Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,975 முறை படிக்கப்பட்டுள்ளது!

விஜய பாண்டியன்

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 8

முதியவர் பேசாமல் நின்றார். தலைவன் அவர் பயத்தைப் போக்கும் விதத்தில் அவரைத் தட்டிக் கொடுத்துப் பயப்படாமல் சொல்லுங்கள் பெரியவரே! இனிமேல் யாரும் உங்களைத் தொட மாட்டார்க்ள்’ என்று தலைவன் அவரை ஊக்கப்படுத்தினான்.

முதியவரின் பார்வை மீண்டும் ஒவ்வொருவர் மீதும் பதிந்து இறுதியாக அப்பெண்ணின் மீதும் படிந்தது.

வெட்கத்தாலும், நாணத்தாலும் செக்கச் செவேலென்று சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்ததும் திடீரெனப் பார்வையை பின்னுக்கிழுத்து மீண்டும் தலைவனைப் பார்த்தார்.

கனிவும், பரிவும் நிறைந்த அவன் முகத்தைப் பார்த்ததும் முதியவருக்கு சற்றுத் தைரியம் வந்தது.

உதடுகள் அசைந்தது. மிகச் சன்னமான குரலில் பதில் கூறினார்.

தலைவனுக்கு ஆச்சரியம். “என்ன! ‘வாடி’ என்பது தான் இந்த ஊர்ப்பெயரா?” என்று சந்தேகத்தைப் போக்கிக்கொள்ளும்  வகையில் கேட்டான்.

‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாக தலையை மட்டும் ஆட்டினார் முதியவர். கலகலவென்று சிரித்தான் தலைவன்.

முதியவருக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சத்துடன் பின்னால் ஒதுங்கி நின்ற சோனி இப்போது சற்று தைரியத்துடன் முன்னுக்கு வந்து “ஆமாங்க! இந்த ஊர்ப்பேரு “வாடி” தான். பெரியவங்க வைச்ச பேரு” என்று கூறித் தன்னையும் விளம்பரப்படுத்திக் கொண்டான். அது பலனளிக்காமல் போகவில்லை.

“பெரியவங்க என்றால் யார்” சோனியைப் பார்த்துத் தலைவன் கேட்டான்.

“இந்த ஊர் உண்டாக்கினவரு”

“அது தான் யார் என்று கேட்கிறேன்”

“சசிவர்ணத் தேவரு.. அவருடைய ஊடு தான் இநத ஊருக்கே மொதலாவது ஊடு”

‘இப்பொழுது இந்த ஊருக்குத் தலைவர் யார்?’

“பெரியவருதானுங்க” முதியவரைச் சுட்டிக்காட்டினான்.

“பெரியவரே! உங்க பேர் என்ன?” இப்போது முதியவர் பக்கம் திரும்பிக் கேட்டான் தலைவன்.

“உலகப்பத்தேவர்”

“இந்த ஊரில் மொத்தம் எத்தனை வீடுகள் இருக்கும்?”

“சுமார் நூறு வீடுகள்”

“எல்லாருமே மறவர்கள் தானா?’

“முக்கால் பங்கு மறவர் கால் பங்கு மற்ற ஜாதிக்காரங்க”

இந்த பதிலைக் கேட்டதும் தலைவன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இதற்குள் செய்தி தெரிந்து ஊர் மொத்தமும் அந்த இடத்தில் வந்து திரண்டது.

விஜய பாண்டியன்

அந்த அமைதியான சிற்றூர் ‘அன்று திருவிழாக்’ கோலம் பூண்டிருந்தது.

பெரியவர்கள் புத்தாடை புனைந்து ஒருவருக்கொருவர் ஏதோ இரகசியமாக உரையாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் காணப்பட்டனர்.

சிறுவர் சிறுமியர் குளித்துத் தலை சீவிப் பூச்சூடிப் பொட்டிட்டு வண்ண வண்ண உடையணிந்து மகிழ்ச்சியாக ஓடியாடிக் கொண்டிருந்தனர்.

இது பண்டிகைக் காலமில்லை ‌‌யே ! புதிதாக என்ன பண்டிகை என்ற கேள்வி ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் எழுந்தது.

யாரிடம் கேட்பது?

“இன்னிக்கி என்ன திருநாளாம்?”

ஒரு சிறுமி தனக்கு இரண்டொரு வயது மூத்த இன்னொரு சிறுமியிடம் துணிவுடன் கேட்டு விட்டாள்.

