Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,147 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்!

நம் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களில்  மின் அதிர்ச்சிக்கும் பெரும் பங்கு உண்டு! மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர்  எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர்! இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம்! நாம் இந்த பதிவில் , இல்லத்தில் ஏற்படும் மின் அதிர்ச்சிகளை பற்றியும் அதனை தடுக்கும் முறைகளையும் பற்றி அலச போகிறோம்.

electric11பொதுவாக மின் அதிர்ச்சி ஏற்படும் போது என்னவெல்லாம் நேருகிறது என்று முதலில் பார்க்கலாம்.
1)மின் அதிர்ச்சி ஏற்படும் போது ,காயங்கள் ஏற்படுகின்றன. அவை தீயினால் ஏற்படும் காயங்களை விட மிக மோசமானவை.

2)கீழறை குறு நடுக்கம்(Ventricular Fibrillation ) உண்டாகிறது. அதாவது , இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்து விடும். இதயத்தின் கீழறையில் உள்ள தசைகள் நடுங்க ஆரம்பித்து விடும். மாரடைப்பு உண்டாகும். இரத்த அழுத்தம் வீழ்ச்சியடையும். முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டு விடும்.
electric12
3) மின் அதிர்ச்சி , நம் உடம்பின் நரம்பு கட்டுபாட்டை கடுமையாக குறுக்கிட்டு பெருத்த பாதிப்பை விளைவிக்கும். இதனால் இருதய கோளாறும் , நுரையீரலில் பிரச்சனையும் உடனே ஏற்பட்டு விடும்.
4) கடைசியாக , மின் அதிர்ச்சி ஏற்பட்ட மனிதனின் உயிரையே வாங்கிவிடும்.
மின்சார அதிர்ச்சியானது , நம் உடம்பினுள்ளே பாய்ந்த மின்சாரத்தின் அளவினை பொறுத்து வேறுபடும். மின் அதிர்ச்சியின் போது உடம்பினுள்ளே பாயும் மின்சாரத்தின் அளவு , மின் அழுத்தத்தையும் (Voltage), நம் உடம்பின் எதிர்க்கும் தன்மையையும் (Resistance) பொறுத்த ஒரு விஷயம். மின் அழுத்தம் அதிகமாகவும் , உடம்பின் எதிர்க்கும் தன்மை குறைவாகவும் இருக்கும் பொழுது , அதிக அளவு மின்சாரம் பாயும்.

உயர் மின் அழுத்தத்தினால் ஏற்படும் மின் அதிர்ச்சியின் போது மனிதன் தூக்கி எறியப்படுவான்! 240V போன்ற குறைந்த மின் அழுத்தத்தில் , மின் அதிர்ச்சி ஏற்படும் போது , மனிதனின் தசைகள் சுருங்குகின்றன! தசைகள் சுருங்குவதால் , மனிதன் மின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் சிக்கி கொள்கிறான்! இந்த நிலைமையும் பயங்கரமான ஒன்று தான்! அந்த நிலைமையின் தீவிரம் , அவன் எவ்வளவு நேரம் , மின் அதிர்ச்சிக்கு உள்ளாகிறான் என்பதை பொறுத்தது!

உலர்ந்த சருமம் அதிக எதிர்ப்பை காட்டும்! மேலும் , நம் உடம்பில் பாதுகாப்பு கவசம், அதாவது கைகளுக்கு ரப்பரில் ஆன கையுறைகள் , கால்களுக்கு ரப்பரில் ஆன காலணிகள் ஆகியவை அணிந்திருக்கும் போது , பெரிதாய் எந்த பிரச்சனையும் இல்லை. electric8ஆனால் கைகள் ஈரமாக இருக்கும் பொழுது , உடம்பு வியர்த்து கொட்டும் பொழுதெல்லாம் நம் உடம்பின் எதிர்ப்பை காட்டும் தன்மை மிகவும் குறைந்து போகும். நம் உடம்பில் ஓடும் குருதியும் எதிர்ப்பை சுத்தமாக காட்டாது! அத்தகைய தருணங்களில் மின் அதிர்ச்சி ஏற்படும் பொழுது , மின்சாரம் உடம்பில் உள்ள மின்னணுக்களின் வழியாக பாயும்.அதிகமான வெப்பம் உண்டாகும். இதனால் தான் மின்சாரம் பாயும் பொழுது, உடம்பில் தீ காயங்கள் ஏற்படுகின்றன!

