Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,249 முறை படிக்கப்பட்டுள்ளது!

பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…?

“நிலா, நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா” என்று தினமும் நாம் கூப்பிடும் நிலா, நம் வீட்டின் தென்னை மரத்துக்கு கொஞ்சம் மேலே இருப்பதுபோல் நம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதுபூமியிலிருந்து சுமார் நான்கு லட்சத்து ஆறாயிரத்து எழுநூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நிலாவைக் காட்டிலும் இன்னும் அதிக தூரத்தில் நட்சத்திரங்கள் இருக்கிறது.

வீட்டு மாடியில் போய் உட்கார்ந்து, வானத்தைப் பார்த்தால், நட்சத்திரங்கள் கூட நம் கண்ணுக்கு மிக நன்றாகத் தெரிகிறது. “எவ்வளவோ தூரத்திலிருக்கும் நிலா மிக நன்றாகத் தெரிகிறது.ஆனால் ரோட்டில் வரும் பஸ்சின் நம்பர் சரியாக தெரியமாட்டேங்குது, நியூஸ் பேப்பரிலுள்ள சின்ன எழுத்துக்கள் சரியா தெரியமாட்டேங்குது, செல்போனிலுள்ள போன் நம்பர் சரியா தெரியமாட்டேங்குது, மருந்து பாட்டிலில் உள்ள காலாவதியாகும் தேதி சரியா தெரியமாட்டேங்குது, அரிசியில் கிடக்கும் கல் சரியா தெரியமாட்டேங்குது.

ஆனால் வயசு மட்டும் இப்பொழுதுதானே நாற்பதைத் தாண்டியிருக்கிறது. இதற்குள்ளாகவா கண் பார்வை குறைந்துவிட்டது? இப்பொழுதே நான் கண்ணாடி போட்டால், வயசாகிவிட்டது என்று எல்லோரும் சொல்லுவார்களே” என்று நிறைய பேர் நினைப்பது உண்டு.

மேற்சொன்ன பிரச்சினைகள் உள்ள எல்லோருமே, கண் டாக்டரிடமும் டெஸ்ட் பண்ணிக் கொள்ளாமல், கண்ணாடியும் போட்டுக் கொள்ளாமல், நாளையும், பொழுதையும் போக்கிக கொண்டிருக்கிறார்கள். சிலபேர் படிக்கும்போதோ, செல்போனில் நம்பரைப் பார்க்கும்போதோ மிகவும் கஷ்டப்பட்டு, கண்களை சுருக்கி, போனை கண்ணுக்குக் கிட்ட கொண்டு வந்துதான் நம்பரைப் பார்ப்பார்கள்.

இப்படி கிட்ட வைத்துப் பார்த்தால் தான், இவர்களுக்கு நம்பரும் தெரியும். இந்த மாதிரி பார்ப்பவர்களெல்லாம், கண்ணாடி போடவில்லை என்பதனால், அவர்களுக்கு கண் பார்வை கரெக்டாக இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். கண்ணை நன்றாகத் திறந்து பார்ப்பதற்குப் பதிலாக, கண்ணை சுருக்கி, கிட்ட வைத்து பார்ப்பவர்கள் அனைவருக்குமே, பார்வைக் குறைபாடு இருக்கிறதென்று அர்த்தம்.

“எங்க தாத்தா, பாட்டி 80 வயதுக்கு மேலேயும் வாழ்ந்தாங்க. அவங்க யாரும் கண்ணாடி போட்டுக் கொள்ளவில்லையே” என்று உடனே நீங்கள் கேட்கலாம். அந்தக் காலத்தில் நம் தாத்தா, பாட்டி மட்டுமல்ல, எல்லோருக்குமே, பெரிசு பெரிசாக இருக்கும் பொருட்களைத்தான் அதிகமாகப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

விவசாயத்தில் இருந்தவர்களுக்கு ஆடு, மாடு, வயல், வரப்பு இவைகள் கண்களுக்குத் தெரிந்தால் போதும். கணக்கு புத்தகத்தையும், கம்ப்யூட்டரையும் பார்க்க வேண்டிய தேவை அப்பொழுது இல்லை. அதனால் அவர்களும் `எனக்கு கண் பார்வை சரியாக இல்லை’ என்று சொல்லவில்லை. ஒருவேளை அவர்களுக்கும் அந்தக் காலத்தில் கண் டெஸ்ட் பண்ணியிருந்தால், கண்டிப்பாக பார்வைக் குறைபாடு இருந்திருக்கலாம்.

