Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2005
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,099 முறை படிக்கப்பட்டுள்ளது!

புதிய தலைமுறை

பள்ளிவாசல் வெளித்தளம் நிரம்பி வழிந்தது!

அன்று ஊர் சிறப்புப் பொதுக்ககூட்டம். வலிந்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லாது பெரியவர்கள் எல்லோருமே பெருந்திரளாக வந்து குழும்பியிருந்தனர்.

ஜமாஅத் தலைவர் முஸ்தபா வந்து உட்கார்ந்ததும் சலசலப்பு மாறி ‘கப்சிப்’ ஆனது!

தலைவர் உள்ளிட்ட அணைவரது முகங்களிலும் தெரிந்த இறுக்கம் அன்றைய கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தக் கூடியதாயிருந்தது.

“எல்லோரும் வந்தாச்சில்ல? – தலைவர்!

“ஆமா! ஆமா!” என்று பல குரல்கள்!

தலைவர் கொஞ்சம் கணைத்துக் கொண்டார்.

“என்ன விஷயம் பேசப்போறோம்னு அனேகமாக உங்க எல்லோருக்குமே தெரியும்! இருந்தாலும் தலைவருங்கற முறையில நான் கொஞ்சம் பேசனும்!”

கூட்டத்தில் எள் விழுந்தால் கூட சப்தம் கேட்கும் அமைதி! தலைவர் தொடர்ந்தார்!

“ஊர்க்கட்டுப்பாட்டை மீறி, வீம்பு பேசிட்டு வெளியே போன அந்த ‘சின்ன ஜமாஅத்துக்காரனு’க ‘கொல்லைவாசல்’ வழியாக உள்ளே வர முயற்சி செய்யுறானுக!”. ‘சின்ன ஜமாஅத் காரனுக’ என்ற வார்த்தைப் பிரயோகமே இங்கு கூடியிருப்போரின் ரத்த நாளங்களில் வெறியைப்பாய்ச்சும் – அவரவர் ‘அதெல்லாம் உள்ளே விடப்படாது அவனுகள’ என்று கூச்சல் போட ஆரம்பித்து விடுவார்கள் வழக்கமாக!

ஆனால், அன்று எந்தச் சலசலப்பும் இல்லை!

அமைதியென்றால் அப்படியொரு அமைதி!

இந்த அமைதியே அணுகுண்டு வெடித்த பீதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும் ஊர்த்தலைவருக்கு!

அவரது முகத்தில் அது தெளிவாகவே தெரிந்தது!

கொஞ்சம்  இடைவெளிவிட்டு மறுபடியும் தொடர்ந்தார்.

“செய்றதையும் செஞ்சிட்டு யோக்கியங்க மாதிரி நடிக்கிற அவனுகளுக்கு நம்பளச் சேர்ந்த சிலரும் ஜால்ரா போடுறதுமாதிரித் தெரியுது – அதுதான் சங்சடமாயிருக்கு! என்று சொல்லிவிட்டு கூட்டத்தின் மனநிலையை அளப்பது போல எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்த்தார்!

ஊஹும்.. கூட்டத்தில் எந்தச் சலனமும் இல்லை!

தலைவரின் நெற்றி சருங்கியது!

எப்போதும் அவர் வாயைத் திறந்துவிட்டாலே ‘ஒத்தூத’ ஆரம்பித்துவிடும் உமர்கான் கூட ‘செட்டிசாடையில்’ இருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது!

“ஏதோ இது எனக்குச் சொந்தப் பிரச்சினை மாதிரியும், இதுல பாதிக்கப்படுறது நான்தாங்கற மாதிரயும் இந்த சப்போர்ட்டுக்கு வந்த நம்மாளுக நெனைக்கிறாக போலிருக்கு’ அதுதான் வக்கனையா மகஜர் கொடுத்திருக்காக! ஒரு நாலு பத்துப் பயலுக சேர்ந்து, ஜமாஅத்தோட பல்லைப் புடிச்சுப் பாக்க நெனைக்கிறானுக! அவனுகளுக்குச் சரியான புத்தி படிச்சுக் கொடுக்க வக்கில்லாம, அவனுக காலுலயே போயி விழச்சொல்றது மாதரியில்லே, இருக்கு, விசயம்!”

தலைவரின் குரல் உயர்ந்தது. வெப்பமும் அதிகரித்தது!