உயர் மின் அழுத்தத்தினால், மின் அதிர்ச்சி உண்டாகும் போது , மனிதன் கரி கட்டையாகி விடுவதுண்டு!

மின்சாரம் பாயும் கம்பியை தெரியாமல் பிடிக்கும் போதோ ,இல்லை குளியல் தொட்டியின் உள்ளே இருக்கும் போது மின் அதிர்ச்சி ஏற்படும் போதோ , எந்த வித தீக்காயங்களும் கண்ணுக்கு புலப்படாமலேயே ,மரணம் உடனடியாக ஏற்படும். ஏனெனில் , மின் அதிர்ச்சியின் தாக்கம் , நம் சருமம் எவ்வளவு பரப்பளவுக்கு மின்சாரத்தை தொட்டு கொண்டு இருக்கிறது என்பதை பொறுத்தது!

மின் அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அடுத்து பார்க்கலாம். அவை ,

1) வீட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த மின் இணைப்புகளுக்கும் , மண் இணைப்பு (Earthing) கொடுக்கப்பட வேண்டும்.
2)குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மின்குதைகுழி(Electric Socket)உபயோகப்படுத்துவது நலம் பயக்கும்.
3)வீட்டில் உள்ள மின்கம்பிகளை(Electric Wires ) , கைகளால் தொடும் போது, மின்பாயாமல் இருக்க அதன் மேல் கொடுக்கப்பட்டிருக்கும் காப்பை(Insulation ) அவ்வப்பொழுது சரி பார்த்து கொள்ளுவது நல்லது.

மண் இணைப்பு என்றால் என்ன??
நம் வீடுகளில்  கொடுக்கப்படும் மின் இணைப்புகளில் இந்த மண் இணைப்பு மிகவும் முக்கியமானது.  மின் இணைப்பில் , மொத்தம் மூன்று கம்பிகள் உண்டு. அவை ,
1)மின்சார கம்பி (Live  wire )
2)மின்சாரம் இல்லா கம்பி (Neutral wire )
3)மண் இணைப்பு கம்பி (Earth  wire )

இந்த மண் இணைப்பு கம்பியின் ஒரு முனை , வீட்டுக்கு வெளியே , மண்ணுக்கு அடியில் , மிக ஆழத்தில் , ஒரு செம்பு தகடோடு இணைக்கபட்டிருக்கும். மறு முனை நம் வீட்டில் உள்ள மெயினோடு (Main ) இணைக்கபட்டிருக்கும். மின்சாரம் , அதிக எதிர்ப்பு இல்லாத பாதையை தேர்வு செய்வதால் , இவ்வாறு மண் இணைப்பு கொடுக்கப்படும் போது , ஏதேனும் அசம்பாவிதத்தால் உண்டாகும்  மின் சக்தி எழுச்சியை(Power  Surge) , எந்த தீங்கும் விளைவதற்கு முன்னே ,பத்திரமாக மண்ணுக்கு  அனுப்பி வைத்து விடும்.

electric4மேலும் , இந்த மண் இணைப்பானது , நம் வீட்டு உபகரணங்களையும் பாதுகாக்கவல்லது! எப்படி பாதுகாக்கிறது என்றால் , நம் வீட்டு உபகரணங்களில் காணப்படும் , மூன்று கம்பி மின்செருகி மூலமாக!

நம் வீடுகளில் உள்ள மின் உபகரணங்களில் , உலோக உடம்பை கொண்ட மின் சாதனங்களான மோட்டார்,மைக்ரோவேவ் அவன் , அயன் பாக்ஸ்  போன்றவற்றின் , உள்ளே ஏதேனும் காரணங்களால் , மின்சார  கசிவு ஏற்படுமாயின் , அந்த சாதனம் மொத்தமும் மின்சாரம் பாய ஆரம்பித்து விடும். அந்நேரம் , நாம் ஏதேச்சையாக , அதை தொட நேரின் , நம் உடம்பு வழியாக , மின்சாரம் பாய்ந்து , பூமியை அடைந்து விடும்! ஆனால் , ஒழுங்காக , மண் இணைப்பு கொடுத்திருந்தால் , இத்தகைய ஆபத்து நேராது!

