Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,347 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி!

ஐம்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் முதல் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய பணத்தில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது…” என்று நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

 ஊழல் என்பது சரித்திரத்தில் புதிய செய்தி அல்ல. அதனுடைய பரிமாணம் மாறும்போது சில சரித்திரத்தில் இடம்பெறும் தன்மையைப் பெறுகிறது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அமைச்சரவை அமைச்சர்களின் மனதில் ஊழல் புரிந்து தமக்குப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. ஏனெனில், அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர்களில், வருவாய் ஈட்டும் தொழில்களை விடுத்துச் சிறை சென்றவர்கள் பலர்.

 “ஊழலை ஒழிப்பேன்…’ என்று சூளுரைத்தவர் குல்ஜாரிலால் நந்தா என்ற மத்திய உள்துறை அமைச்சர். இந்திய நாட்டில், “ஊழல் புரிந்து சொத்து சேர்த்தாய்’ என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டவர் ராபர்ட் கிளைவ். பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநிறுத்த கிளைவ் எவ்வளவுதான் உதவியிருந்தாலும், சட்டத்துக்குப் புறம்பாக அதிகார துஷ்பிரயோகம் செய்து பணம் குவித்ததற்காக அவர் அங்கு நிந்திக்கப்பட்டார்.

 பல அரசு அலுவலகங்களில் “தட்சிணை’ கொடுக்க வேண்டிய நிலையில்தான் அன்றும் மக்கள் இருந்தனர். “ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க…’ என்ற பழமொழியே அரசு அலுவலக நிலையை உணர்த்தும். ஜனநாயகம் வலுப்பெற்று வந்தபின் பற்பல அரசு அலுவலகங்களுக்கும் பரவியது ஊழல். காசு கொடுத்தால் காரியம் என்ற நிலை வந்தது. பதிவுத்துறை அலுவலகங்களில் காசு கொடுக்க வேண்டியதற்கான காரணம் என்னவென்பது புரியாத புதிர்! “பணம் கொடுத்து வேலையை வாங்கினேன்’ என்றாலும் மக்களிடமிருந்து அதை வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

 வாக்காளப் பாமரனின் கையிலிருக்கும் வாக்குச் சீட்டுக்கு மவுசு கூடியபோது அவரது வாக்கைப்பெற அரசியல்வாதிகள் “மோடி மஸ்தான்’ வேலைகளைச் செய்யத் தலைப்பட்டனர். தன் நலத்துக்காகவும் வாக்காளரின் வாக்கைப் பெறவும் அரசியல்வாதிகளின் ஊழல் ஆயிரக்கணக்கில் தொடங்கி, லட்சம், கோடி என்று பயணம் மேற்கொண்டது. ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி ரூபாய் என்கிற அளவில் ஊழல் மலிந்ததற்கு ஆட்சிபுரியத் தலைப்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் போக்கு காரணமாகியது. ஊழல் மெகா ஊழலாக உயர்ந்துள்ளது.

 “ஊழல் சுழற்சி’ என்று சொல்லும் அளவில் தனியார்துறை தொழில் மன்னர்கள், அரசியல்வாதிகளில் பலர், அரசு அலுவலர்களில் அநேகர், இடைத்தரகர்கள் என்று ஒரு சுழற்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமது நாடு ஊழல் மலிந்த நாடுகளில் குறிப்பிடும்படியான நாடாக மாறியுள்ள நிலை, பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

 இதைப்போக்க முடியுமா எனப் புரியவில்லை. தடுக்க முயலலாம். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுபோல், அதற்கு யார் முன்செல்ல வேண்டும்? அரசியல்வாதிகள்தான்! பொதுச் சேவைக்குத் தன்னார்வமாகவரும் அவர்களுக்குப் “புகழ்’ மட்டும்தான் கைம்மாறாகக் கிடைக்க வேண்டும். வருமானத்துக்கு விஞ்சிய சொத்துகளுக்கும் செலவுகளுக்கும் அவர்களிடம் பணம் கைமாறக்கூடாது. அப்போதுதான் தனியார்துறை தொழில் மன்னர்களும் அரசு அலுவலர்களும் கையூட்டு வழங்குவதையும், பெறுவதையும் தடுக்கும் தார்மிக உரிமையை அவர்கள் பெறுவார்கள். வெறும் வாய்ச் சொற்களால் அது முடியாது; செயலில் வெளிப்படையாகக் காட்ட வேண்டும். அதற்கு ஒரு சாதாரண அடையாளம் சாமானியனாக, எளிமையாக வாழ்வதாகும்.

 இந்த நிலையில் தென்னிந்தியாவில், கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தில் பணியாற்றிய ஓர் ஆங்கில அதிகாரி நினைவுக்கு வருகிறார்.