“ராசா வந்திருக்கிறாராம்”

மெதுவாகக் குனிந்து காதோரம் கிசகிசுத்தாள்.

உதயத்திற்கும் மதியத்திற்கும் இடைப்பட்ட நேரம். மேகமூட்டமாகயிருந்ததால் வெயிலின் உக்கிரம் தணிந்து இதமான சூழ்நிலை.

பெரியவர்கள், சிறுவர்கள் உட்பட ஊர்மொத்தமும் ஊரின் மேற்குப் பகுதியில் திரண்டனர்.

ஆண்கள் ஒரு பக்கம். பெண்கள் ஒரு பக்கம். சிறுவர் சிறுமியர் ஒருபக்கம் என்று பிரிந்து நின்றனர்.

கூட்டத்தில் அசாத்திய அமைதி நிலவியது.

அந்த இடத்தில் மையப்பகுதியில் ஓர் சிறிய மேடை அமைக்கப்பட்டு அதில் மரத்தாலான இரு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன.

சற்று நேரத்திற்கெல்லாம் தோரணையாக உடையணிந்த ஓர் இளவலும் அழகுச் சிலை போன்ற ஒரு பெண்ணும் வந்து கூட்டத்தினருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ஆசனங்களில் அமர்ந்தனர்.

அவர்களுக்குப் பாதுகப்பாக ஏழெட்டு வீரர்கள் இருபக்கமும் நின்றனர்.

எள் விழுந்தால் சப்தம் கேட்கக் கூடிய அமைதி. மக்கள் கூட்டத்தின் முன்னணியில் நின்ற உலகப்பத் தேவர் ஆசனத்தில் அமர்ந்திருந்த இளவலுக்காகக் கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

பின்னர் மக்கள் பக்கம் திரும்பி, “நாம் எல்லோரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறோம்’ என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இருந்த போதிலும், சம்பிரதாயத்திற்கேற்ப ஊர்த் தலைவன் என்ற முறையில நான் இதைத் தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது.

இதோ நமக்கு முன் வீற்றிருக்கும் பாண்டியர் குலவிளக்கு, இளவரசர், விஜயபாண்டியர் இங்கு தங்கியிருக்கும் நோக்கத்துடன் நம் கிராமத்திற்கு வந்திருக்கிறார். இவர் நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். எனவே இது முதல் நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து விசுவாசமான பிரஜைகளாக இருப்பதாக சபதம் எடுத்துக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்” என்று சுருக்கமாகக் கூறி முடித்தார்.

“விஜய பாண்டியர் வாழ்க!”

“இளவரசர் நீடூழி வாழ்க!”

“பாண்டிய நாடு வாழ்க!”

என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. மகிழ்ச்சி ஆரவாரத்தில் மக்கள் திளைத்தனர்.

அடுத்து சம்பிரதாயமான சடங்குகளுக்கிடையே எளிமையான முறையில் ‘சிற்றரச’னாகத் தன்னை முடி சூட்டிக் கொண்டான் விஜயன்.

இப்படிப்பட்ட உள்ளன்புடன் கூடிய வரவேற்பை விஜயன் எதிர்பார்க்கவே இல்லை. இந்த மக்களின் அன்பும், பாசமும், ராஜபக்தியும் அவன் மனதில் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

முதற்கட்ட வேலை சுமுகமாக முடிந்தது. இனி அடுத்த கட்ட வேலைகளைக் கவனிக்க வேண்டும்.

முதலாவதாக தனக்கும் வீரர்களுக்குமாக ஒரு பாதுகாப்பான தங்குமிடம். இதை எந்த இடத்தில் எப்படி அமைப்பது? கட்டுமான பொருட்களை எங்கிருந்து சேகரிப்பது?

இரண்டாவது, கையிருப்பில் உள்ள பணம் சில நாட்களுக்கே வரும். இதை எந்த வகையில் சரிகட்டுவது?

மூன்றாவதாக, வருவது மிக முக்கியமான பிரச்னை.  மன்னனாக மகுடம் சூட்டிக் கொண்டு விட்டு வேட்டைக்குப் போவதும் வீட்டில் வந்து சாப்பிட்டு விட்டுத் தூங்குவதுமாகயிருந்தால் மக்கள் எப்படி மன்னனை மதிப்பார்கள்?

இம்மூன்று பிரச்னைகளும் பூதாகாரமாக உருவெடுத்து அவனைப் பயமுறுத்தியது.