ஊஹும்.. கூட்டத்திலிருந்து ஒரு குரல் கூட ஆதரித்தோ எதிர்த்தோ எழவில்லை!

அவரது விஸ்தாரமான முன்னுரையில் எதிர்க்குரல் அடங்கிவிட்டது என்ற நினைப்பு!

எப்போதுமே குரலை உயர்த்தி – கர்ஜித்து கூட்டத்தின் மனவோட்டத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சாதுரியம் தெரிந்தவரல்லவா, அவர்!

“இந்த மகஜருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லைங்கறது தான் என்னோட கருத்து – நீங்களும் அப்படித் நினைப்பீங்கன்னு நெனைக்கிறேன்! என்ன சொல்றீங்க?” என்ற சொல்லிவிட்டு தனது பக்கவாத்தியக் கோஷ்டியை நோக்கினார் தலைவர்!

ஆனால் அது வழக்கம்போல் தாளத்ததை ஆரம்பிக்காமல் வெகு ஜாக்கிரதையாகத் தலைகுனிந்து அமைதி காத்தது.

இப்போது தலைவருக்கு கோபமே வந்துவிட்டது!

“என்ன நெனைச்சுக்கிட்ருக்கீங்க, நீங்கள்லாம்? கூட்டத்தைக் கூட்டச்சொல்லி மகஜர் கொடுக்கறது! அப்புறம் ஒன்னுமே பேசாம இருந்தா எப்படி? ஏதாச்சும் பேசுங்களேம்ப்பா!”

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் – கூட்டத்தின் பின்னாலிருந்து ஒரு இளைஞன் எழுந்தான்!

நெற்றியையும் கண்ணையும் சுருக்கி அந்தப் பையனை யாரென்று கவணிக்க முயன்றார்் தலைவர்!

அது  … அபுபக்கர்!

‘ஓ! இந்தப்பயலா? இந்தச் சனியம் புடிச்ச பய எப்ப லீவுல வந்தாலும், ஏதாவது வில்லங்கம் பண்ணிக்கிட்டே இருக்கான்” – மனதுக்குள் நினைத்துக் கொண்டார் அவர்! சென்ற விடுமுறையில் வந்த போது ஒரு பிரச்சனையை உண்டுபண்ணி விட்டான்! அது இன்னும் கூட முழுதாகத் தீர்ந்தபாடில்லை! மறுபடியும் ஏதோ செய்யப்போறான் போலிருக்கிறது!

முன்பு நடந்தது மின்னலாய் மனதில் வந்தது!

இதே போல ஒரு கூட்டத்தில் அபுபக்கர் மீது ஒரு குற்றச்சாட்டு!

சின்ன ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களோடு ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் எந்தப் பேச்சுவார்த்தையும், கொள்வினை கொடுப்பினையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற ஊர்க்கட்டுப்பாட்டை மீறி, சின்ன ஜமஅத்த தலைவர் மகன் கூட ‘இந்தப் பயல்’ பேசிச் சிரிச்சுக் கும்மாளம் போட்டதாகவும், பெரிய ஜமாஅத் தலைவரை கமெண்ட் செய்ததாகவும் குற்றச்சாட்டு!

“நாங்க ஒரே கல்லூரியில படிக்கிறவங்க – எங்களுக்குள்ளே எத்தயோ விதத்துல தொடர்புகளிருக்கும் – உங்க கட்டுப்பாடு தடுக்கறதுங்கறதுக்காக நாங்க பேசாம கொள்ளாம இருக்கமுடியாது” என்று தைரியமாக அவன் குரல் எழுப்பியபோது கூட்டத்தில் அமளி! ஒட்டு மொத்தமாக சின்ன ஜமாஅத்தின் மீது பெரிய ஜமாஅத் உறுப்பினர்களளுக்கு இருந்த வெறுப்பில் கொஞ்சம் பிசிறு தட்டிதே அப்பபோது தான்!

“சின்னஞ்சிறிசுகளை கட்டுப்படுத்துறது எனக்கென்னவோ அவ்வளவு சரியாப்படல” என்று மூலக்கடை முஹ்ஸின் ஆரம்பித்து வைக்க, “பெரிசென்ன சிறிசென்ன, வேறு சிலர் குரல் கொடுக்க, கூட்டத்தில் குழப்பம் நேர்ந்து ஒரு முடிவெடுக்க முடியாமல் கலைய நேரிட்டது!