 தன் வருமானத்துக்குள்பட்டு வாழ்ந்தவர் அவர். தென்னிந்தியாவை குறிப்பாகத் தமிழகத்தை நேசித்தவர். தமது 67 ஆண்டுகால வாழ்வில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்தியாவில் பணிபுரிந்தவர். கவர்னராகவும் பணியாற்றிய அவரது சிலை சென்னையில் கம்பீரமாக நிற்கிறது. அவர்தான் சர் தாமஸ் மன்றோ! அவர் உதவி கலெக்டர் முதல், முதல் கவர்னர் வரை நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் புரியாதவர்;  ஊழலைப்பற்றி அவர் கூறிய சில கருத்துகள் வருமாறு:

 “கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்), நாடு முன்னேறும் என்று எப்படி நினைப்பார்?…’ (உதவி கலெக்டராக 1795-ல் அவர் கூறியது).

 “…முன்பெல்லாம் கவர்னரின் தனிச் செயலாளர்கள் பணக்காரர்களிடமிருந்து “மொய்’ வாங்கி, தனது எஜமானருக்குச் சென்றடைய வைப்பர். இப்போது எனது தனிச் செயலாளருக்கு அந்த வேலை இருக்காது என நினைக்கிறேன்…’ (கவர்னராக இருந்தபோது அவர் எழுதியது).

ஒருமுறை தாமஸ் மன்றோவின் தந்தை, தன் மகனின் பதவி உயர்வு சம்பந்தமாக இங்கிலாந்தில் பிரமுகர் ஒருவரை அணுகினாராம். அதைக் கேள்வியுற்ற மன்றோ, தன் தந்தையைக் கடிந்துகொண்டு கடிதம் எழுதினார். “… அந்தப் பிரமுகர் எனக்கு உபகாரம் செய்ய முனைந்தால், அவரது செயல் மிகவும் முறையற்றது…'(1795).

 மன்றோ இதை எழுதியதற்கு 50 ஆண்டுகளுக்கு முன், ராபர்ட் கிளைவ், சென்னையிலிருந்து தன் தந்தைக்கு கடிதம் எழுதினார்….

 “எப்படியாவது உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கு மேல் உத்தியோகத்தை வாங்கித் தாருங்கள்… அதோடு வங்காளத்துக்கு மாறுதல் பெற்றுத்தந்தால் நலம். அங்கு போனால் சம்பளமும் பிற வழி வருமானமும் கூடும்…’ இது பிழைக்கத் தெரிந்த ஓர் ஆங்கிலேயனின் வழிமுறை.

 நாற்பது ஆண்டுகாலத்துக்கும் மேலாக தென்னிந்தியாவில் பணியாற்றிய மன்றோ, தனது 67-ம் வயதில் தாயகம் திரும்பத் தவியாய்த் தவித்தார். கவர்னர் ஜெனரல் பதவியைத் தர இங்கிலாந்து அரசு விரும்பியது. வேண்டாம் என்று நாடு திரும்ப முடிவெடுத்தார். இரவு பகலாக 40 ஆண்டுகள் பணியாற்றிய அவர், ஓய்வுபெற விரும்பினார். நாடு திரும்பும் முன், தான் ஆறாண்டு காலம் கலெக்டராகப் பணிபுரிந்த கடப்பைப் பகுதிக்குச் சென்றுவர விரும்பினார். அப்போது, அப்பகுதியில் காலரா பரவியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்தனர். இருந்தும் சென்றார்… மக்களைக் கண்டார். ஆனால், காலரா அவரைத் தொற்றிக் கொண்டது. 1827-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி காலையில் காலரா தாக்கியது. அன்றிரவே மரணமடைந்தார்.

 தமிழ்நாட்டின் சேலம் பாரமஹால் பகுதியையும், தொண்டைமண்டலத்தையும், காவிரியையும் அவர் சிலாகித்துப் பேசியது மனிதநேயத்தின் மாறா உணர்வை வெளிப்படுத்தும். கடப்பைப் பகுதியில் அவரை “மன்றோ ரிஷி’ என்றே மக்கள் போற்றினர்.

 “மன்றோலப்பா’ என்று தம் மொழியில் அவர் பெயரை அழைத்தனர். சிலர் தம் குழந்தைகளுக்கும் அந்தப் பெயரைச் சூட்டினர். அவ்வாறு மறக்க முடியாத மனிதர் மன்றோ.

 தன்னைப் பார்க்க வரும் அரசியல் தலைவர்களிடம் மன்றோவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தூண்டுவாராம் ராஜாஜி. ராஜ்மோகன் காந்தி எழுதிய “ராஜாஜியின் கதை’ என்னும் நூலில், இங்கிலாந்திலிருந்து இந்திய மண்ணுக்கு வந்த சிறந்த மனிதர்களில் மன்றோ ஒருவர் என்று குறிப்பிடுகிறார்.

 1946-ல் சென்னைக்கு கவர்னராக வரவிருந்த “நயி’ என்பவரிடம், மன்றோவின் வாழ்க்கை வரலாற்றைக் கண்டிப்பாகப் படிக்கச் சொன்னாராம் இங்கிலாந்தின் அன்றைய பிரதமர் அட்லி. அந்த அட்லியே சைமன் கமிஷன் உறுப்பினராக இந்தியாவுக்கு வருமுன் மன்றோவின் வரலாற்றைப் படித்தாராம்.

 மனிதர்களின் சிலைகளை சாலைகளிலும் முக்கிய இடங்களிலும் எதற்காக வைக்கிறோம்? அவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டாமா?

நன்றி: தினமணி