ஆனால் இப்பொழுது எல்.கே.ஜி. வகுப்பிலேயே புத்தகம், டி.வி., கம்ப்யூட்டர் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எனவே, கண்ணில் குறை இருந்தால், உடனே தெரிந்து விடுகிறது. அதனால் கண் டெஸ்ட் பண்ணி, கண்ணாடியை போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சிக்கு பஸ்சில் போகும்போது, இடது பக்கத்தில் வீடு, மரம், தோப்பு, பம்ப் செட், கட்டிடம் என்று இடையில் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பச்சைப் பசேல் என்று நெல் வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நம் கண்ணிற்குத் தெரியும்.

இதை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். இந்த நெல் வயல்கள் பத்து, இருபது கிலோ மீட்டர் தூரம் பரவி இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குத்தான் நம்மால் பார்க்க முடியும். பார்வை எத்தனை கிலோ மீட்டர் வரை பாய்ந்தாலும், துல்லியமான, கூர்மையான பார்வை என்பது கொஞ்ச தூரத்துக்குத்தான் இருக்கும்.

ஐந்து அடி ஏழு அங்குலம் உயரமுள்ள ஒருவர், அல்லது ஐந்து அடி ஏழு அங்குலம் உயரத்தில் ஒருவர் நின்று கொண்டு, சமமான ஒரு பரப்பைப் பார்த்தால், அவரால் சுமார் ஐந்து கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும். சுமார் நூறு மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின் மீதோ அல்லது ஒரு கட்டிடத்தின் மீதோ நின்று கொண்டு, ஒருவர் சமமான ஒரு பரப்பைப் பார்த்தால் அவரால் சுமார் முப்பத்து ஒன்பது கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும்.

உலகின் மிக உயரமான, துபாயிலுள்ள புர்ஜ் கலீபா என்கிற கட்டிடத்தில் நின்று கொண்டு, ஒருவர் சமமான ஒரு பரப்பைப் பார்த்தால், அவரால் சுமார் 11 கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும் கண்ணிலிருந்து சுமார் முப்பதில் இருந்து, நாற்பது செ.மீ. தூரத்தில் பேப்பரையோ, புத்தகத்தையோ வைத்துப் படித்தால், அவருக்கு கண் பார்வை சரியாக இருக்கிறதென்று அர்த்தம்.  இதற்குப் பதிலாக, கண்ணுக்கு ரொம்ப கிட்ட வைத்துப் பார்த்தாலோ, அல்லது ரொம்ப தள்ளி வைத்துப் பார்த்தாலோ அவருக்கு கண் பார்வையில் குறைபாடு இருக்கிறதென்று அர்த்தம்.

மனிதனைப் போன்று, பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் துல்லியமான, கூர்மையான கண் பார்வை கண்டிப்பாக தேவை. குறிப்பாக பறவைகளுக்கு கண் பார்வை, மிக மிக நன்றாக தெளிவாக இருக்க வேண்டும். அதனால்தான், கழுகு எப்படி இருக்கும் என்று கேட்டால், “இரண்டு கண், இரண்டு இறக்கை உள்ளதுதான் கழுகு” என்று சொல்வார்கள். கழுகுக்கு கண்கள் அந்த அளவுக்கு முக்கியம். உடலை ஒப்பிடும்போது, மிகப்பெரிய கண்களை உடையவை பறவைகள்.