அதிலிருந்து இப்படித்தான் – சிற்சில அத்துமீறல்கள்! ஆக இன்று ஜமாஅத் தலைவரிமே மகஜர் கொடுத்து சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்புச் சேர்த்ததே அபுபக்கர் வைத்த ‘பொறி’ தான் போலும்!

‘அஸ்ஸலாமு அலைக்கும்!’ என்றான் அபுபக்கர்!

கூட்டமே “வ அலைக்குமஸ்ஸலாம்!” என்றது!

தலைவருக்கு உண்மையில் அந்த ஸலாத்துக்கு பதில் சொல்ல விருப்பமில்லை – இருந்தாலும் ஒரு கடுப்புடன் வாய்க்குள்ளேயே “வ அலைக்குமஸ்லாம” என்று முணகிக்கொண்டார்!

கூட்டமே அபுக்கரை ஆவலுடன் நோக்கியது!

அவன் பேச ஆரம்பித்தான்!

“இந்தச் சிறப்புக் கூட்டம் பொதுமக்களிடமிருந்து வந்த ஒரு மகஜரின் அடிப்படையில் தான் கூட்டப்பட்டிருக்கு! அந்த மனுவைப் படிச்சுக் காட்டினா, விவாதம் தன்னாலே ஆரம்பமாகிடப் போகுது! அதைவிட்டுட்டு தலைவர்் பாட்டுக்கு லெக்சர் பண்ணிக்கிட்டிருந்தா, எப்படி?”

தலைவருக்கு சுருக்கென்றது! நேரடித்தாக்குதல்! அபுபக்கரின் அந்தக் கடுமையான பேச்சை ஒருவர் கூட வெட்டிப் பேசாதது அதைவிட அவமானமாயிருந்தது! தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொஞ்சம் காட்டமாகவே பேசினார்! “அந்த மகஜரைப் படிச்சுட்டுத்தானே இங்கே பேசுறேன்! அதுல என்ன அப்படி பிரமாதமாச் சொல்லியிருக்கு? ரெண்டு ஜமாஅத்தும் ஒன்னாப் போயிடனும்னு சொல்லியிருக்கு!..

“அட ஏந்தலைவரே வளவளன்னு பேச்ச நீட்டிக்கிட்டே போறீங்க? மகஜரைத் தான் படிச்சுக்காட்டுங்களேன்” என்று எரிச்சலோடு மூலைக்கடை முஹ்ஸின் எடுத்துக் கொடுக்க, முழுக்கூட்டமே “மகஜரைப் படிங்க! மகஜரைப் படிங்க” என்று முழுக்கமிட, வேறு வழியின்றி செயலர் ஹாஜாவிடம் அந்த மகஜரைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார் தலைவர்!

காலங்காலமாக ஒரே ஜமாஅத்தாக ஒற்றுமையுடனிருந்த அந்த ஊரில், கருத்து வேறுபாடுகள் தலைதூக்கி, தனிமனிதக் குரோதங்கள் பொதுப்பிரச்சினையில் கலக்கப்பட்டு, ஜமாஅத் இரண்டாகி, இன்று சின்ன ஜமாஅத், பெரிய ஜமாஅத்தென்று அணி திரண்டு, இருப்பக்கமும் ‘கோர்ட், கேஸ்’ என்று பண விரயம் ஏற்பட்டிருக்கும் அவலத்தின் பின்னணி முறையாக விளக்கப்பட்டு – இன்றைய சமுதாயச் சூழலில் மார்க்கம் கூறும் ஒற்றுமையின் வழி நிற்கவேண்டிய அவசியததை வலியுறுத்திக்காட்டியது மகஜர்!

மகஜர் படித்து முடிக்கபட்டவுடன் அவசரம் அவசரமாக தலைவர் ‘இந்த மகஜர்ல கையெழுத்துப் போட்டிருக்கிறது வெறும் ஐம்பது பேர்தான்! இந்த ஐம்பது போரோட ஆலோசனையை மத்த தொள்ளாயிரததைம்பது பேரும் ஒத்துக்கணுங்கற கட்டாயமில்லே!” என்று காட்டமாகச் சொன்னார்!

“இதை நீங்க ஏன் சொல்றீங்க? எல்லோர்கிட்டயும் கேளுங்களேன்?” பட்டென்று வந்தது பதில் அபுபக்கரிடமிருந்து!

இப்போது தலைவருக்குக் கோபமே வந்துவிட்டது!

