உருளைக்கிழங்கு அல்வா
தேவையானவை: தோல் சீவி பெரிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றரை கப், நெய், பால் – அரை கப், ஜவ்வரிசி பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், மில்க் மெய்டு – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், கேசரி கலர் பவுடர் – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசி பவுடரை பாலில் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் நெய் ஊற்றி, அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்க்கவும். லேசாக வதங்கியதும், பாலில் கரைத்து வைத்துள்ள ஜவ்வரிசி பவுடரை சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு தீயைக் குறைத்து சர்க்கரை, கேசரி கலர் பவுடரை சேர்க்கவும். உருளைக்கிழங்கை பச்சை வாசனை போகும்வரை கிளறி, மில்க் மெய்டு சேர்த்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாதாம், முந்திரிப் பருப்புத் துண்டுகளால் அலங்கரிக்கவும்.
தேவையானவை: வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு 2 கப், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தனியாவுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். இந்த விழுதை உருளைக்கிழங்குடன் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தளித்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும். தீயைக் குறைத்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
நல்ல வாசனையாக இருக்கும் இந்த காரப் பொரியல்.
தேவையானவை: வேக வைத்து, தோலுரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், தக்காளிச் சாறு – கால் கப், கசகசா (வெந்நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்), முந்திரி துண்டுகள் – தலா 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பச்சைப் பட்டாணி, புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, மஞ்சள்தூள், தனியாத்தூள், கடுகு, சீரகம், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், ஃபிரெஷ் கிரீம் – கால் கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்-காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும். இதனுடன், கசகசா, முந்திரி, பச்சை மிளகாய், புதினா, இஞ்சி சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள-வும். கடாயில் எண்ணெய் விட்டு, வேக வைத்த உருளைத் துண்டுகளை லேசாக பொரித்து தனியே வைத்துக் கொள்ளவும். அதே எண்ணெயிலேயே கடுகு, சீரகம் தாளித்து, அரைத்த மசாலா விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பட்டாணி, தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு தக்காளிச் சாறை விட்டு வறுத்த உருளைத் துண்டுகளையும் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் கடைசியாக ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ஃப்ரை
தேவையானவை: கெட்டியான பெரிய உருளைக்கிழங்கு — 2, எண்ணெய், உப்பு -தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி பத்து நிமிடம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக விடவும். கால் பதத்தில் வெந்ததும் இறக்கி ஆற வைத்து, நீள துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உப்பை மேலாக தூவி சூடாக பரிமாறவும்.
மொறுமொறுப்பாக இருக்கும். விருப்பப்பட்டால் மிளகுத்தூள் சேர்க்கலாம்.
தேவையானவை: வேக வைத்து நன்றாக மசித்த உருளைக்கிழங்கு, சர்க்கரை – தலா கால் கப், திக்கான பால் – ஒரு கப், மில்க்மெய்டு அல்லது கோவா – அரை கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, பாதாம், முந்திரி – சிறிதளவு.
செய்முறை: பாதாம், முந்திரியைக் கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, அதில் மசித்த உருளைக்கிழங்கைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதங்கியதும், சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த பாதாம், முந்திரி விழுதை சேர்த்து மில்க்மெய்டு அல்லது கோவா சேர்த்து, பாயசம் பதத்தில் வந்ததும் குங்குமப்பூ தூவி இறக்கவும்.
வித்தியாசமான டேஸ்ட்டில் அசத்தலாக இருக்கும் இந்த பாயசம்.
தேவையானவை: வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு துண்டுகள், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், மிளகாய்த்தூள், உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கீறிய பச்சை மிளகாய் – 2.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்க்கவும். இதில், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாகக் கிளறி, வதங்கியதும் இறக்கவும்.