யானையின் உடலை ஒப்பிடும்போது, அதன் கண்கள் மிக மிகச் சிறியவை. தரையில் வாழும் முதுகெலும்புள்ள பிராணிகளில் மிகப்பெரிய கண்களை உடைய பிராணி நெருப்புக்கோழி ஆகும். இதன் கண்களின் நீளம் சுமார் 5 செ.மீ. ஆகும். நாற்பத்தி ஆறு வயது நிரம்பிய அந்தப் பெண்மணி, கண்ணாடி அணிந்திருந்தார்.

“எத்தனை வயதிலிருந்து கண்ணாடி போடுகிறீர்கள்? எதற்காகப் போடுகிறீர்கள்? கிட்டத்தில் இருக்கும் பொருள் தெரியவில்லையா? அல்லது தூரத்தில் இருக்கும் பொருள் தெரியவில்லையா?” என்று கேட்டேன். “எனக்கு பதினாறு வயது ஆகும்போது, ஸ்கூலில் பவுதீக வகுப்பில், வெர்னியர் காலிப்பர் கருவியிலுள்ள சிறிய அளவுகளை என்னால் சரியாக பார்த்து சொல்ல முடியாமல் போனது.

டீச்சர் என்னை `முதலில் கண் டாக்டரைப் போய்ப் பார்த்து, கண்ணை நல்லா டெஸ்ட் பண்ணிக்கொண்டு வா’ என்று அனுப்பி விட்டார்கள். கண் டாக்டரைப் பார்த்தேன். டெஸ்ட் பண்ணிய பிறகு, படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்டிப்பாக கண்ணாடி போட்டுத்தான் ஆகவேண்டும் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் முப்பது ஆண்டுகளாக படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்ணாடி போட்டுக்கொள்கிறேன். மற்ற நேரங்களில் கண்ணாடி உபயோகிப்பதில்லை. இரவிலும் உபயோகிப்பதில்லை” என்றார் அந்தப்பெண். “நன்றாகத்தான் சாப்பிடுகிறேன். உடம்பில் எந்த நோயும் இல்லை. ஆனால் திடீரென்று, இப்பொழுது பேப்பர் படிக்கும்போது, எழுத்துக்கள் தெளிவாக தெரியமாட்டேங்குது. கொஞ்சம் மங்கலாகவும் தெரிகிறது.

ஆனால் தூரத்திலுள்ள பொருட்களெல்லாம் கரெக்டாகத் தெரிகிறது. கண் டாக்டரைப் பார்த்து விடலாமே” என்று கண் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். `உங்களுக்கு வயது என்ன ஆகிறது’ என்று டாக்டர் கேட்டார். நாற்பது என்று சொன்னேன். ஓஹோ, நாற்பது வயதா! உங்களுக்கு `சாளேஸ்வரம் அதாவது வெள்ளெழுத்து பிரச்சினை’ வந்திருக்கிறது. வெள்ளெழுத்து என்றால் என்னவென்று தெரியுமா! இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! என்று கண் டாக்டர் கேட்டார்.

நாற்பது வயதுக்காரர்களை துரத்தும் `வெள்ளெழுத்து’!

நாற்பது வயதைத் தாண்டும்போது பார்வையில் ஏற்படும் குறைபாட்டினால் கறுப்பாக இருக்கிற எழுத்துகள் பளிச்சென்று தெரியாமல் வெள்ளைப் பேப்பரோடு சேர்ந்து வெள்ளையாக தெரியுமாம். இதைத்தான் வெள்ளெழுத்து என்கிறோம். `தலைமுடி நரைப்பதைப்போல, வயதான காலத்தில் தோலில் சுருக்கம் விழுவதைப் போல, வெள்ளெழுத்துப் பிரச்சினையும் வயதாவதால் வருவது தான்.

நாற்பது வயது நடுத்தர வயது தானே. அப்போதே பார்வையில் பிரச்சினை வந்து விடுமா?’ என்ற எண்ணம் பலருக்கும் வரும்.வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 2005-ம் ஆண்டு கணக்குப்படி, உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வெள்ளெழுத்துப் பிரச்சினை உள்ளவர்களாக இருக்கிறார்களாம்.