மின்செருகியில்(Plug ), மொத்தம் மூன்று முள்கள்(Pins ) உண்டு.  அதிலே  காணப்படும் மூன்று முள்களில் , ஒன்று மட்டும் , அளவில் சற்று பெரியதாய் , நீளமாய் காணப்படும். அது  தான் மண் இணைப்பு முள்! அது ஏன் , அளவில் பெரியதாய் இருக்கிறது என்றால் , நாம் ஒவ்வொரு தடவையும் மின்electric20செருகியை , மின்குதைகுழியில்(Electric Socket)  செருகும் போதும், மற்ற இரு முற்களை காட்டிலும் , முதன்மையாக இந்த மண் இணைப்பு முள் இணைந்து கொள்கிறது! மேலும் , நாம் ஒவ்வொரு தடவையும், மின்செருகியை நீக்கும் போது, கடைசியாக இணைப்பில் இருந்து நீங்குவது , இந்த மண் இணைப்பு முள் தான்!இவ்வாறு மண் இணைப்பு, தொடர்ச்சியாக கிடைப்பதால் , நம் பாதுகாப்பு அதிகரிக்கிறது! மேலும் , மின்செருகியை , தவறாக  யாரும் செருகி விடக் கூடாது என்பதற்காகவும் , பாதுகாப்பை மனதில் கொண்டும்  , மண் இணைப்பு முள்ளின் அளவை , மற்ற இரு முற்களை காட்டிலும் , சற்றே அதிகரித்து இருக்கின்றனர்!

electric19
குழந்தையின் பாதுகாப்பை மனதில் வைத்து உருவாக்கப்படும், மின்குதைகுழியில் , குழிகள்(Holes) சார்த்தி(close) வைக்க படுகின்றன!  எப்பொழுது , மண் இணைப்பு முள் , மின்குதை குழியில் , உள்நுளைகிறதோ , அந்த சமயங்களில்  மட்டும், இந்த சார்த்தி(Shutter ) திறந்து கொள்ளும்!  ஆக , குழந்தைகள் விளையாட்டு போக்கில் , எதையும் இந்த மின்குதைகுழியில்(Electric Socket) நுழைத்து விட முடியாது!

electric211
ஒருவாறு மண் இணைப்பின் அவசியத்தை உணர்ந்தாயிற்று, இப்பொழுது இந்த மண் இணைப்பில் ஏதேனும் தவறு , உங்கள் அறிவுக்கு எட்டாமல் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது???
என்னம்மா குண்ட தூக்கி போடுற என்று அலறி விட்டீர்களா?? பதட்டம் வேண்டாம்.. அத்தகைய சூழ்நிலையை சமாளிக்கவும் வழி இருக்கிறது! அது தான்  RCD  என்று அழைக்கப்படும் Residual current  detectors. இதை RCCB(Residual  current circuit breakers ) என்றும் அழைப்பர்!

இந்த RCD  என்றால் என்ன??electric14

RCD என்பது  , மின்சார அதிர்ச்சி ஏதும்  ஏற்படாமல் நம்மை முழுமையாக பாதுகாக்கும் ஒரு சாதனம்! சொன்னா நம்ப மாட்டீங்க , இந்த RCD பாதுகாப்பு இருக்கும் பொழுது , தெரியாமல் மின்சாரம் பாயும் கம்பியை தொட்டு விட்டால் கூட , எந்த வித மின் அதிர்ச்சியும் ஏற்படாது! ஆச்சரியமாக இருக்குது அல்லவா

இந்த RCD எப்பொழுதெல்லாம் , தனக்கு வரையறுக்கப்பட்ட பாதையை விட்டு விலகி பாயும் மின்சாரத்தை கண்டு கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் , கண் இமைக்கும் பொழுதில் , செயல்பட்டு ,தவறு நேர்ந்த மின்சார உபகரணத்துக்கு , மின்சார விநியோகத்தை  நிறுத்தி விடும்! இதனால் , மின் அதிர்ச்சி எதுவும் ஏற்படுவது தவிர்க்கபடுகிறது!

