ஊர் பெயர் என்ன?

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 8

மனதை மயக்கும் மந்த மாருதம் வீசும் இளவேனிற்காலம். பொழுது புலர்வதற்கு இரண்டு நாழிகை இருக்கும்.

கிருஷ்ணபட்சத்துத் தேய்பிறை, மங்கலான வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது.

ஆதவனின் வருகையை தெரிவிப்பதுபோல் கீழ்வானத்தில் செம்மை படர்ந்தது.

இரவு முழுவதும் தங்கள் பேடையுடன் கீச்சுக் குரலில் காதல் மொழி பேசிக் கும்மாளம் அடித்துக்கொண்டிருருந்த பட்சி ஜாலங்கள் கூடுகளில் முடங்கின. ஊர் மொத்தமும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. எங்கும் அமைதி………

ஊரா! எந்த ஊர்?

ஓ! மறந்துவிட்டேன்.

திட்டுப்பகுதியைவிட்டு நாம் புறப்பட்டு சென்று ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது.

பாண்டிய நாடு முழுமையும் சுற்றி வருவதற்கு இவ்வளவு காலம் ஆகிவிட்டது.

நாம் இங்கிருந்து புறப்படும்போது நாலைந்து குடிசைகள் தானே இருந்தது. இப்பொழுது நூறு வீடுகளுக்கு மேல் உள்ள ஊராகிவிட்டதே! எப்படி?

கடந்த நூற்றைம்பது வருடங்களாக பாண்டிய நாட்டில் நடந்துள்ள நிகழ்ச்சிகள் தான் காரணம்.

பாண்டிய மன்னர் இருவருக்கிடையில் நடந்த பங்காளிச்சண்டைதான் இதற்கு மூல காரணம் என்று சுருக்கமாகக் கூறிவிடலாம்.

உண்மையில் அப்படியல்ல.

குலசேகரனுக்கு ஆதரவாக இலங்கைப்படை வருகிறது. குலசேகரனுக்கு உதவியாக அவனைச்சார்ந்த பாண்டிய சிற்றரசர்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள்.

வீரபாண்டியனுக்கு ஆதரவாக சோழர் படையும்இ கொங்கு நாட்டுப்படையும் வருகிறது. வீரபாண்டியனை ஆதரிக்கும் பாண்டிய சிற்றரசர்கள் படையும் போரில் கலந்து கொள்கிறது.

இடையில் சேரர் படையும் அவ்வப்போது தலைகாட்டுகிறது.

போர் நடக்கும் இடங்கள் ஒன்றல்ல. பல இடங்களில் போர் நடக்கிறது.

ஒரு முறை அல்ல. பல முறை நடக்கிறது. பல வருடங்கள் தொடர்ந்து நடக்கிறது.

இதனால் ஏற்பட்ட விளைவு?  போரினால் ஏற்படும் பாதிப்பு போர் வீரர்களுடன் நிற்காது. பொதுமக்களைத்தான் அதிகம் பாதிக்கும்.

நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அன்றாட வாழ்க்கைக்கான அத்தியாவசியப்பண்டங்கள் கிடைக்கவில்லை.

நிம்மதியாக வெளியில் நடமாட முடியவில்லை. கைவினைஞர்களும் தொழிலாளர்களும் அச்சமின்றி தங்கள் வேலைகளை செய்யமுடியவில்லை. வேளாண்; தொழில் முடங்கிவிட்டது.

சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை. அராஜகம் தலைவிரித்தாடியது.

மக்கள் அமைதியை நாடினர். அமைதியான சூழ்நிலையை விரும்பினர். அமைதியான இருப்பிடம் எங்கிருக்கிறது என்று தேடினர்.

போரினால் அதிகம் பாதிப்படைந்த இடங்களில் உள்ளவர்கள் வீடு வாசல்களைத் துறந்து வெளியேறினார்கள். கால் போன போக்கில் நடந்தார்கள்.

இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் போரினால் பாதிப்பு ஏற்படாமலும் போர் நடக்க வாய்ப்பு இல்லாததுமான சிற்றூர்களில் குடியமர்ந்தார்கள்.

