Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,130 முறை படிக்கப்பட்டுள்ளது!

விருந்தினர்கள் – சிறுகதை

அன்றிலிருந்து 7 நாட்கள் முன்பு:

“ஏங்க, வெளிநாட்டிலேந்து என் கசின் குடும்பத்தோட லீவுலே வந்திருக்கா. நம்ம வீட்டுக்கும் அவங்களை சாப்பிட கூப்பிட்டிருக்கேன். அவங்க பெரிய்ய பணக்காரங்க. நம்மைப் பத்தி மட்டமா நினைச்சிக்கக் கூடாது. அதனால் என்ன பண்றோம்னா, நம்ம வீட்லே சில மாற்றங்களை பண்றோம். அவங்களை இம்ப்ரஸ் பண்றோம்”.

“நாம நாமா இருக்கறவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லே. எதுக்கு இந்த வெட்டி பந்தால்லாம்?”

“அதெல்லாம் கிடையாது. நான் எல்லாத்தையும் ப்ளான் பண்றேன். நீங்க வெறும் பணம் கொடுத்தா போதும். அவ வந்து போறவரைக்கும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்க பாப்போம்.”

அன்றிலிருந்து 6 நாட்கள் முன்பு:

“ஹால் நடுவிலே இருக்கிற இந்த டிவியை உள்ளே எங்கேயாவது மாத்திடலாம்.”

“ஏம்மா? டிவிக்கு என்ன ஆச்சு?”

“நாம எப்பவுமே டிவியே பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம்னு அவங்க தப்பா நம்மைப் பத்தி நினைச்சிடக் கூடாதில்லையா. அதனால்தான். டிவிக்குப் பதிலா அந்த இடத்தில் ஒரு மீன் தொட்டி வெச்சி, நிறைய மீன்களை வாங்கி விடலாம். எப்படி ஐடியா?”

“ஏம்மா. அது நிஜம்தானே. நீதான் நாள் முழுக்க உக்காந்து சீரியல் பாக்கிறியே. அது தவிர, இது என்ன அக்வேரியமா, மீன் தொட்டிய நடுவிலே வெச்சி, எல்லாரும் சுத்தி உக்காந்து வேடிக்கை பாக்க?”

“அது சரி. எப்படா என்னை திட்டலாம்னு இருங்க. மீன் தொட்டி வாங்க இன்னிக்கு போறோம்.”

அன்றிலிருந்து 5 நாட்கள் முன்பு:

“இந்த சோஃபா அங்கங்கே கிழிஞ்சி அசிங்கமா இருக்கு. இன்னிக்கே போய் புதுசா ஒரு சோஃபா வாங்கறோம். கூடவே இந்த டைனிங் டேபிளும். அவங்க வந்தா, நாம எல்லாரும் ஒரே சமயத்திலே உக்காந்து சாப்பிட வேணாமா?”

“ஏம்மா.. சோஃபாக்கு ஒரு உறை மட்டும் வாங்கிப் போட்டோம்னா போதும். அவங்க ஒரே ஒரு வேளை சாப்பிட வர்றாங்க. ரெண்டு மூணு மணி நேரங்கள் மட்டுமே இங்கே இருக்கப் போறாங்க. அதுக்கு எதுக்கு புது டைனிங் டேபிள்? எவ்ளோ செலவாகும்னு யோசிச்சி பாத்தியா?”

“செலவானா பரவாயில்லை. நாளைக்கு அவ நம்ம வீட்டைப் பத்தி மத்தவங்ககிட்டே நல்லபடியா சொல்ல வேணாமா? எனக்கு அதுதான் முக்கியம்.”

அன்றிலிருந்து 4 நாட்கள் முன்பு:

“அவ புருஷன் சைவமாம்.”

“ஏம்மா, இருக்கிற பிரச்சினை போதாதுன்னு ஜாதி, மத பிரச்சினை வேறே கொண்டு வரப்போறியா? எனக்கென்னவோ பயமாயிருக்கு.”