இதில் சுமார் 51.7 கோடி மக்கள், கண்ணாடியை உபயோகித்து, பார்வைக் குறைபாட்டை சரி பண்ணாமல் இருக்கிறார்களாம். சாளேஸ்வரம், அதாவது வெள்ளெழுத்து என்கிற இந்தப் பிரச்சினையை கிரேக்க மொழியில் `ப்ரெஸ்பயோப்பியா’ என்று சொல்வதுண்டு. ப்ரெஸ்பயோ என்றால் வயதானவர். ஓபியா என்றால் கண்கள். அதாவது “வயதான கண்கள்” என்று நாற்பது வயதை தாண்டியவர்களின் கண்களைச் சொல்வார்களாம். நாற்பது வயதுக்கு மேல் சுமார் நாற்பது செ.மீ தூரத்தில் நியூஸ் பேப்பரை வைத்து படிக்க முடியவில்லை என்றால் இதை வெள்ளெழுத்துப் பிரச்சினை அதாவது `சாளேஸ்வரம்’ என்று சொல்வதுண்டு.

புத்தகம் படிப்பதற்கு கஷ்டம், புத்தகத்திலுள்ள சின்ன எழுத்துக்களைப் படிப்பதற்குக் கஷ்டம், சற்று குறைவான வெளிச்சத்தில் படிப்பதற்கு கஷ்டம், கம்ப்யூட்டரில் எழுத்துக்களைப் பார்ப்பதற்கு கஷ்டம், செல்போனில் நம்பரை பார்ப்பதற்கு கஷ்டம், கொஞ்ச நேரம் படித்தாலே நிறைய நேரம் படித்தது போன்ற ஒரு நினைப்பு. கண்களில் ஓர் அசதி, களைப்பு, எரிச்சல்…

இவைகள் எல்லாமே நாற்பது வயதை நெருங்கியவர்களுக்கும், நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கும் ஏற்படக்கூடிய வெள்ளெழுத்துப் பிரச்சினையாகும். வெள்ளெழுத்து பிரச்சினை நாற்பது வயதை நெருங்கும்போது வந்து விடும். இந்த சமயத்தில் கிட்டத்தில் இருக்கும் சிறிய பொருளின் உருவம் அதாவது படிப்பது, ஊசியில் நூலைக் கோர்ப்பது, கம்ப்யூட்டரில் சின்ன எழுத்துக்களைப் படிப்பது, அரிசியில் கல் பொறுக்குவது போன்றவை தடுமாறும்.

உலகம் முழுவதும் உள்ளவர்கள் நாற்பது வயது ஆகும்போது அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இந்த வெள்ளெழுத்துப் பிரச்சினையை கண்டிப்பாக சந்தித்துத்தான் தீர வேண்டும். வெள்ளெழுத்துப் பிரச்சினை அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறதாம். அமெரிக்க ஜனத்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கையின்படி சுமார் 131/2 கோடி அமெரிக்கர்கள் 2008-ம் ஆண்டில் நாற்பது வயதை நிரம்பியவர்களாக இருக்கிறார்களாம்.

இவர்களில் பெரும்பாலோர் கண்ணாடிக்கும், காண்டாக்ட் லென்சுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்களாம். முன்பெல்லாம் நாற்பது, நாற்பத்தி ஒன்று, நாற்பத்தி இரண்டு இப்படி மெதுமெதுவாகத்தான் இந்த வெள்ளெழுத்துப் பிரச்சினை வர ஆரம்பிக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் கண்ணுக்கு அதிக வேலை கொடுப்பதனாலும் கண்கள் அதிக களைப்படைவதாலும் சில பேருக்கு 38, 39 வயதிலேயே வெள்ளெழுத்துப் பிரச்சினை வர ஆரம்பித்து விடுகிறது.

வளர்ந்து வரும் நாகரிகத்தின் பாதிப்புதான் முக்கிய காரணமாகும். வெள்ளெழுத்துப் பிரச்சினை, வயது சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதற்கும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற மற்ற பார்வைக் குறைபாடுகளுக்கும் சம்பந்தம் கிடையாது.

