வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க 12 ஆலோசனைகள்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதும், அவற்றை தடுக்கவரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன• மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதனால் காவல் துறையினர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க, அவர்களுக்கு 12 ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
காவல்துறையினர் வழங்கிய ஆலோசனைகள்
1. பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கமாக பூட்டி வைக்கவேண்டும். கதவை திறந்து வைத்துவிட்டு, வீட்டுக்குள்ளே வேலைகளிலேயே மூழ்கிப் போகக் கூடாது.
2. வீட்டின் வாயிற் கதவில், ”லென்ஸ்” கண்டிப்பாக பொருத்த வேண்டும். அதோடு நில்லாமல் வீட்டின் மரகதவுக்கு முன் இரும்பு கிரில் கதவுகளை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.
3. ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவர் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளியூர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக் கூடாது.
4. தற்காப்பு கலை: வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள்தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக் கொண்டால் நல்லது. திடீரென்று கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்க மாட்டேன் என்று சத்தம்போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, கொள்ளையர்களிடம் புத்திசாலித் தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.
5. அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள்.
6. வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களைநியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள்கூட பயந்துபோய் திருடமாட்டார் கள்.
7. முதியவர்கள் : வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கிலாக்கரில் கண்டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.
8. அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.
9. ஜோதிடர்கள்: ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை, தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய் கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்து வி ட்டு, அவர்களை அனுப்பி விடுவது சால சிறந்தது.
10. டெலிபோன் எண்கள் :அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள்செல்ல அனுமதிக்க வேண்டும்.
11.ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலை பேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலை பேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணி புரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்கு வசதியாக இருக்கும்.
12. இதேபோல, காவல்துறையினர் சமுதாயத்தில் நடக்கும் மற்ற குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளையும் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க உள்ளனர். பொது மக்களும் அக்கரை எடுத்துக் கொண்டு, இந்த அறிவுறைகளை நோட்டீஸாக அடித்து ஒவ்வொரு வீட்டிற்கும் வினியோகிக்கலாம். இளைய சமுதாயம் இதில் முனைப்புடன் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்.
நன்றி – சென்னை மாநகர காவல்துறை