“நீ ஒன்னும் எனக்கு வழிகாட்டித்தர வேண்டாம் – எனக்குத் தெரியும்!” என்று அபுபக்கரிடம் பாய்ந்துவிட்டு, “என்னப்பா சொல்றீங்க, இந் மகஜரைப்பத்தி?” என்று கூட்டத்தை நோக்கிக் கேட்டார்!

“அவங்க சொல்றதுக்கு ஒன்னுமே இல்லை தலைவரே! அவங்க எல்லோருமே ஊர் ஒற்றுமையை ஆதரிக்கிறதா ஏற்கெனவே கையெழுத்தே போட்டுக் கொடுத்துட்டாங்க! ஆண்கள் மட்டுமில்லே, இந்த ஊரைச் சேர்ந்த அத்தனை பெண்களுங்கூட கையெழுத்ததுப் போட்டுட்டாங்க, உங்களையும் அந்த சின்ன ஜமாஅத்துத் தலைவரான உங்க மச்சினைரையும் தவிர! உங்க குடும்பத் தகராறை பொதுப்பிரச்சனையாக்கிக் குளிர்காயுறத இனி மேலும் இந்த ஊர் ஏத்துக்கறதா இல்லே! இந்தாங்க, அத்தாட்சி!” என்று சொன்னவாறு கத்தைகத்தையாக கையெழுதிட்ட பேப்பர்களை தலைவரிடம் நீட்ட, அதை வாங்கும போது அவர் கைகள் அவரையறியாமல் ஆடின!

வலிந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர் “நான் இதை ஏத்துக்க முடியாது” என்று கத்தினார்.

“நீங்க ஏத்துக்கறீங்கலோ, இல்லையோ, அது எங்களுக்கு முக்கியமில்லை! உங்கள பதவியிலிருந்து நீக்கிடடு வேற தலைவரைத் தேர்ந்தெடுக்குறதுக்குக் கூட நாங்க தயார்ல இருக்கோம் – நீங்களும் உங்க மச்சினரும் நெலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஊர் சொல்றது போலக் கேட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது. இல்லேன்னா உங்க விருப்பம்! அப்படித்தேனே?” என்றான் அபுபக்கர் கூட்டத்தை நோக்கி!

“ஆமா! ஆமா!” என்றது கூட்டம்!”

அந்த நேரத்தில், வெளிகேட்டில் “அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்” என்ற கோஷம்!

அனைவரும் அங்கே திரும்பிப் பார்த்தார்கள்!

தலைவர் முஸ்தபா கண்களை கூர்மையாக்கிக் கொண்டார்!. சின்ன ஜமாஅத் தலைவரான அவரது மைத்துனர் தலைகுனிந்து நடந்து வந்து கொண்டிருந்தார்! அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி வந்து கொண்டிருந்தான் அனீஸ், அவரது மைத்துனர் மகன் – அன்று அபுபக்கர் மீதான குற்றச்சாட்டுக்குக் காரணமானவன்!

அந்த அவசர சூழ்நிலையிலும் “இந்தப் பையன் யாரோடாவது பேசித் தொலைஞ்சிட்டுப் போகட்டும்னு சும்மாயிருக்காமப் போயிட்டேனே பாவி!” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டார் தலைவர்! தன் தலைமைத்துவம் தகர்ந்து பேய்விட்டதே என்ற தவிப்பின் எதிரொலி அது. ஆனால், விழித்துக் கொண்டுவிட்ட புதிய தலை முறையிடம், இனியும் தன் பாச்சா பலிக்காது என்பதைப் புரிந்துகொண்டுவிட்ட அந்தப் புத்திசாலி “உங்க எல்லோரது விருப்பமும் அதுதான்னா, எனக்கென்ப்பா? நல்லபடியா ஒன்னு சேர்ந்துக்குவோம்!” என்றார் அவசரமாக – அதீதமாக குரலைத் தாழ்த்தி!

“அல்ஹம்து லில்லாஹ்” என்றனர் அனைவரும்!

அதற்குள் வெளியிலிருந்து வந்த கூட்டமும் பள்ளித்தளத்தில் ஏறிவந்துவிட, “அல்லாஹ் அக்பர்” என்ற தக்பீர் முழக்கம் விண்ணைப்பிளந்தது.

நன்றி: முஸ்லீம் முரசு

அல்லாஹ் அக்பர் = அல்லாஹ் பெரியவன்