Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2015
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,609 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்!

1கணேஷும் ராஜனும் கல்லூரி காலத்தில் நெருங்கிய நண்பர்கள். ஆனால், படித்து முடித்தபிறகு இருவரும் இருவேறு பாதையில் சென்றுவிட்டார்கள். தினப்படி வேலைகளில் இருவருமே பிஸியாக இருக்க, பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மீண்டும் இருவரும் இணைய, சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தார்கள். கணேஷ் தன்னுடைய பைக்கில் போய் ஹோட்டலில் இறங்கினான். ராஜன் தன்னுடைய புதிய காரில் ஹோட்டலுக்கு வந்தான். கார் மட்டுமல்ல, அவன் வாங்கியிருந்த வீடு, அவன் அணிந்திருந்த ஆடை, சேர்த்திருந்த சொத்து என எல்லாமே கணேஷைவிட மிக மிக அதிக மதிப்புடையவையாக இருந்தது. இத்தனைக்கும் படிப்பு விஷயத்தில் கணேஷைவிட ராஜன் பெரிய புத்திசாலியல்ல. பிறகு எப்படி ராஜன் இந்த அளவுக்கு முன்னேறினான்?

அடுத்தடுத்த சந்திப்பில் ராஜனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டான் கணேஷ். ‘‘பெரிய அற்புதம் எதையும் நான் செய்துவிடவில்லை. நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது தான். நம் எல்லோருக்கும் ஒருநாளில்  கிடைக்கும் 24 மணி நேரமானது பொன் போன்றது. அதைக் கண்ணும் கருத்துமாக நிர்வகித்து, ஒரு மணித் துளியைக்கூட வீணாக்காமல், நமது வேலைகளைத் திறனோடு முடித்தால், நம் வாழ்க்கையில் நாம் வெற்றியடைவது நிச்சயம். வெற்றியாளர்களால் செய்ய முடிந்த விஷயத்தை; இன்னொருவரால் செய்ய முடிவதில்லை என்றால், அதற்கு மிக முக்கிய மூலகாரணம் வெற்றியாளர் களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரிந்திருப்பதே’’ என்று சொன்னான்.

p66aவீடு திரும்பும் வழியில் ராஜன் சொன்னதை நினைத்துப் பார்த்தான் கணேஷ். கல்லூரிப் படிப்பு  முடிந்ததும், நல்ல வேலையில் இருந்தாலும், அந்த வேலையை நன்றாகச் செய்து, உயர்பதவி களை அடைய வேண்டும் என்கிற லட்சியம் எதுவும் இல்லாமல், காதல், சினிமா, பீச் எனப் பலநாட்கள் அலைந்தது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான் கணேஷ். இந்த கணேஷைப்போல, நீங்களும் நேரத்தின் அருமையை உணர்ந்து வெற்றியுடன் செயல்பட 10 எளிமை யான டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக…

1 உங்களுடைய பொன்னான நேரம் எங்கு வீணாகச் செலவாகிறது என்பதைக் கண்டறிய உங்களின் ஒருவார கால நடவடிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்து ஆராயுங்கள். உதாரணத்துக்கு, தேவையில்லாமல் நீங்கள் பேசும் செல்போன் உரையாடல் கள், டிவி பார்ப்பதில் நேரம் கழித்தல், இணையத்தில் மிகுந்த நேரத்தைச் செலவிடுதல் ஆகியவைகளைக் கண்ட றிந்து அவைகளைத் தவிர்க்க முயற்சி எடுங்கள்.

2 வெற்றிக்கு முக்கியமான ஒவ்வொரு நடவடிக்கையும் உரையாடலும் சரியான கால அளவைப் பின்பற்றி இருப்பது மிக அவசியம். உங்கள் மிக முக்கியமான வேலைகளைத் தொடங்கும் நேரத்தையும்; முடியும் நேரத்தையும் அளவிட்டு, அதைக் கச்சிதமாக அமைத்துக்கொள்வது அவசியம். இதை மற்றவர்கள் விமர்சித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுத்தினால், எந்த வேலையிலும் தோல்வி என்பது இருக்கவே இருக்காது.

3 உங்களை வாழ்க்கையில் முன்னேற்றும் எண்ணங்கள், நடவடிக்கைகள் மற்றும் உரையாடல் களுக்கு உங்களது 50 சதவிகித நேரத்தையாவது செலவிடுங்கள். தேவையற்ற வேலைகளில் கவனம் சிதறாமல் இருத்தல் மிகவும் நல்லது.

4 தினமும் அலுவலகத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்து உங்களது அன்றைய பணிகளை முழுமையாகப் பட்டியலிடுங்கள். இதை ஒரு முக்கியமான முதல் பணியாக உங்களின் ஒவ்வொருநாள் தொடக்கத்திலும் மேற்கொள்ளுங்கள். அன்றாடப் பணிகளைப் பட்டியலிடும் போது முக்கியமான பணிகளை முதன்மைப்படுத்துதல் அவசியம்.