தேவையானவை: தோல் சீவிய உருளைக்கிழங்கு – 3, எலுமிச்சம்பழம் – 1, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கைப் போட்டு, கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு பத்து நிமிடம் வைத்திருக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, தண்ணீர் விட்டு, வளைவு போன்று இருக்கும் சிப்ஸ் கட்டையால் உருளைக்கிழங்கை சீவி போடவும். பத்து நிமிடம் கழித்து எடுத்து நன்றாக அலசி ஒரு காட்டன் துணியில் பரப்பி சற்று காய்ந்ததும் எண்ணெயில் பொரித்தெடுத்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சிறிய உருளைக்கிழங்கு – ஒரு கப், நறுக்கிய பஜ்ஜி மிளகாய் – கால் கப், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, சர்க்கரை – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, பஜ்ஜி மிளகாயைப் போட்டு வதக்கவும். லேசாக வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள் போட்டு குறைந்த தீயில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதில் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து, நன்றாகக் கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
தேவையானவை: பிரியாணி அரிசி, உருளைக்கிழங்கு துண்டுகள், தேங்காய்ப்பால் – தலா ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் – 3, ஏலக்காய், கிராம்பு – தலா 2, பட்டை, பிரிஞ்சி இலை – தலா ஒரு துண்டு, இஞ்சி – ஒரு துண்டு, புதினா – சிறிதளவு, முந்திரி – 5, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பிரியாணி அரிசியை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து பத்து நிமிடம் வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டையைப் போட்டு வறுத்து, பிரிஞ்சி இலை, உருளைக்கிழங்கை சேர்க்கவும். வதங்கியதும் கீறிய பச்சைமிளகாய், நறுக்-கிய இஞ்சி, தேங்காய்ப்பால், உப்பு சேர்க்கவும்.
கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரி துண்டுகளைப் போட்டு வறுத்து, தனியாக வைக்கவும். ஊறிய அரிசியைப் போட்டு லேசாக வறுத்து, குக்கரில் இருக்கும் உருளைக்கிழங்கு கலவையில் கொட்டிக் கலக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அணைக்கவும்.
மேலாக புதினா, வறுத்து வைத்துள்ள முந்திரித் துண்டுகளைப் போட்டு அலங்கரிக்கவும் (ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவேண்டும். இங்கு தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்துள்ளோம். தேவையெனில் மேலும் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.)
தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா மாவு – ஒரு கப், சோள மாவு – கால் கப், ரவை – 2 டீஸ்பூன், உப்பு, நெய் – 3 டீஸ்பூன்.
பூரணத்துக்கு: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், துருவிய பனீர் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி, துருவிய சீஸ் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றைக் கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். (கெட்டியாக இருந்தால்தான் ரோல் மொறுமொறுப்பாக இருக்கும்).
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தாளை வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், துருவிய சீஸ், பொடியாக அரிந்த கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும். (சீஸிலேயே உப்பு இருப்பதால் உப்பு அதிகம் சேர்க்க வேண்டாம்). பூரணம் ரெடி!
பிசைந்து வைத்துள்ள மைதா கலவையில் சிறிது எடுத்து நீளவாக்கில் உருட்டி தேய்த்து அதில் உருளை கலவையை வைத்து இரு முனைகளையும் தண்ணீர் தொட்டு லேசாக ஒட்டிவிடவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி – சிறிதளவு, துருவிய கேரட் – கால் கப், கடுகு – கால் டீஸ்பூன்,
மேல்மாவுக்கு: கடலைமாவு – அரை கப், அரிசி மாவு – கால் கப், சோள மாவு – ஒரு டீஸ்பூன், பிளெய்ன் நூடுல்ஸ் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கேரட் துருவல், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வதக்கி, மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கி இறக்கி, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
எண்ணெய் நீங்கலாக மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் விட்டுக் கலந்து கொள்ளவும். உருட்டிய உருளைக்கிழங்கு கலவையை, கடலை மாவு கலவையில் புரட்டி (மேலே நூடுல்ஸ் சுற்றிக் கொள்ளும்படி செய்து) எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பார்க்க அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும் இந்த போண்டா.
தேவையானவை: தோல் சீவி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு – அரை கப், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு சேர்ந்தது – கால் கப், பச்சை மிளகாய் – 3, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா கால் கப், கொத்தமல்லி – சிறிதளவு, சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி, உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, சாம்பார் பொடி சேர்க்கவும். இதில் ஒரு கப் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதித்ததும் பருப்புகளை சேர்க்கவும். குக்கரை மூடி 2, 3 விசில் வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
சப்பாத்தி, பூரி, சாதத்துக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், கெட்டித் தயிர் – கால் கப், கரகரப்பாக அரைத்த காய்ந்த மிளகாய் – அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து நைஸாக, கெட்டிப் பதத்தில் அரைக்கவும். இதனுடன் தயிர், மசித்த உருளைக்கிழங்கு, பொடித்த மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயில் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளித்து, கலந்து வைத்துள்ள கலவையில் கொட்டி, பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.
