கேள்விக்குறி வாழ்க்கை ஆச்சரியக்குறியானது!
இங்கிலாந்து இளவரசர் சார்லசிடமிருந்து, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பெற்ற, ஹாஜா புன்யமின்:
15 ஆண்டுகளுக்குமுன்… ஒரு வானலி, அடுப்பு மட்டுமே வைத்துக்கொண்டு சமோசா விற்றவர், இன்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் ஆறாவது வரை மட்டுமே படித்தவர்.
“எந்தவொரு தொழிலாக இருந்தாலும், அதில் ஒரு ஆத்மார்த்தமான தேடல் இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும். தொழில் செய்பவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே உள்ள வித்தியாசமே இங்குதான் தொடங்குகிறது” என்றபடி சென்னை, புதுப்பேட்டையில் சமோசா வியாபாரம் செய்ய தொடங்கியக் கதையைச் சொன்னார் ஹாஜா புன்யாமின்.
“இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, தங்கையுடன் பிறந்தேன். பெரிய குடும்பம், வறுமை எங்களைப் பிடித்து ஆட்டியது. மாநகராட்சி பள்ளியில் அரை நாள் பள்ளிக்கூடம் முடிந்ததும் சமோசாவைத் தூக்கில் எடுத்துக் கொண்டு தெரு தெருவாக வியாபாரம் செய்தேன்.
பெற்றோருக்கு உதவியாக தினமும், சென்னையில் பல கடைகளுக்கு சமோசாக்களை போடுவதோடு, வீதி வீதியாய் விற்கவும் ஆரம்பித்தேன். எனக்கு திருமணமாகும் வரை இப்படியே சென்ற நிலையில், என் மனைவி பாரிசா வந்த பின் தான், கேள்விக்குறியாக இருந்த என் வாழ்க்கையில், ஆச்சரியக்குறி உருவானது.
‘இப்படியே தினமும் விற்றுக் கொண்டிருந்தால் எப்படி; நாமே ஏன் தனியாக சமோசா கடை ஆரம்பிக்கக் கூடாது?’ என, கேட்டார். மனைவி சொல்லே மந்திரம் என, புதுப்பேட்டை நடைபாதையில், சமோசா கடை போட்டேன்.
எங்கள் சமோசாவின் ருசி, தரம் காரணமாக, சில நாட்களிலேயே வியாபாரம் அதிகரித்தது. ஒரு நாள் எங்கள் கடைக்கு வந்த எக்ஸ்போர்ட் கம்பெனி முதலாளி ஒருவர், சமோசாவை சுவைத்த பின், ‘ஆர்டர் கொடுக்கிறேன், தினமும், 5,000 சமோசாக்கள் செய்து கொடுக்க முடியுமா?’ என, கேட்டார்.
அப்போது எங்களிடம், 5,000 சமோசாக்கள் செய்வதற்கான போதிய இடவசதியோ, முதலீடோ இல்லை. ஆனாலும், முதன் முதலாக வந்த பெரிய ஆர்டர்; மறுக்க மனம் வராமல், கடனை வாங்கியாவது செய்து விடுவோம் என, ஏற்றுக் கொண்டோம்.
எனக்கு சமோசா ஆர்டர் தந்த அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியே எனக்கும் என் மனைவிக்கும் ஃபுட் ஃபுரோசன் பிராசஸிங் (Frozen processing) பற்றி பயிற்சி தந்தது. ஜாமீனில் 1 லட்ச ரூபாய் கடன் வாங்கி எல்லோரையும் மாதிரி சமோசாவை சுட்டு விற்காமல், அந்த எக்ஸ்போர்ட் கம்பெனி தொடங்கி வைத்த, பதப்படுத்தி விற்பனை செய்கிற தொழிலையே பெரிய அளவில் செய்யலாம் என்று முடிவு செய்தேன். என்னிடம் வேலைக்கு இருந்த ஐந்து பேருடன், மீண்டும் தொழிலை ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த ஹாஃபா ஃபுட்ஸ் அண்ட் ஃபுரோசன் புட்ஸ்.
முதலில் நாங்கள் சமோசா கடை வைத்தபோது எங்கள் மாத வருமானம் வெறும், 3,000 ரூபாய் தான்; இப்போது, எங்கள் ஓராண்டு, ‘டர்ன் ஓவர்’ ஒன்றரை கோடி ரூபாய். செங்குன்றத்தில் தனியாக சமோசா யூனிட் அமைத்திருக்கிறோம்; ஒரு நாளைக்கு, 40 ஆயிரம் சமோசாக்கள் தயாரிக்கிறோம்; 40 பெண்கள் வேலை பார்க்கின்றனர். இதற்கெல்லாம் என் மனைவி தந்த ஊக்கமே காரணம்!