Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,953 முறை படிக்கப்பட்டுள்ளது!

மக்கள் பணி’க்கு வழங்கும் சம்பளம் “கிடுகிடு’

1964ல் 250 ரூபாய்; 2011ல் 50 ஆயிரம் ரூபாய்: “மக்கள் பணி’க்கு வழங்கும் சம்பளம் “கிடுகிடு’

கடந்த 2006ம் ஆண்டு வரை, 16 ஆயிரம் ரூபாயாக இருந்து வந்த எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம், இந்த ஆட்சியில் மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டு, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.,க்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், “மக்கள் சேவை’ புரிய தங்களுக்கு இது போதுமானதாக இல்லை, என்று சட்டசபையில் அவர்கள் குரல் கொடுப்பதுண்டு. இதனால், அவ்வப்போது எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் மற்றும் இதர படிகள் உயர்த்தப்பட்டு வந்துள்ளது. கடந்த 1964ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் 250 ரூபாயாக மட்டுமே இருந்து வந்தது. இடையில், 1971ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசி படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழங்கப்பட்டது. இந்த தொலைபேசி படி, 1980ல் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், 1980ம் ஆண்டு, மொத்தமாக 800 ரூபாய் எம்.எல்.ஏ.,க்கள் பெற்று வந்தனர். கடந்த 1981ல், ஈட்டுப்படி 400 ரூபாயாகவும், தொலைபேசி படி 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1982ல், சம்பளம் 300 ரூபாயாவும், தொலைபேசி படி 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1984ல் சம்பளம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 1985ம் ஆண்டில், சம்பளம் 600 ரூபாயாவும், ஈட்டுப்படி 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. கடந்த 1987ல், தொலைபேசி படி 450 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்பின், 1989ல், ஈட்டுப்படி 700 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 1,750 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், 1990ல் சம்பளம் 1,000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 800 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 700 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1991ல், புதிதாக தொகுதிப்படி என்று உருவாக்கப்பட்டு, 250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்டது. கடந்த 1992ல், தொலைபேசி படி 800 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 1993ல், சம்பளம் 1,250 ரூபாயாக உயர்த்தப்பட்டு, புதிதாக தபால் படி என்று 250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்டது. இதன்பின், 1994ல், சம்பளம் 1,500 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 300 ரூபாயாகவும், தபால் படி 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 3,950 ஆக உயர்ந்தது. பின்னர், 1995ல் சம்பளம், 1,700 ரூபாயாகவும், தொகுதிப்படி 400 ரூபாயாகவும், தபால் படி 450 ரூபாயாகவும், தொலைபேசி படி 900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதன்பின், 1996ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சம்பளம் 2000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1,500 ரூபாயாகவும், தொகுதிப்படி 525 ரூபாயாகவும், தபால் படி 625 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 1,250 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 6,000 ரூபாயை தொட்டது. இதன்பின், 1997ல் ஈட்டுப்படி, 3,500 ரூபாயாகவும், தொகுதிப்படி 625 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, 1998ல் தொகுதிப்படி 875 ரூபாயாகவும், தபால் படி 875 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 1,750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதுவே, 1999ல் தொலைபேசிப்படி மட்டும் 2,750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 10 ஆயிரம் ரூபாயானது.

கடந்த 2000ம் ஆண்டில், புதிதாக தொகுப்புப்படி என்று உருவாக்கப்பட்டு, 2,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர், 2001ல், ஈட்டுப்படி 4,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 2,000 ரூபாயாகவும், தபால் படி 1,500 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 4,000 ரூபாயாகவும், தொகுப்புப்படி 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 16 ஆயிரம் ரூபாயானது. அதன்பின், அ.தி.மு.க., ஆட்சி முடியும் வரை, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், செப்டம்பர் முதல் தேதியன்று, ஈட்டுப்படி 6,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாயானது. கடந்த 2007 ஏப்ரலில் புதிதாக வாகனப்படி என்று ஒன்று உருவாக்கப்பட்டு, 5,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2008ல், 12 ஆண்டுகளுக்குப் பின், சம்பளம் 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன், ஈட்டுப்படி 7,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 5,000 ரூபாயாகவும், தபால் படி 2,500 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு மொத்த சம்பளம் 30 ஆயிரம் ரூபாயானது. இதன்பின், வாகனப்படி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு முதல், எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாயானது. அதாவது, 2006ல் ஆட்சி அமைந்த போது, மொத்த சம்பளமாக 16 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சி முடியும் நிலையில், மூன்று மடங்குக்கு மேல் சம்பள உயர்வு பெற்று 50 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.

இதுமட்டுமன்றி, எம்.எல்.ஏ.,க்களின் தினப்படியாக 500 ரூபாய், பயணப் படியாக ஏ.சி., இரண்டடுக்கு ரயில் பயணம், அதுவும் ஆண்டுக்கு இரண்டு தவணைகளாக 20 ஆயிரம் ரூபாய்க்கு ரயில் பயணம், ஒரு உதவியாளர் உட்பட இருவருக்கு இலவச பஸ் பாஸ், விடுதியில் ஒரு தொலைபேசி இணைப்பு, வீட்டுக்கு ஒரு தொலைபேசி இணைப்பு ஆகியவற்றுக்கான பில் கட்டணம், இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு ஆகும் செலவை ஈடு கட்டுதல், போன்ற பல்வேறு சலுகைகளும் எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டு.

எம்.எல்.ஏ.,க்களின் நிறைவேறாத ஆசை: தமிழகத்தின் 13வது சட்டசபை அமைந்தது முதல், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பாக ஞானசேகரன், எம்.எல்.ஏ.,க்களுக்கு சென்னை ஐ.டி., காரிடர் சாலையில் வீடு கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்பது தான். இதற்கு முதல்வர் தரப்பில் பதில் இல்லாமல் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் மட்டும் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு முதல்வர் பேசும் போது, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்தால், அதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார். இதையடுத்து, ஞானசேகரன் எம்.எல்.ஏ., மற்ற காங்கிரஸ், பா.ம.க., மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களிடம், நிலம் பெறுவதற்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை நடத்தினார். பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்தை பெற்று முதல்வரிடம் ஒப்படைத்தார். இதன்பின், “எம்.எல்.ஏ.,க்களுக்கு சோழிங்கநல்லூரில் நிலம் ஒதுக்கப்படும்’ என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், ஆட்சி முடியும் வரை, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. மிகவும் வறுமை நிலையில், சொந்த வீடு கூட இல்லாமல் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களின், இந்த ஆசை கடைசிவரை நிறைவேறாமலேயே போனது.

நன்றி:  தினமலர் –  பா.பாஸ்கர்பாபு