கண்ணில் கருவிழிக்கு உள்ளே இயற்கையாக உள்ள லென்ஸ், கொஞ்சம் கொஞ்சமாக கடினமாவதாலும், வீங்கி விடுவதாலும் லென்சின் மடங்கி விரியும் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடுவதாலும் தான், இந்த வெள்ளெழுத்துப் பிரச்சினை உண்டாகிறது. லென்சுக்குள் இருக்கும் புரோட்டீனில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் புரோட்டின் சிதைந்து லென்ஸ் கடினமாகி விடுகிறது.

லென்ஸைச் சுற்றியுள்ள மிக மெல்லிய மிக நுண்ணிய தசைநார்களில் இறுக்கம் ஏற்பட்டு எலாஸ்டிக் தன்மை குறைந்து கிட்டத்தில் இருக்கும் பொருளை, சரியாக போக்கஸ் பண்ண முடியாமல் போய்விடுகிறது. வயது கூடக்கூட கண்களிலுள்ள லென்சின் போக்கஸ் செய்யும் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும். நாற்பது வயதைத் தாண்டியவர்கள், படிப்பதற்காக கண்ணாடி போட்டாச்சு என்று நினைத்துக் கொண்டு ஆயுள் முழுக்க அதே கண்ணாடியை போட்டுக் கொண்டு இருக்கக்கூடாது. அடுத்த தடுமாற்றம் ஏற்படும்போது கண்டாக்டரை கண்டிப்பாக சந்தித்து கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும். கிட்டப்பார்வை, குறைபாட்டையும் வெள்ளெழுத்துப் பிரச்சினையும் சரிபண்ண வேண்டியதை மிக மிக முக்கியமான ஒரு காரியமாக நினைத்து செயல்பட வேண்டும்.

நாட்டில் கல்வி வளர்ச்சி அடைய படித்தவர்கள் அதிகமாக, படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க, தடையின்றி வேலைகள் செய்ய பார்வைக் குறைபாடு உடனே சரி பண்ணப்பட வேண்டும். அதே மாதிரி நுட்பமான வேலை செய்வதற்கும் கண்டிப்பாக கண் டெஸ்ட் பண்ணி கண்ணாடி போட்டுக் கொள்ள வேண்டும்.

கண்ணாடி போட்டுக் கொண்டால் வயதாகி விட்டதோ என்று மற்றவர்கள் நினைப்பார்களோ என கவலைப்படாதீர்கள். மருத்துவ உலகமே இப்பொழுது நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்களுக்கான கண்பார்வை பிரச்சினையை பற்றியும், கண்ணாடி தேவையைப் பற்றியும் அதிகமாக கவனிக்க ஆம்பித்து விட்டது.

முன்புபோல இல்லாமல் இப்பொது தெருவுக்குத் தெரு கண்ணாடிக் கடைகள் நிறைய திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களிலும் ஒரு கண்ணாடிக்கடை கண்டிப்பாக இருக்கிறது. புத்தகக் கடையில் கூட கண்ணாடி விற்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கண்ணாடியின் விலை அதிகமாக இருப்பதால் வாங்கி உபயோகிக்க தயங்குகிறார்கள்.

ஆபரேஷன் மூலமும் வெள்ளெழுத்துப் பிரச்சினையை சரி செய்ய வசதி இருக்கிறது. ஆனால் அனேகம் பேர் இதை விரும்புவதில்லை. கண்பார்வை கூர்மை கொஞ்சம் குறைவதென்பது நாற்பது வயதைத் தாண்டும்போது சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படுவது தான்.

இந்த நேரத்தில் கண் டாக்டரை சந்தித்து கண்களை டெஸ்ட் பண்ணி, கண்ணாடி போட்டுக் கொள்வதற்குப் பதிலாக அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் கூட, நாற்பது வயதைத் தாண்டும்போது கண் பார்வையில் வித்தியாசம் அல்லது தடுமாற்றம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் கண்களை டெஸ்ட் பண்ணி உடனே கண்ணாடி போட்டுக்கொள்வது நல்லது. அதாவது கண்களுக்கு நல்லது.