மற்றும் சிலர் புதிய இடங்களில் வீடுகளைக் கட்டிக்கொண்டு தங்கினார்கள். அவ்வாறு ஏற்பட்ட புதுக்குடியேற்றத்திற்கு தாங்கள் விரும்பிய பெயரைச் சூட்டிக்கொண்டார்கள்.

இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் சிலர் திட்டுப்பகுதிக்கு வந்தார்கள். அங்கிருந்த அமைதியான சூழல் அவர்களைக் கவர்ந்தது. அங்கேயே தங்கிவிட்டார்கள்.

இவர்களன்; வருகையால் திட்டுப்பகுதி சிற்றூர் ஆகிவிட்டது. அப்படியானால் அந்த சிற்றூருக்கு ஓர் பெயர் இருக்குமே! என்ன பெயர்?

இப்போது நாம் நிற்பது அந்த ஊரில் தான். அதிகாலை நேரமானதால் வெளியில் யாரையும் காணவில்லை.

‘டக்… டக்… டக்… டக்…’ என்ற சப்தம். டைப்படித்த மாதிரி ஒரே சீரான சப்தம்.

ஊருக்குத் தென்புறம் வெகு தொலைவில்………. .

காலை நேரத்தின் அந்த அமைதியான சூழ்நிலையைக் குலைப்பது போல் டக்… டக்…. டக்…  டக்;… ஒலி கூடிக்கொண்டே வருகிறது.

ஊன்றிக்கவனித்தால் இங்குதான் வரும் போல் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

நம் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவதுபோல் சற்று நேரத்திற்கெல்லாம் ஊருக்குத் தென்புறமாக புழுதிப்படலம் தெரிந்தது.

அடுத்த சில நிமிடங்களில் ஏழெட்டுப் புரவிகள் ஊரின் மேற்குப்புறத்தில் வந்து நிற்கின்றன. புரவிகளில் இருந்தவர்கள் தடதடவென்று கீழே குதித்தார்கள்.

அவர்களின் உடைகளையும் தோற்றத்தையும் வைத்துப்பார்த்தால் போர் வீரர்கள் என்று நிச்சமாகக் கூறலாம்.

அவர்களில் ஒருவன் மட்டும் சற்று வித்தியாசமாக நாகரீகமான உடையுடன் தோரணையாக இருந்தான். குழுவின் தலைவன் போலும்.

அடுத்து ஒரு பெண். வயது 22ற்குள் இருக்கலாம். அழகுக்கேற்ற நிறம். நிறத்திற்கேற்ற அழகு. நிற்கும்  தோரணையையும் உடை மற்றும் ஆபரணங்களையும் வைத்துப் பார்த்தால் உயர் குடிப் பெண்ணாகத் தோன்றியது.

புரவிகளை விட்டு இறங்கியதும் வீரர்கள் அடக்கமாக நின்றனர்.

குழுவின் தலைவனாகத் தோன்றியவனும் அந்தப் பெண்ணும் மறுபக்கம்…….

வீரர்கள் தலைவனை ஏறிட்டுப்பார்த்தார்கள், அவனிடம் ஏதோ உத்தரவை எதிர்பார்ப்பது போல்.

தலைவன் அமைதியாக நாலாபுறமும் பார்வையைச்செலுத்தினான். பின்னர் வீரர்களைப் பார்த்தான்.

உதட்டில் புன்னகை….  முகத்தில் திருப்தி………

வீரர்கள் புரிந்துகொண்டார்கள்.

பிரபு! இந்த இடம் பிடித்திருக்கிறதா?  என்று வீரர்களில் ஒருவன் பவ்வியமாகக் கேட்டான்.

”முதலில் இந்த ஊரின் பெயர் என்ன?  எத்தனை வீடுகள்?   இங்குள்ள மக்கள் யார்? என்பதை தெரிந்து கொள்வது நல்லது. மேலும் இதைச்சுற்றியுள்ள நீர்நிலைகள் விவசாய நிலங்கள்இ தரிசுநிலம்இ காட்டுப்பகுதி இவற்றைப்பற்றியெல்லாம் நாம் ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று தலைவன் கூறிவிட்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.

