வாக்காளர்களுக்கு மதிப்பு இருக்கிறதென்றால் அது தேர்தல் நேரத்தில் மட்டுமே. அந்த நேரத்தில் எப்படியாவது பேசி, நம்மிடம் வாக்குகளைப் பெற்றுச் செல்கின்றனர் அரசியல்வாதிகள்.
சரி, அவர்கள் இயல்பு அதுதான். ஆனால், நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? என்ன கொள்கைக்கு வாக்களிக்க வேண்டும் என்பதெல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. ஏதோ நண்பர்களோடு போனோம், அவர்கள் சொன்ன கட்சிக்கு அல்லது சின்னத்திற்கு வாக்களித்தோம் என்று பலர் இருக்கின்றனர். இதில்கூட சுயசிந்தனை இல்லையென்றால் எப்படி?
யார் நம்மை ஆள வேண்டும் என்பதை நாம் தானே நிர்ணயிக்க வேண்டும்? நமது ஜாதிக்காரன், பிறரைவிட குறைவாகத்தான் குற்றங்கள் செய்துள்ளார் என்று பார்த்து வாக்களிப்பது எப்படி புத்திசாலித்தனமாக இருக்க முடியும்?
எத்தனையோ சுயேச்சை வேட்பாளர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களாகவும், நீதி, நேர்மை, நியாயத்திற்குப் போராடுபவர்களாகவும், நல்ல சமூக ஆர்வலர்களாகவும் இருப்பவர்கள் நிற்கும் போது நாம் ஆதரிக்காமல் இருந்தால் அது யார் குற்றம்?
நமது மனதில் அப்படி ஒருத்தருக்கு வாக்களிப்பதற்கு உண்டான பெருந்தன்மை எளிதில் வருவதில்லை. பெரிய கட்சிகளுக்கும் அந்தச் சின்னங்களுக்கும் வாக்களிப்பதைப் பெருமையாக நினைக்கிறோம்.
அவர்கள் செய்யும் ஆடம்பரச் செலவுகளைப் பார்த்தும், பிரமாண்டமான செயல்பாடுகளைப் பார்த்தும் நம் மனதில் சில முடிவுகளை எடுத்து விடுகிறோம். ஆனால், கட்சிக்காக பணத்தைத் தண்ணீராய் செலவழிப்பவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என நாம் சிந்திப்பதே இல்லை.
சாதாரண ஒரு வார்டு கவுன்சிலர் தன் அரசியல் வாழ்க்கையில் சம்பாதிப்பதை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது. இதில் ஆண், பெண் என்ற பேதமில்லை. பெண் உறுப்பினர்கள் பெயரால் அவர்களின் கணவன்மார்களே அவர்களை ஆட்டுவிக்கிறார்கள்.
திருப்பூரில் ஓர் அரசு பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் வெளியே சாலையோரம் தள்ளுவண்டியில் கடைபோட்டிருக்கும் சிறு வியாபாரிகளிடம் மாதம் ரூபாய் நான்காயிரம் லஞ்சம் வாங்கும் ஒரு பெண் கவுன்சிலர் இருக்கும்போது, மற்ற அரசியல் பதவிகளின் அடாவடித்தனம் என்னவென்று நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
இதற்கெல்லாம் மாற்று இல்லையா, விடிவு இல்லையா என வெறும் ஏக்கத்தை மட்டும் நாம் வெளிப்படுத்துவதை விட்டு, ஒவ்வொரு வாக்காளரும் தொகுதியில் நிற்கும் தெரிந்த நபர் மற்றும் நீதி, நேர்மை, நியாயத்திற்குப் போராடும் சமூக ஆர்வலருக்குத் தயங்காமல் ஆதரவு தாருங்கள்.
உங்கள் பகுதியிலேயே பல ஆண்டுகளாகப் பழக்கமாகி இருக்கும் பெரிய கட்சிகளின் பிரதிநிதிகள் வேட்பாளர்களாக இருப்பார்கள். அவர்களுக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
நீங்கள் வேறு யாருக்காவது வாக்களித்தாலும் அவர்களுக்குத் தெரியாது. அதற்காக நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.
வாக்குச்சாவடிக்கு உள்ளே போகும் போதும், வெளியே வரும்போதும் எந்தக் கட்சிக்காரர் அவர்களுக்கு வாக்களிக்கக் கேட்டாலும், “சரி.. சரி’ என தலையாட்டிவிடுங்கள். ஆனால், உண்மையில் நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து செயல்படுங்கள்.
துணிக் கடைக்குச் சென்று ஓராண்டுக்கு உழைக்கும் ஆடைகள் வாங்குவதற்கும், தேர்வு செய்வதற்கும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் செலவு செய்கிறோம். ஆனால், நமது பகுதியின் மக்கள் பிரதிநிதியாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்தான் எனும்போது எப்படிப்பட்டவரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்? சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருண மல்லவா?
நாம் வாக்களிக்காவிடில் என்னாகும்? இத்தனை பிரச்னைகள் எதற்கு என சிந்திப்பதற்கே பயந்து வாக்களிக்கச் செல்லாதவர்கள் சிலர் இருப்பார்கள்.
இதனால் எத்தனையோ பொய் சொல்லி ஒரு வேட்பாளர் வெற்றிபெற்று நமது தொகுதிக்கு மக்கள் பிரதிநிதியாக வந்து நமக்கு எதிராகவே செயல்படும் சூழலும் ஏற்படும். எனவே, ஒரு தேவையற்ற நபர் வந்து நம்மை ஆட்சி செய்ய நாம் ஏன் காரணமாக வேண்டும்?
ஒருவேளை, வாக்களிக்க வேண்டாம் என நினைத்து அப்படி அவர்கள் தாமதிக்கும்போது, அவர்கள் பெயரில் வேறு யாராவது வாக்களிக்க வாய்ப்பு உண்டாக்கி விடுகிறார்கள். பெருமளவு கள்ள வாக்குகள் தடுக்கப்பட்டாலும் முழுமையாக நடைமுறைப்படுத்த இயலவில்லை என்பதுதான் உண்மை.
நாம் தவறான நபர்களைத் தேர்ந்தெடுத்தால் என்னஆகும்? எந்தவித சிந்தனையும் இன்றி, ஏதோ ஒரு சின்னத்திற்கு வாக்களித்து ஒரு தவறான நபரைத் தேர்வு செய்தாலும் அதுவும் நமக்கு எதிராகத்தான் முடியும். அவரின் நடவடிக்கை அனைத்தும் தொகுதி மக்களுக்கு எதிரானதாக இருக்கலாம். தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவராக இருக்கலாம்.
அவர் சொன்னார், இவர் சொன்னார், அதனால் அவருக்கு வாக்களித்தேன் என பிறரின் மேல் பழிபோடாமல் நமக்கே உள்ள சுய சிந்தனையினால், முறையான வேட்பாளரை ஆதரிப்பது என்பது நமது கடமை.
எந்தக் காரணம் முன்னிட்டும் நமது வாக்களிக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது. கடமையைச் செய்வோம், உரிமைகளைப் பெறுவோம். நல்ல சமுதாயம் அமைய முயற்சி எடுப்போம்.
எஸ்ஏ. முத்துபாரதி