அடுத்த நாள் காலை வீரர்களை அழைத்தான்.

“எல்லாவற்றிற்கும் முன்னதாக நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதோ பாருங்கள்!

மேற்குப் புறத்தில் பெரும் விருட்சங்களோ, அடர்ந்த புதர்களோ இல்லை. மற்ற மூன்று பக்கங்களிலும் பனைகள் மற்றும் காட்டு மரங்கள் அதிமாக இருக்கிறது. இதில் தான் அபாயம் ஒளிந்திருக்கும்.

எனவே நீங்கள் திசைக்கு இருவராகச் சென்று ஊரில் இருந்து கால் காத தூரம் வரையில் உள்ள நில அமைப்பு, நீர் நிலைகள், வழித்தடங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக ஆய்வு செய்து வாருங்கள். நானும் அரசியும் ஊருக்குள் போய் சுற்றிப் பார்த்து வருகிறோம்.” என்று கூறி வீரர்களில் அறுவரைத் திசைக்கு இருவராக அனுப்பி விட்டு, மீதியிருந்த இரண்டு வீரர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு மனைவியுடன் ஊருக்குள் நுழைந்தான்.

கிழக்கு மேற்காக அமைந்த வீதி, இருமருங்கிலும் சின்னஞ் சிறு மண்வீடுகள். ஓலைக் கூரை. வாசலுக்கு வெளிப்புறம் திண்ணை.

முகப்பில் சாணம் தெளித்துக் கோலம் போட்டிருந்தது. மொத்தம் ஐந்து தெருக்கள்.

பெரியவர்கள் அனைவரும் வெளியில் வேலைக்குச் சென்று விட்டபடியால் தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்நதன.

திடீரென எங்கிருந்தோ சோனி வந்து கொண்டிருந்தான். கிட்ட வந்ததும் தலைக்கு மேல் கைகளைக் கூப்பி வணங்கினான்.

விஜயன் அவனை அருகில் அழைத்து, இந்த இடத்தில் உள்ள மண் வேறு,  நீங்கள் வீடு கட்டியிருக்கும் மண் வேறாக இருக்கிறதே! இது எங்கு கிடைக்கிறது?’ என்று கேட்டான்.

இளவரசனுடன் இரண்டாம் முறையாக நேருக்கு நேர் நின்று பேசும் வாய்ப்புக் கிடைத்ததில் சோனிக்கு உள்ளளூர மகிழ்ச்சி பொங்கியது.

“இது ஒரே எடத்தில கெடைக்கிறதில்லீங்க. மூணு எடத்திலெ மூணு மாதிரியான மண் எடுத்து ஒண்ணாச் சேத்துக் கொழச்சுக் கட்டுறதுங்க” என்று வினயமாகக் கூறினான்.

இந்த மண் எங்கே கிடைக்கிறது, எப்படி எந்த விதத்தில் கலப்பது என்பதோடு, இந்தக் கலவை மண் யாரால் கண்டு பிடிக்கப்பட்டது என்பதையும் கூறினான்.

விஜயன் பிரமித்துப் போனான். சசிவர்ணத்தேவருக்கு மானசீகமாக அஞ்சலி செய்தான்.

அவன் மூளையைக் குடைந்து கொண்டிருந்த முதல் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்து விட்டது. ஊரின் மற்றப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்து விட்டு உறுதியான முடிவோடு தான் தங்கயிருந்த கூடாரத்திற்குத் திரும்பினான்.

வீரர்கள் அறுவரும் திரும்பி வந்து விவரம் கூறினார்கள்.

அடுத்த நாளே வேலையைத் துவக்கினான். ஊருக்கு மேற்கே சற்று இடைவெளியிட்டு சமதரையாக சுமார் மூன்று ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

புற்றுமண், கரம்பை பருமணல் ஆட்சுமையாகவும் பொதி மாடுகள் மூலமாகவும் மலை போல் கொண்டு வந்து குவிக்கப்பட்டது.

கருவேலம் பட்டை, கருப்பட்டிப் பாகு, அடப்பஞ்சாறு என்று இயற்கைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட கலவை மண்ணால் கனமான சுற்றுச் சுவர் இரண்டு ஆள் உயரத்தில் எழுப்பப்பட்டது.         

ஆசிரியர்: சி. அ. அ. முஹம்மது அபுதாஹிர்                                                                                                        

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்