Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,292 முறை படிக்கப்பட்டுள்ளது!

வறியவன் (பஞ்சை பராரி) என்பவன் யார்?

வறியவன் (பஞ்சை பராரி) என்பவன் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். மக்கள் கூறினர்: எவரிடம் திர்ஹமோ, வேறு எந்த பொருளோ இல்லையோ அவரே எங்களில் வறியவர் ஆவர் என்று கூறினர். நபி அவர்கள் பதிலளித்தார்கள். ஒருவன் மறுமை நாளில் தொழுகையுடனும், நோன்புடனும், ஜகாத்துடனும் அல்லஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர்மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான்; எவரேனும் ஒருவரின் செல்வத்தைப் பறித்துப் தின்றிருப்பான்; எவரையேனும் கொன்றிருப்பான்; எவரையேனும் நியாமின்றி அடித்திருப்பான். எனவே அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்படும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்கு உள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டு விடும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் வறியவன் ஆவார். அறிவிப்பவர்: அபூ†ுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.
மேலும் படியுங்கள்…

புறம் பேசுவதன் விபரீதங்கள்!

மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.

புறம் என்றால் என்ன?

புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம் பேசுவது பெரும்பாவமாகும்!

புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.

இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.

மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!

புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.

மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

இந்த அல்-குர்ஆன் வசனத்திற்கும் புறத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? ஏன் அல்லாஹ் மரணித்த சகோதரனின் இறைச்சியை புசிப்பதை புறம் பேசுவதோடு ஒப்பிடவேண்டும்?

ஒரு மனிதன் பிறிதொருவனைப் பற்றி அவன் அங்கில்லாத போது குறை கூறுகின்றபோது குறை கூறப்படுகின்ற மனிதனால் நிச்சயமாக அதைத் தடுக்க இயலாது. இதே போன்று தான் மரணித்த ஒருவரின் மாமிசத்தை வெட்டும் போதும் மரணித்தவனால் அதனை தடுக்கமுடியாது! புறம் பேசுவதும் இதே போன்று ஒரு கொடுமையான செயல் என்பதை நாம் விளங்க முடியும். மேலும் வசனத்தின் இறுதியில் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம், பிறரின் குறைகளை கூறி புறம்பேசுவதை விட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ள வேண்டும். இவ்வாறு குறை கூறி இருந்தால் இத்தகைய பெரும்பாவத்திலிருந்து மீண்டு வந்து தவ்பா செய்ய வேண்டும் என்பதை இவ்வசனம் போதிக்கின்றது.

நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!

நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும். நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18) என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.

நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக்கொள்ள வேண்டும்.

நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

கட்டுரையாசிரியர்: மௌலவி அர்ஷத் ஸாலிஹ் – சுவனத்தென்றல்.காம்