அப்போ இந்த RCD போதுமா?? மண் இணைப்பு அவசியம் இல்லையா?? என்று நீங்கள் யோசனை செய்வது புரிகிறது! இரண்டுமே அவசியம் தான்!  மின் இணைப்புகளில்  ஏற்படக்கூடிய தவறுகள் இரண்டு ,
1)குறுகிய சுற்று (Short Circuit )
2)அதிகப்படியான மின் சுமை (Over Load Power  )

1)குறுகிய சுற்று
electric16மின்சாரம் தனக்கு வரையறுக்கப்பட்ட பாதையை விட்டு விலகி , வேறு அதிக எதிர்ப்பு இல்லாத பாதையை தேர்ந்து எடுத்து கொள்வதே குறுகிய சுற்று! உங்கள் வீட்டு மிக்சியை போடுகிறீர்கள்! மின்சாரம் மின்செருகி வழியாக நுழைந்து , மிக்சியின் உள்ளே இருக்கும் மோட்டாரை சுற்றினால் தான் , சட்னியை அரைக்க முடியும்!  மிக்சியின் காப்பிடப்பட்ட , மின்கம்பி , காப்பு பிரிந்தது அறியாது நீங்கள் கை வைத்து அதை தொட்டு விடும் போது , உங்கள் கை வழியே ஒரு குறுகிய சுற்று உண்டாகி விடுகிறது!  அவ்வாறு குறிகிய சுற்று உண்டாகும் போது , மின்சார கம்பியில் , அதிகப்படியான மின்சாரம் பாயும்! அதாவது , சாதரணமான நிலையில் , மிக்சியை போடும் போது , அதனுடைய மின்சார கம்பியில் பாயும் மின்சாரத்தை காட்டிலும் அதிக அளவு மின்சாரம் பாயும்! இவ்வாறு , தவறு நேரும் போது , பாயும் மின்சாரத்தின் அளவை உணர்ந்து , உடனடியாக , அந்த உபகரணத்துக்கு , மின்சார விநியோகத்தை நிறுத்தி விடும் இந்த RCD. இதனால் உபகரணத்துக்கும் பாதுகாப்பு , மிக்சியை உபயோகம் செய்தவருக்கும் பாதுகாப்பு!

2)அதிகப்படியான மின் சுமை(Power Over  Load)

மின் சுமை என்பது யாதெனின் , ஒரே நேரத்தில் , பல வீட்டு உபகரணங்களை உபயோகிக்கும் போது , மின்சாரத்தின் அளவு , மின்சார கம்பி அதனை தாங்கி கொள்ளும் அளவினை விட அதிகமாக இருக்கும் பொழுது , அதற்கு ஏற்றாற் போல் உருகி எல்லாம் அமைய பெற்றிருந்தால் , எந்த ஒரு பிரச்சனையும் இல்லை! உருகியானது , தன்னை தானே , உருக்கி கொண்டு , மின்சாரத்தை நிறுத்தி விடும்! ஆனால் , உருகி , சரியாக தேர்ந்தெடுக்க படாமல் போகும் போது , அது உருகாது! மாறாக , மின்சாரத்தை தடுத்து நிறுத்தாமல் ,  ஓட விட்டு விடும்! அத்தகைய நிலைமையில் என்ன நடக்கும் , மின்சாரகம்பி சூடாகி , தீ பிடித்து எரிய ஆரம்பித்து விடும்! நினைத்தாலே , அடி வயிறு கலங்குகிறது அல்லவா! இது போன்ற பேராபத்து , எதுவும் வராமல் காப்பதே இந்த RCD யின் வேலை!

electric18மண் இணைப்பு மிக அவசியம் தான்!  ஏனெனில் , தவறுதலாய் பாயும் மின்சாரம்  , மண் இணைப்பு கொடுத்திருந்தால் , எந்த பிரச்சனையும் இல்லாமல் , மண்ணுக்குள் பாய்ந்து விடும்.

RCD யானது , தவறுதலாய் பாயும் மின்சாரத்தை , எந்த ஒரு பயங்கரமும் நேருவதற்கு முன்னே , உடனடியாக உணர்ந்து , மின்சார விநியோகத்தையே  நிறுத்தி விடும்!

இது இருந்தால் அது தேவை இல்லை , அது இருந்தால் இது தேவை இல்லை என்று நினைக்காதீர்கள்! இரண்டுமே அவசியம்!இரண்டுமே , நம் இரு கண்கள் போல தான்! RCD யால் நம் குடும்பத்தினரின் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது!

என்ன எலெக்ட்ரீசியனை பார்க்க கிளம்பிடீங்க போல!!