வீரர்களுக்கு ஒரே பிரமிப்பு! எவ்வளவு நுணுக்கமாக நம் தலைவர் விஷயங்களைப்பார்க்கிறார்! எத்தனை கோணங்களில் சிந்திக்கிறார்! இத்தனை அம்சங்களையும் நம்மால் சிந்தித்துக்கூடப்பார்க்க முடியவில்லையே!’ என்று தங்களையே நொந்து கொண்டார்கள்.

சிந்தனையில் இருந்த தலைவன் திடீரென்று வீரர்களில் ஒருவனை சைகையால் அழைத்து கிழக்குப்புறமாக சுட்டிக்காண்பித்தான்.

சிறிது தூரத்தில் இரண்டு பேர் இவர்களையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

வீரன் ஓடோடிச்சென்று அவர்களை அழைத்து வந்தான்.

ஒருவர் முதியவர். மற்றவன் வாலிபன், சோனியாக இருந்தான். இருவரின் கண்களிலும் மிரட்சி தெரிந்தது.

வீரர்களின் ஒருவன் முதியவரைப்பார்த்து,, ‘இந்த ஊரின் பெயர் என்ன?’ என்று கேட்டான்.

புதியவர்களை அதுவும் ஆயுதபாணிகளான நபர்களைச்சந்தித்த அதிர்ச்சியில் முதியவர் அச்சமும் குழப்பமும் கலந்த பார்வையில் அவர்களை நோட்டமிpட்டார்.

கேள்வி கேட்ட வீரனைப் பார்த்தார். மற்ற வீரர்களைப் பார்த்தார். ஏதோ பதில் கூற வாயெடுத்தார். அப்புறம் தலைவன். இறுதியில் அப்பெண்ணின் மீது பார்வை நிலைத்தது.

அதே நேரத்தில் அவரது வாயில் இருந்து வார்த்தை உதிர்ந்தது. அவ்வளவுதான்!

மொத்தக்குழுவும் அதிர்ச்சியடைந்தது. அனல் பறக்கும் ஆவேசத்துடன் வாள் பிடியில் கைவைத்தனர்.

அப்பாவித்தனமாக கால்கட்டை விரலால் மண்ணைக் கிளறிக்கொண்டிருந்த பெண்ணின் முகம் குங்குமமாகச் சிவந்தது.

வீரர்களில் ஒருவன் முதியவரின் தலைக்கு நேராக வாளை உயாத்தினான்.

பீதியில் உறைந்து போன முதியவர் தனது முடிவு காலம் நெருங்கிவிட்டது என்ற அச்சத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டார்.

வீரனின் வாள் முதியவரின் தலைக்கு நேராக இறங்கியது.

அடுத்த கணத்தில் முதியவரின் தலை கீழே உருண்டு விழு…………..

”நில்!’ திடீரென்று ஓர் அதிகாரக்குரல்.

ஓங்கிய வாள் முதியவரின் தலைக்கு மேல் ஒரு முழ உயரத்தில் நின்றது. வீரன் வாளைப்பின்னுக்கு இழுத்துக்கொண்டான்.

தலைவனின் பார்வை கேள்விக்குறியாக வீரனின் முகத்தில் லயித்தது.

வீரனின் ஆவேசமும் படபடப்பும் இன்னும் நீங்கவில்லை.

‘ஊர் பேர் கேட்டால் இந்தக் கயவன்…..’ என்று அதற்கு மேல் பேச முடியாமல் சுட்டெரித்துவிடுவதுபோல் முதியவரைப்பார்த்தான்.

முதியவர் மூடிய கண்களை இன்னும் திறக்கவில்லை.

அவரைக்கிட்ட அழைத்து வருமாறு செய்து அமைதியாகக்கேட்டான் தலைவன்இ ‘பெரியவரே! இந்த ஊர் பெயர் என்ன?’

ஏற்கனவே ஒருமுறை சொல்லி பட்டபாடு போதாதா? இன்னொரு முறை சொன்னால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில்……

ஆசிரியர்: சி. அ. அ. முஹம்மது அபுதாஹிர்

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்