Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,486 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்!

பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்!

p8aசென்னை மக்கள் இதுவரைக் கண்டிடாத இயற்கைப் பேரிடரைச் சந்தித்துள்ளனர். நவம்பர் 28, 29, 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில்… இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால், தமிழ்நாட்டின் தலைநகரான சிங்காரச் சென்னை, தண்ணீரில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சாதி, மத பேதம்; ஏழை, பணக்கார வர்க்க பேதம்… என எதுவுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் நிர்கதியாக்கி உணவுக்கும் தண்ணீருக்கும் தவிக்க வைத்து விட்டது, இயற்கை. இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட வழியில்லாமல் தவித்ததை, பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். அவ்வளவு கோரத்தாண்டவம் ஆடிவிட்டது, இயற்கை.

சென்னையின் பல பகுதிகளில் மழை நின்று 5 நாட்களாகியும், இன்னமும் தண்ணீர் வடிய வழியில்லை. மழைத் தண்ணீரோடு சாக்கடை கலந்து துர்நாற்றம் மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. பல நோய்கள் பரவும் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள், தலைநகர் வாழ் மக்கள். இதே போன்ற பாதிப்பில்தான் கடலூர் மாவட்டமும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

இப்பேரிடர் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர்.சுரேஷிடம் பேசினோம். “இந்தப் பாதிப்புக்கு இரண்டு காரணங்கள்தான். பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உருவான பருவம் தவறிய மழை. இன்னொன்று நீர் மேலாண்மைக் குறைபாடுகளால் உருவான விளைவுகள்தான், மக்கள் இந்தப் பேரிடரில் சிக்கி சின்னாபின்னமாகியதற்கு காரணமாகிவிட்டது. விமானப் படை, கப்பற்படை, ராணுவப் படை என முப்படையும் களமிறங்கி மீட்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

நீர்வள ஆதாரத்துறை, நிலப்பதிவுத்துறை, இயற்கை வளத்துறை, நீர்ப்பாசனத்துறை இந்த நான்கு துறைகளின் கோளாறுகளால்தான் மக்கள் இந்தத் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக நீர்நிலைகளைக் காக்கும்பொருட்டு, பல  வழக்குகள் பதியப்பட்டு உயர்நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கி உள்ளது. அதன் மீது மாறி மாறி வந்த அரசுகள் நடவடிக்கைகள் எடுக்காததுதான் பேரழிவுக்குக் காரணம்.

வெள்ளப்பெருக்கு எப்படி p9aஏற்படுகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல ஏரிகள் முறையாக தூர்வாரப்படாமல், பராமரிக்கப்படாமல் யாருடைய அக்கறையும் இல்லாமல் கண் முன்னால் அழிந்து வருகின்றன. அப்படி இருக்கும்போது, அதில் நீரை எப்படித் தேக்கி வைக்க முடியும்? எங்கேயாவது அரசு ஏரிகளை முறையாகப் பராமரித்து வருகிறது என்று சொல்ல முடியுமா… இதற்கு செம்பரம்பாக்கம் ஏரியும் விதிவிலக்கல்ல” என்ற சுரேஷ் தொடர்ந்தார்.

“அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சென்னை மாநகரத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், மியாட் மருத்துவமனை பகுதிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. 30 கிலோ மீட்டர் நீளமுள்ள அடையாறு ஆற்றின் முழுப் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால்தான் தண்ணீர் புகுந்தது எனக் காரணம் சொல்லும் ஆட்சியாளர்கள், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதை கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக அறிவிக்கவேயில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்காமல் கோட்டை விட்டுவிட்டது அரசு. ஓட்டு வாங்க வீட்டுக்கு வீடு படியேறியவர்களுக்கும் இந்த அறிவிப்பைச் செய்ய நேரமில்லை. தவிர, 22 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் கன அடி திறப்பதாகச் சொல்லிவிட்டு ஒரே நேரத்தில் 80 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றியிருப்பதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு என்பதுதான், கொடுமையான விஷயம்.

