Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,226 முறை படிக்கப்பட்டுள்ளது!

அண்டைவீட்டாரின் உரிமைகள்

பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேண வேண்டிய பண்புகள்

ஓர் இறை நம்பிக்கையாளர் தனது அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அண்டை வீட்டாருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் என்ன என்பதையும் பார்ப்போம்.

தொல்லை தருதல்

வீட்டில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தித் தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 5187

அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி) – நூல்: புகாரீ 6016

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.

“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) – நூல்: முஸ்லிம் 73

நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாகக் கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்’ என்றார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) – நூல்: அஹ்மத் 9298

“ஒரு அடியானின் உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது. யாருடைய அண்டை வீட்டார் அவனின் நாச வேலையிலிருந்து பாதுகாப்பு பெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது” என்று நபிகளார் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் (ரலி) – நூல்: அஹ்மத் 12575

மாபெரும் குற்றம்

அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அவரது நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வது அவசியமாகும். பக்கத்து வீட்டில் இருக்கிறார்; அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும் போது அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் வெளியூர் சென்று விட்டார்; எனவே நாம் அங்கு சென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். அதற்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லி விட்டு “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். “பிறகு எது?” என்று நான் கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.  அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) – நூல்: புகாரீ 4477

பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம்; நம்பியவர்களுக்குத் துரோகம் செய்தல் இன்னொரு குற்றம்; இந்த இரண்டும் சேர்ந்து பெரும் பாவமாக மாறி விடுகிறது.

“நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்த ஒன்றாகும். இது மறுமை நாள் வரை ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஒருவன் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள். “திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) – நூல்: அஹ்மத் 22734

அதாவது ஒருவர் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வது, மற்ற பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.

ஒருவர் பக்கத்து வீட்டில் திருடுவது, மற்ற பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.

மறுமையில் முறையிடுதல்

அண்டை வீட்டாருக்கு நலம் நாடாமல் தான் மட்டும் நன்றாக இருந்தவனுக்கு எதிராக அவனது அண்டை வீட்டான் அல்லாஹ்விடம் முறையிட்டு நீதி கேட்பான்.

தன் அண்டை வீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம், “என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான்; நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான்” என்று மறுமை நாளில் கூறுவார்கள்.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) – நூல்: அதபுல் முஃப்ரத் 111

நன்மையான காரியங்களில் கூட்டாகுதல் மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டை வீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் சபைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டை வீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்ல வேண்டும். நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரியங்களில் கூட்டாகச் செயல்பட்டுள்ளனர்.

நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். அறிவிப்பவர்: உமர் (ரலி) – நூல்: புகாரீ 89

திருக்குர்ஆன் அறிவுரைகள், நபிகளாரின் விளக்கங்களை முறை வைத்துக் கற்று வந்த நபித்தோழர்களைப் போல் அண்டை வீட்டார்கள் சேர்ந்து போக முடியாத நேரங்களில் ஒருவர் சென்று நல்ல செய்திகளைக் கேட்டறிந்து தம் அண்டை வீட்டாருக்கும் எடுத்துச் சொல்லி நன்மையில் கூட்டாக வேண்டும்.

அல்லாஹ்விடம் சிறந்தவர்

“நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) –  நூல்: திர்மிதீ 1867)

நல்ல அண்டை வீட்டார்

“நல்ல அண்டை வீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பது ஆகியவை ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்: அஹ்மத் 14830

தொல்லையைப் பொறுத்துக் கொள்ளுதல்

அண்டை வீட்டார் என்று வரும் போது சில பிரச்சனைகள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, வாழ்நாள் பகைவர்களாக மாறி விடாதீர்கள்.
அவர்கள் தரும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அவருக்குச் சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.

ஒரு மனிதனுக்குத் தொல்லை தரும் அண்டை வீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்குப் போதுமானவனாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)

நன்றி: அபூ ஹாரிஸ்  – http://hakkem.blogspot.com/