Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,254 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பே தீர்வு

பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் மாணவர் குழு ஒன்றை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சிப் பணியை ஒப்படைத்திருந்தார். ”பின் தங்கிய குடிசைப் பகுதி ஒன்றிற்குச் செல்லுங்கள். 12 வயது முதல் 16 வயது வரை உள்ள 200 சிறுவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரியுங்கள். பின் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உங்கள் அனுமானத்தைச் சொல்லுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். 

அந்த மாணவர்கள் குழு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள குடிசைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றது. அந்த மாணவர்கள் அங்குள்ள 12 முதல் 16 வயதுடைய ஒவ்வொரு இளம் வயதினரிடமும் நீண்ட நேரம் பேசினார்கள், கேள்விகள் கேட்டார்கள். தாங்கள் பேச்சின் மூலம் அறிந்து கொண்டதையும், பேசாமலேயே கவனித்து அறிந்து கொண்டதையும் வைத்து அந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “இந்த சிறுவர்களில் 90 சதவீதம் பேர் எதிர்காலத்தில் சிறிது சமயமாவது சிறைச்சாலையில் கழிப்பார்கள்”. 

அந்த முடிவுக்கு அவர்கள் வரக் காரணமாக இருந்தது அந்த சிறுவர்களின் மனப் போக்கில் அவர்கள் சில தீய பண்புகள், தீய ஆர்வங்கள், சமூகப் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றைக் கண்டது தான்.

அந்த மாணவர் குழு சமர்ப்பித்த தகவல்களையும், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அவர்கள் வந்த முடிவையும் பத்திரமாகப் பாதுகாத்த அந்த பேராசிரியர் பல வருடங்கள் கழித்து அந்த குடிசைப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பெரியவர்களாக ஆன பின்னர் மீண்டும் வேறொரு மாணவர் குழுவை அதே பகுதிக்கு அனுப்பினார். “இந்த 200 பேரும் தற்போது எப்படி இருக்கிறார்கள், அதில் எத்தனை பேர் முந்தைய குழு எண்ணியது போல் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள் என்ப்பதை அறிந்து வாருங்கள்”

அந்த வேலை இரண்டாவதாகப் போன குழுவிற்கு சுலபமானதாக இருக்கவில்லை. அந்த 200 பேரில் சிலர் இடம் பெயர்ந்திருந்தார்கள். சிலர் இறந்திருந்தார்கள். இடம் பெயர்ந்தவர்களில் சிலரது தற்போதைய விலாசம் கிடைக்கவில்லை. ஆனாலும் இரண்டாவது மாணவர் குழுவின் விடாமுயற்சியால் 200 பேரில் 180 பேரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிறைக்குச் சென்றிருந்தார்கள்.

பேராசிரியருக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் குழுவிற்கும் அந்தத் தகவல் பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. முதல் குழுவின் கருத்து எந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுந்ததோ அந்தத் தகவல்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தனர். அன்றைய அனுமானம் இன்றைக்கும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. குற்றம் புரியத் தேவையான மனநிலைகளிலும், சூழ்நிலைகளிலும் தான் அன்று அந்த சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியானால் இப்படி இந்த 176 பேரும் சிறைக்குச் செல்லாமல் இருக்கக் காரணம் என்ன என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

மீண்டும் சென்று சிறைக்குச் செல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த 176 நபர்களிடமும் அவர்கள் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் போகவிருந்த அழிவுப்பாதையில் இருந்து அவர்களைக் காத்தது என்ன என்ற கேள்வியைப் பிரதானமாக வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு பதிலையே சொன்னார்கள். “எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியை வந்தார்….”

உடனே பெரும்பாலானோர் சொன்ன அந்த ஆசிரியையைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்றனர். இத்தனை பேர் வாழ்க்கையை மாற்றி அமைத்த அந்த ஆசிரியை எந்த வழிமுறையைப் பின்பற்றினார் என்பதை அறிய அவர்களுக்கு ஆவலாக இருந்தது.

அந்த ஆசிரியை தற்போது ஆசிரியைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரிடம் அவர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்டார்கள். ”உங்களுடைய அந்தப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் உங்களை இன்றும் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் காரணம் என்ன?” “அவர்கள் உங்களுடைய தாக்கத்தால் நிறையவே மாறி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கல்வி புகட்டிய முறை என்ன?”

அந்த முதிய ஆசிரியைக்கு குறிப்பிடும்படியாக எதையும் சொல்லத் தெரியவில்லை. ஒரு நீண்ட பதிலை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஒரே ஏமாற்றம். அந்த ஆசிரியை தன் பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கினார். வந்தவர்களுக்குச் சொல்வது போலவும், தனக்குள்ளேயே பேசிக்கொள்வது போலவும் அவர் மிகவும் கனிவுடன் சொன்னார். “அந்தக் குழந்தைகளை நான் நிறையவே நேசித்தேன்…….”

பெரிய பெரிய சித்தாந்தங்களையும், வித்தியாசமான கல்வி நுணுக்கங்களையும் எதிர்பார்த்து வந்தவர்கள் அந்த தகவலில் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

எல்லா சீர்திருத்தங்களுக்கும் அன்பே மூலாதாரம். அன்பினால் மட்டுமே முழுமையான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியம். சட்டங்களாலும், கண்டிப்புகளாலும், தண்டனைகளாலும் எந்த மிகப்பெரிய மாற்றத்தையும் உலகில் கொண்டு வரமுடிந்ததில்லை. இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

உளமார, உண்மையாக அந்த ஆசிரியை அந்த சிறுவர்களை நேசித்தார். குற்றங்கள் மலிந்த சூழலில் வளர்ந்த அந்த சிறுவர்களின் வரண்ட இதயங்களில் அந்த ஆசிரியையின் மாசற்ற அன்பு ஈரத்தை ஏற்படுத்தி நற்குணங்களை விதைத்திருக்க வேண்டும். அதை அவரே உணர்ந்திருக்கா விட்டாலும் அந்த அற்புதம் அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையினை நல்ல பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறது. இந்த நிகழ்வு சிந்தனைக்குரியது.

இது வீட்டிலும், ஊரிலும், சமூகத்திலும், நாட்டிலும் அனைவராலும் உணரப்பட வேண்டிய ஒன்று. குறை கூறுவதிலும், விமரிசனம் செய்வதிலும் பெருமை இல்லை. சட்டங்களைக் கடுமையாக்குவதிலும், கண்டிப்பை அமலாக்குவதிலும் வலிமை இல்லை. அன்போடு அணுகுவதிலேயே பெருமையும் வலிமையும் இருக்கின்றது.

மாற்றம் எங்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் அங்கு அன்பு செலுத்துவதில் இருந்து ஆரம்பியுங்கள். அந்த அன்பு சுயநலம் இல்லாததாக இருக்கும் பட்சத்தில், அந்த அன்பு குறுகியதாக இல்லாத பட்சத்தில் அற்புதங்கள் நிகழ்த்த வல்லது. சமூகத்தில் இன்று புரையோடிருக்கும் சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை, தீவிரவாதம், சகிப்பற்ற தன்மை, அநீதி முதலான அத்தனை நோய்களுக்கும் அன்பே மருந்து. இந்த பிரச்னைகளுக்கு அன்பே தீர்வு.

நன்றி: என்.கணேசன் – ஈழநேசன்