“ஐயோ.. அதில்லே… அவர் அசைவம் சாப்பிட மாட்டாராம். அதனால், நான் வெஜ்-பிரியாணியில் ஆரம்பிச்சி, நிறைய ஐட்டங்கள் பண்ணனும். ”

“இதோ பாரும்மா. வெளிநாட்டுலேந்து வர்றவங்க நிறையல்லாம் சாப்பிட மாட்டாங்க. டயட், டயட்ன்னு இருப்பாங்க. நீ பாட்டுக்கு எக்கச்சக்கமா சமைச்சி எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணாதே. ”

“சும்மா உளறாதீங்க. நம்ம வீட்டுக்கு வந்தவங்களுக்கு வயிறார சாப்பாடு போடவேணாமா. அதனால் விதவிதமா பண்ணித்தான் ஆகணும். நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க. நான் சாப்பாட்டு மெனுவை யோசிக்கணும்.”

அன்றிலிருந்து 3 நாட்கள் முன்பு:

“ஏங்க.. என்கிட்டே இருக்குற புடவையெல்லாமே ரொம்ப பழசாயிடுச்சு. இந்த சமயத்துலே இவங்க வேறே வர்றாங்க. அதனால் சாயங்காலம் கடைக்குப் போய் எனக்கு புதுசா ரெண்டு மூணு புடவை வாங்கறோம். நீங்களும் ஜல்லடை மாதிரி பனியன் போட்டுட்டு அவங்க முன்னாடி உக்காராதீங்க. புதுசா பனியன் சட்டை வாங்கிக்குங்க.”

அன்றிலிருந்து 2 நாட்கள் முன்பு:

“இதோ பாருங்க. அவங்க எதிரே உம்மணாமூஞ்சி மாதிரி உக்காந்திருக்காதீங்க. ஏதாவது ஜோக்கு புத்தகங்களை வாங்கி படிச்சி, நாலைஞ்சி நல்ல ஜோக்குகளை தெரிஞ்சி வெச்சிக்கிட்டு, அப்பப்ப எடுத்து விடுங்க.”

அன்று:

“ஹலோ… ஹேய் எப்படிம்மா இருக்கே.. சரி சரி…. எப்போ வர்றீங்க… உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம். என்ன? அப்படியா? ஓ… சரி சரி… நோ ப்ராப்ளம்… ஆனா, அடுத்த தடவை ஊருக்கு வரும்போது முதல்லே எங்க வீட்டுக்குத்தான் வரணும்”.

அன்றிலிருந்து 10 நாட்கள் கழித்து:

சொல்லச் சொல்ல கேட்காமே, ஏகப்பட்ட செலவுகள் பண்ணி, சமையலும் பண்ணி – கடைசியில் அன்னிக்கு அவ சொந்தக்காரங்க வீட்டுக்கு வரவேயில்லை.

இவளோட வெட்டி பந்தாவாலே இப்ப பத்து நாளா நான் பழைய்ய்ய்ய்ய சாதத்தை சாப்பிடுட்டு இருக்கேன். தினமும் ஆபீஸுக்கும் ஒரே புளியோதரையே எடுத்துட்டுப் போறதாலே, இப்ப எல்லாரும் என்னை – புளியோதரை சுரேஷ்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

அதனால் மக்களா – யார் வீட்டுக்காவது சாப்பிட வர்றேன்னு சொன்னீங்கன்னா, தலையே போனாலும் பரவாயில்லை, போய் மரியாதையா சாப்பிட்டு வந்துடுங்க. இல்லேன்னா, அந்த வீட்டுலே எப்படி கஷ்டப்படுவாங்கன்னு என்னைப் பாத்து தெரிஞ்சிக்கோங்க…

ஐயயோ.. இவ வர்ற சத்தம் கேக்குது. அதுக்குள்ளே இந்த டைரியை மறைச்சி வெச்….

நன்றி:  சின்னப் பையன் பார்வையில்