தேவையானவை: கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், நெய், எள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: மசித்த உருளைக்கிழங்குடன் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், நெய், எள் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும். இதை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சிறிது தளர்வாக இருந்தால் மேலும் அரிசி மாவு கலந்து கொள்ளலாம்.
தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, கோதுமை மாவு – ஒரு கப், நெய் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லியுடன் உப்பு சேர்த்து அரைத்து, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். இதில் கோதுமை மாவு, நெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய புதினா – தலா கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள் – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு, புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். இதில் வதக்கிய புதினா, வெங்காயத்தை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை: தோல் சீவி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, உளுத்தம்பருப்பு – தலா கால் கப், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் உருளைக்கிழங்கை வதக்கி, ஆற வைக்கவும். வறுத்த வைத்துள்ளவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்து, கடைசியாக உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். முதலில் கெட்டியாக எல்லாம் சேர்ந்தாற் போல் இருக்கும். சிறிது நேரத்தில் உதிர் உதிராகிவிடும்.
தேவையானவை: மேல் மாவுக்கு: நெய் – ஒரு டீஸ்பூன், மைதா மாவு – ஒரு கப், ரவை – 2 டீஸ்பூன், சோள மாவு – கால் கப், உப்பு – தேவையான அளவு.
பூரணத்துக்கு: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பீன்ஸ், பட்டாணி, கேரட், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் எல்லாம் சேர்ந்தது – ஒரு கப், வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பிறகு காய்கறிகளைப் போட்டு வதக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.
மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து சிறிய சப்பாத்திகளாக இட்டு பாதியாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாதியின் நடுவில் மசாலா கலவையை வைத்து கோன் போல் மடிக்கவும். ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதே போல் எல்லாவற்றையும் செய்து கொண்டு பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சட்னி, சாஸுடன் பரிமாறவும்.
தேவையானவை: ஜாமூன் செய்ய: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – கால் கப், மைதா மாவு – முக்கால் கப், சர்க்கரை சேர்க்காத கோவா – ஒரு டேபிள்ஸ்பூன்.
ஜீரா செய்ய: சர்க்கரை – 2 கப், தண்ணீர் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.
பொரித்தெடுக்க: நெய் (அ) எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில் மசித்த உருளைக்கிழங்கு, கோவா, மைதா மாவு மூன்றையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
எண்ணெய் (அ) நெய்யை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் ஜாமூன்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து 2 கம்பி பாகு பதத்தில் காய்ச்சி ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்த ஜாமூன்களை போட்டு ஊற விட்டு பரிமாறவும்.
(பிசைந்த மாவு சற்று தளர்ந்து இருந்தால் சிறிது மைதா சேர்த்துக் கொள்ளலாம்).
தேவையானவை: நடுத்தர அளவில் உருளைக்கிழங்கு – 4, பச்சைப் பட்டாணி – சிறிதளவு, மைதா மாவு – கால் கப், சோள மாவு – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கட்டு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், சேமியா – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து, தோலுடன் முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும், தோலை உரித்துக் கொள்ளவும்.
மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு ‘திக்’காக கரைத்துக் கொள்ளவும். பட்டாணியில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து, கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை எடுத்து ஸ்பூனால் பள்ளம் போல் செய்து மைதா கலவையில் முக்கி எடுத்து, சேமியாவில் புரட்டி உருளைக்கிழங்கு முழுவதும் பரவும்படி செய்து எண்ணெயில் பொரிதெடுக்கவும். உருளைக்கிழங்கில் உள்ள பள்ளங்களில் வதக்கிய பட்டாணியை வைத்து, டிரேயில் கொத்தமல்லியை பரப்பி வைத்து, பறவைக்கூடு போல் பரிமாறவும்.
