் குழந்தை விடிந்தபின் தூங்கும் மனிதனாகவும், உடல் வளர்ச்சி இருந்தும் கோழையாகவும், பணக்கஷ்டம் இருக்கும் போதும் சொகுசு விரும்பியாகவும், சுருக்கமாகச் சொன்னால் ஆஸ்தி இருந்தும் வாழத் தகுதியில்லாத ஏழை மனிதனாகவும் உருவாகக்கூடும்.

சைலேந்திர பாபு செ

7 comments to குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா?

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>