‘ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து தீர்த்தது’ என்று பொய் பரப்புரை செய்கிறார்கள். மூன்று வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியிருக்க, ஒரே நாளில் பெய்தது என்று முழுபூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்கள்.

p9bபல்லாயிரம் ஆண்டுகளாக மரபு சார்ந்த நீர் மேலாண்மை முறையைக் கொண்டது நமது பாரம்பர்யம். ஆனால், பராமரிக்காமல் விட்டதாலும் காப்பாற்றாமல் விட்டதாலும்  கடந்த ஒரு தலைமுறையில் இவற்றையெல்லாம் அழித்துவிட்டோம். அண்ணா ஆட்சிக் காலத்தில் இருந்தே நீர் மேலாண்மைக்கு என்று ஆண்டுதோறும், பெரும்தொகை செலவிடப்பட்டு வருகிறது. அந்தத் தொகையெல்லாம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. இதுவரை நீர் மேலாண்மையை சரியாகக் கையாளவில்லை என்று ஒரு பொறியாளர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஒவ்வொரு கட்டமாகப் பார்த்தால் இப்போதைய முதல்வர், இதற்கு முன்பிருந்த முதல்வர்கள்தான்  இந்தப் பேரழிவுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு நகரத்தை நிர்மாணிக்கும்போது, அதில் உள்ள நீர்நிலைகளைத் தொந்தரவு செய்யாமல் கட்டடங்களைக் கட்ட வேண்டும். முறையான வடிகால் வசதிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை மாநகரில் இந்த விஷயங்கள் கண்டுகொள்ளப்படவேயில்லை.

சென்னை மாநகரம் அடிப்படையிலேயே ஒரு நீர்ப்பிடிப்புள்ள பகுதி. பல ஏரிகளை விரிவாக்கம் என்ற பெயரில் அழித்து விட்டார்கள். உண்மையில் விரிவாக்கம் என்றால், ஏரிகளை அப்படியே விட்டு சுற்றியுள்ள மாவட்டங்களின் பகுதிகளை இணைப்பதன் மூலம்தான் நகரின் பரப்பை  அதிகரித்திருக்க வேண்டும். ‘இவ்வளவு ஏரிகளையும், நீர்நிலைகளையும் அழித்து கட்டடங்கள் உருவாக்கப்படும்போது, நிச்சயம் இதுபோன்ற பேரழிவு நிகழும்’ என்று ஒரு வழக்கறிஞராகப் பல முறை எச்சரித்து வந்திருக்கிறேன். அது, இன்று நடந்தே விட்டது.

உலக பேரிடர் மையம்p10a, ‘சென்னையில் நிலநடுக்கம் நிகழும். அதற்கு தகுந்தாற்போல் கட்டடங்களை உருவாக்க வேண்டும்’ என்று எச்சரித்து வருகிறது. இந்த எச்சரிக்கை அரசுகளுக்கு அனுப்பப்பட்டும், யாரும் அக்கறை கொள்வதில்லை. இதற்கு முன் நடந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்பின்போதும் பல எச்சரிக்கைகள்  அரசுக்குச் சென்றும் அதைக் கிடப்பில் போட்டனர். அதனால், என்ன நடக்கும் என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம்” என்ற சுரேஷ்,

“மக்கள் மத்தியில் நீர் நிலைகள் குறித்தான விழிப்புணர்வு வந்து, அதிகாரிகளை தட்டிக் கேட்கும் வரை நம்முடைய நீர்நிலைகளுக்கு விடிவு இல்லை. அரசுகளும் விழித்து கொண்டு  ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், வடிகால்கள்களின் பழைய வரைபடங்களைக் கொண்டு மீட்டெடுத்தால் மட்டுமே இதுபோன்ற பேரழிவுகளைத் தடுக்க முடியும்” என்றார்.

தள்ளாடும் நீர்வள ஆதாரத் துறை!

தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நீர்வள ஆதார மையத்துக்கு கடந்த 25 ஆண்டுகளாக புதிதாக யாரையும் பணியில் சேர்க்கவில்லை. பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயதில் உள்ள பொறியாளர்கள்தான் இன்னும் பொறுப்பில் இருக்கிறார்கள். அதனால்தான் இத்துறை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இளம் பொறியாளர்களை புதிய தொழில்நுட்பங்களோடு பணியமர்த்தி பணிகளை விரைவுபடுத்தினால் மட்டுமே நீர்வள ஆதார மையம் முறையாகச் செயல்பட முடியும்.

நீர்மேலாண்மை பற்றிய விஷயத்தில் களத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் கோரிக்கைகள், ஆலோசனைகள் மேல் மட்டத்துக்குச் செல்வதே இல்லை எனும் குற்றச்சாட்டுக்கும் ஆதாரமும் உள்ளது. களத்தில் பணியாற்றும் இவர்களுக்குத்தான் நீர்நிலைகள் பற்றிய முழுவிவரங்களும் தெரியும். ஆனால், இவர்கள் கருத்துக்களை மதிக்காமல் முடிவுகள் எடுக்கப்படுவதும் பேரிடர் சோகங்களுக்கு காரணம். அரசு அலுவலகங்களில் புரையோடும் மட்ட ரகமான அரசியலையும், அரசியல்வாதிகளின் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு திட்டங்கள் உருவாக்குவதையும் ஒழித்தால்தான் இந்த துயரங்களில் இருந்து மீள முடியும்.