5 வேலையையும் வாழ்க்கையையும் சமன்படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். தினமும் எழும் நேரம் மற்றும் தூங்கச் செல்லும் நேரம் இரண்டையும் சரியாக வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கமும், தினசரி உடற்பயிற்சியும் புத்துணர்ச்சியுடன் நாம் வேலையில் ஈடுபட இன்றியமையாததாகும்.

6 மிகவும் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்தும்போது, மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமாதிரியான சமயங்களில் ‘do not disturb’ என்று உங்கள் அறை அல்லது மேஜையின் மீது எழுதிவைத்துவிட்டு, வேலை பார்க்கலாம். அப்படி செய்யும்போது மற்றவர்கள் நீங்கள் செய்யும் வேலை யின் முக்கியத்துவத்தைச் சரியாகவே புரிந்துகொள்வார்கள்.

இதுமாதிரியான சமயங்களில் எந்தவித சமூக வலைதளங்களிலும் கவனம் சிதறாமல் இருத்தல் அவசியம். உங்களின் வேலைக்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய வலைதளங்களை உபயோகிக்கலாம். தொலைபேசி / கைப்பேசி அழைப்பு களுக்கும் மெயில்களுக்கும் தனியாக நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வேலை நேரத்தில் வரும் அழைப்புகளையோ, மெயில்களையோ மிக முக்கியமான தாக இருந்தால் மட்டுமே பதிலளியுங் கள். அவற்றுக்குப் பிற்பாடு, அதாவது நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பதில் அளித்துக்கொள்ளலாம்.

7 சிலர் காலை நேரங்களில் வேலைகளைச் சிறப்பாகச் செய்வார்கள்; இன்னும் சிலர் மாலை நேரங்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். அவரவருக்கு ஏற்றமாதிரி முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை அந்தந்த நேரங்களில் செய்யலாம். கடிகாரத்துடன் போட்டிபோட்டு வேலை செய்வது நம்பிக்கையைக் கொடுக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பத்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கும் மனதுக்கும் மிக, மிக அவசியம். ஏனென்றால், உடலும் மனதும் தொடர்ச்சியாக உழைக்க ஒத்துழைக்காது. ஆனால், இடைவேளைவிட்டு முக்கியமான வேலைக்குத் திரும்பும்போது அதை மட்டும் செய்தால், கவனம் சிதறாமலும் தடம் மாறாமலும் வேலையைச் செய்துமுடிக்கலாம்.

8 எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய முடியாமல் திணறுவதைத் தவிர்க்க வேண்டும். நேரத்தை திறம்பட நிர்வகித்து வேலைகளைச் செய்து முடிக்க, தேவையில்லாத வேலைகளைப் பக்குவமாக நிராகரிக்கவும், சரியானவர்களிடம் ஒப்படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இது உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செயல்படுத்தவும் மற்றவர்களின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு இடம் பெறவும் உதவும்.

9  நீங்கள் பட்டியலிட்டுள்ள வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்கும்போது அதை ‘டிக்’ செய்து கொள்ளுங்கள். இது உங்களின் வேலைகளைச் சிறப்பாக விரைந்து முடிக்க ஊக்குவிக்கும். அது மட்டுமல்லாமல், இது நாம் தயாரித்து வைத்திருக்கும் வேலை முதன்மை பட்டியலை மாற்றியமைக்கவும், புது வேலைகளைச் சேர்க்கவும் உதவும்.

10 உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பிலும் சரி, நீங்கள் உபயோகிக்கும் பணி மேஜையானாலும் சரி, அதில் பராமரிக்கும் கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைப்பது நீங்கள் அவைகளைத் தேடும் நேரத்தை மிச்சமாக்கும். இதனால் மற்ற வேலைகளை விரைந்து முடிக்க முடியும். நமக்குக் கிடைக்கும் காலநேரத்தின் அருமையை உணர்ந்து நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகவும் துரிதமாகவும் சரியான நேரத்தில் செய்து முடித்து எல்லோரது பாராட்டுக்களைப் பெற்று முன்னேறுவதே இன்றைய புரஃபஷனல் வாழ்க்கைக்கு அவசியம்.

முடிவுகளை உங்கள் நிறுவனத்தின் நன்மைக் காகவும் உங்களின் வேலையின் தேவைக்காவும் சரியான நேரத்தில் எடுக்கத் தெரிந்திருப்பது உங்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான சூட்சுமம். நேரத்தை நிர்வகிக்கும் திறனை கற்றுக் கொண்டால், வெற்றி நிச்சயம்.

ந.பத்மலட்சுமி – ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் எம்சிஸ் டென்னாஜிஸ்