தேவையானவை: மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப், பிரெட் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா கால் கப், இஞ்சி – பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி – பச்சை மிளகாய் அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், பீட்ரூட் துருவல் – கால் கப், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், முந்திரி துண்டுகள் – சிறிதளவு, கடலை மாவு – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி-பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதில் வெங்காயம், பீட்ரூட் துருவல், அரைத்த கொத்தமல்லி – பச்சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு, மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
கடலைமாவில் சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து, வதக்கிய உருளைக் கலவையில் சேர்க்கவும். கடைசியாக பிரெட் தூள், முந்திரி துண்டுகள் சேர்த்து இறக்கவும். இதை விரும்பிய வடிவத்தில் செய்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைகிழங்கு – ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
மேல்மாவுக்கு: மைதா – ஒரு கப், சோள மாவு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தனியா, மிளகாய், கடலைப்பருப்பைப் போட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொடித்த பொடியைப் போட்டு இறக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பிசைந்த மைதா மாவை, பூரி போல் இட்டு, நடுவில் உருளைக்கிழங்கு கலவை உருண்டையை வைத்து மூடி போளிகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
தேவையானவை: கடலைப்பருப்பு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, துருவிய உருளைக்கிழங்கு – கால் கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடலைப் பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், துருவிய உருளைக்கிழங்கை சேர்த்துக் கலந்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்- கவும்.
தேவையானவை: உருளைக்கிழங்கு – ஒரு கிலோ, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – 2, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கு நன்றாக அலசி, தோல் சீவி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை பிழியவும் (எலுமிச்சைச் சாறு சேர்ப்பதால் உருளைக்-கிழங்கின் கலர் மாறாமல் இருக்கும்). பிறகு, உருளைக்கிழங்கை எடுத்து குச்சி குச்சியாக நறுக்கி தண்ணீரில் போடவும். இந்தத் தண்ணீரில் இன்னொரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும். பத்து நிமிடம் கழித்து நன்றாக அலசி, தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் உப்பு, எண்ணெய் விட்டு, நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு அடுப்பை அணைத்து பத்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து தண்ணீரை வடித்து வெயிலில் காய வைக்கவும்.
தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். இது மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும்.
தேவையானவை: நன்றாகக் கழுவி தோலுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு — அரை கப், கொண்டைக்கடலை – கால் கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய், தேங்காய் துருவல் – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து புளிக் கரைசலை விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டக்கடலை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் அரைத்த மசாலாவைப் போட்டு, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும்.
தேவையானவை: பெரிய சதுரமாக வெட்டிய பனீர் துண்டுகள், வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு துண்டுகள் – தலா 5, தயிர் – ஒரு கப், பால் – ஒரு டேபிள்ஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் – 3, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பனீர் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கையும் அதேபோல் பொரித்தெடுக்கவும்.
கடாயில் பாலுடன் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். இதில் தயிர், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். பனீர் துண்டுகளையும், உருளைக்கிழங்கு துண்டுகளையும் ஒரு டிரேயில் வரிசையாக அடுக்கி அதன்மேல் கொதிக்க வைத்த தயிர்-பால் கலவையை விடவும். விருப்பப்பட்டால் சிறிது சீஸை துருவி சேர்க்கலாம். மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை: பெரிய சைஸ் உருளைக்கிழங்கு – 2, புதினா – கால் கப், பச்சை மிளகாய் – 3, எலுமிச்சைச் சாறு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: புதினாவுடன் பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நைஸாக அரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு, அரைத்து வைத்துள்ள புதினா கலவையை உருளைக்கிழங்கு துண்டுகளின் மேல் தடவவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.
தேவையானவை: உப்பு சேர்த்து வேக வைத்து துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கு – கால் கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி, மாங்காய் சேர்ந்த கலவை – ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் (விருப்பப்பட்டால்) – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்குடன் நறுக்கிய காய்கறிகள், மிளகுத்தூள், ஆலிவ் எண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். மாங்காய்க்கு பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
மிகவும் சத்தான சாலட் இது.
தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, எலுமிச்சம்பழம் – 1, மிளகுத்தூள் – சிறிதளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், காய்ந்த திராட்சை சேர்ந்த கலவை – ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: ட்ரை ஃப்ரூட்ஸை கடாயில் மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துளையுள்ள கேரட் துருவலில் துருவி, எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீரில் போடவும். பிறகு நன்றாக அலசி, வெள்ளைத் துணியில் காய வைக்கவும். ஈரப்பதம் போனதும் எண்ணெயில் வறுத்து, சிறிது உப்பு, மிளகுத்தூள் தூவி, டிரைஃப்ரூட் கலவை சேர்த்து, சாப்பிடக் கொடுக்கவும்.
நன்றி: பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்