பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும் நவீன தொழில்நுட்பம்
பெரியவர்களைப் பார்த்துத் தான் சிறுவர்கள் நல்லவற்றையும் கெட்டவற்றையும் பழகுகின்றனர். தற்போதைய நவீன உலகில் இளம் பிஞ்சு உள்ளங்களில் தீயவைதான் அதிகம் விதைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொலைக்காட்சி, தொலைபேசி, இணையத்தளம் என நவீன தொழில்நுபங்கள் திரைப்படங்கள், பெரியவர்களின் நடத்தைகள் சிறுவர்களின் வெள்ளை
மனதில் நஞ்சை விதைக்கிறது.
பிஞ்சு உள்ளங்களில், இன்று வன்முறை எண்ணங்கள் மிக வேகமாக பரவி வருகின்றன. இது பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றது. இதன் தாக்கம் எதிர்காலத்தில் மிக மோசமானதாக இருக்கலாம். இவ்விடயம் பெற்றோருக்கும் மற்றோருக்கும் ஏன் சிறுவர்களுக்கே தெரிந்தும் தெரியாமலும் அவர்களுக்குள் புகுந்து விடுகின்றன.
இன்று பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி இருக்கிறது. சில வீடுகளில் கணனியும் இருக்கிறது. சிறுவர்கள் இயல்பாகவே தொலைக்காட்சி மற்றும் திரப்படங்களைப் பார்ப்பது டி.வி. கேம்களை விளையாடுவதை விரும்புகிறவர்கள் விசேடமாக கார்டூன்களை பார்கின்றனர்.
இப்போது வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் வன்முறையையும் அதனை சார்ந்த தன்மையையும் கொண்டதாகவே இருக்கின்றன. அதுவும் வன்முறைத் தன்மையை மிகைப்படுத்தியே காட்டுகின்றது.
தலை, கை, கால் என மனித உறுப்புகளை கொடூரமாக வெட்டுதல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு, வாகனங்களை மோதவிடுவது, கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்குதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என இவ் வன்முறைச் சம்பவங்களை நீட்டிக்கொண்டே இருக்கலாம். ஹீரோயிசம் தலைவிரித்தாடுகிறது.
மனிதனுடைய கோரமான உணர்வுகளையே பெரும்பாலான திரைப்படங்கள் காட்டுகின்றன. சிறுவர்களுக்கெனவே பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் திரைப்படங்களும் கார்ட்டூன்களும் டி.வி. கேம்களும் இந்த நிலையில் தான் இருக்கின்றன. அங்கே மனிதர்கள், இங்கே பொம்மைகள் வித்தியாசம் அவ்வளவே தான். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று விட்டது ரெஸ்லின்.
இவ்வாறு வன்முறைகளை மிக அழகாக உருவாக்கி அதில் ஹீரோயிசத்தை கலந்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள், கார்ட்டூன்கள், டி.வி. கேம்கள் என்பவற்றைப் பார்த்து அதில் ஈர்ப்புறும் சிறுவர்களின் மனதில் தானும் ஒரு ஹீரோ என்றடிப்படையில் அவர்களுக்குள் வன்முறை எண்ணங்கள் மிக எளிதாகவே பரவுகின்றன.
டிவி கேம்கள் கூட ஆட்களை கொல்பவையாகவும் தாக்கி மகிழ்வனவாகவும் உள்ளன. எனவே அதற்கேற்றாற்போல் தாம் விளையாடும் விளையாட்டுப் பொருட்களும் அமைந்து விடுகின்றன.
துப்பாக்கி, யுத்த விமானங்கள், யுத்த டாங்கிகள், இராணு பொம்மைகள் என்பவற்றையே இன்று அதிகளவான சிறுவர்கள் விரும்புகின்றார்கள். இது ஒன்றே அவர்களின் மனதில் எந்தளவு வன்முறை எண்ணங்கள் பரவியுள்ளன என்பதற்கு மோசமான சான்றாகும்.
மனித உணவுகளுக்கு மதிப்பளிக்கும் விடயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதனை உணர்த்தும் திரைப்படங்களையும், கார்ட்டூன்களையும் அவர்கள் பார்ப்பதற்கு வழி செய்து கொடுக்கலாம்.
அல்லது குறித்த திரைப்படம், கார்ட்டூன் தொடர்பாக அவர்களுக்கு விளங்கும் வகையில் தெளிவான விமர்சனங்களை சொல்லலாம் சிறந்த சிறுவர் பத்திரிகைகளை அவர்களுக்கு வாசிக்க கொடுக்கலாம். ¡லைக்காட்சியில் இருந்து பிள்ளைகளை தூரமாக்கி வேறு விளையாட்டுக்கள் பொழுது போக்களின் பக்கம் அவர்களின் கவனத்தை திருப்ப முயலுங்கள்.