Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,805 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை

எல்லோரும் கடவுளின் குழந்தைகள்.ஆனால் அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கமுடியாது என்பதற்காக தாயைப் படைத்தான் என்பார்கள் பெரியவர்கள்.தாயை தெய்வம் என்பார்கள்.அதுபோல கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்..அந்த கடவுள் என்று சொல்லப் பட்ட இயற்கை..உண்ண உணவு,உடுக்க உடை யும் ஏகத்திற்குக் கொடுத்துள்ளது.ஆனால் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து அதனால் கொடுக்க முடியாததால்..விவசாயிகளை படைத்தது என்பேன் நான்.

ஆம்..இப் பூமியில் வாழும் அனைவருக்கும்..மேட்டுக்குடியாயினும் சரி..பரம ஏழையானாலும் சரி..படித்தவனாயினும் சரி பாமரன் ஆயினும் சரி..தொழிலதிபரானாலும் சரி..கூலியாளி ஆனாலும் சரி..அனைவருக்கும்..நெற்றி வேர்வை நிலத்தில் விழ..மண்ணிலே நெல் மணி எனும் முத்தெடுத்துக்
கொடுப்பவன் அவன்.

ஆனால்..சமீப காலமாக அவன் வாழ்வில் நிம்மதி இல்லை..பல்லாயிரக்கணக்கானோர் வறுமை தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். காரணம்..எல்லாவற்றிலும் புகுந்துவிட்ட செயற்கத் தனம்..விவசாயத்திலும் புகுந்து விட்டதுதான்..ஆம்…இயற்கை வேளாண்மை அழிந்து..ரசாயன உரங்கள், மரபணு ஆகியவை வேளாண்மையில் புகுந்துக் கொண்டதே காரணம்.

ஆனாலும்..அதை ஈடுகட்ட விவசாயிக்கு அரசு தரும் உதவியும் அவன் ஏற்கமாட்டான்..காரணம்..அவன் கையைத்தான் பிறர் எதிர்பார்க்க வேண்டும்..பிறர் கையை அவன் எதிர்பார்க்க மாட்டான்.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (உழவு: 1035)

(தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர்,பிறரிடம் சென்று கையேந்த மாட்டார்.தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவர்)

இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் போன்றது.அதே நேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட.அரசுகள் அக்கறையுடன் செயல் பட்டு நில வளத்தை ஆரோக்கியமாக பாராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்யும்.விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எப்போதும் திகழும் என்பது உலக முழுதும் உள்ள இயற்கை விவசாயிகளின் ஆத்ர்ஷ புருஷராகத் திகழ்ந்த புகோகாவின் வார்த்தைகள்.

இயற்கை வேளாண்மைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் ‘வேளாண்மை’ என்பதற்கான பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உதவி ஆம்..திருவள்ளுவர் வேளாண்மை என்ற சொல்லை உதவி என்பதற்கு பயன்படுத்தினார்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு (விருந்தோம்பல்: 81)

இல்லறத்தைப் போற்றி வாழ்வது..விருந்தினரை வரவேற்று அவர்க்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காகவே.

அதுபோல இயற்கையும்..மனிதன் வாழ செய்யும் உதவியே இயற்கை வேளாண்மை.ஆம்..மனிதன் வாழ இயற்கை தன் செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து..மண் வளத்தையும்,சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப் படுத்தும் முறை இயற்கை வேளாண்மை எனலாம். சுருங்கச் சொன்னால்..நிலம்,நீர்,மரம்,பூச்சி இவைகளை அப்படியே விட்டு விட்டு விளைச்சல் பெருகுவதே இயற்கை வேளாண்மை எனலாம்.

இது வெற்றி பெற வேண்டுமாயின்..மண்,நீர் வளம் சிறப்பாக அமையவேண்டும்.மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை பயன்படுத்தியும்..வீடுகளிலிருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள். அழுகிய காய்கறிகள் கொண்டு கம்போஸ்டு உரம் தயாரித்தும்..மண் புழுவை உபயோகித்தும் இயற்கை உரங்களைப் பெற வேண்டும். பாரம்பரிய முறை விவசாயம் செய்ய ஆட்கள் தேவை.இயந்திரங்களுக்குப் பதிலாக கால் நடைகளை உபயோகிக்கும் போது மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதனால் வேலையில்லா பிரச்னை..வறுமை காரணமாக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற மாட்டான் விவசாயி.

இயற்கை விவசாயம் செய்கையில் விவசாயிக்கு தன் நிலத்துடன் ஆன உறவு நெருக்கமாகிறது.தன் நிலத்தில் எந்த இடத்தில் உயிர் சத்துகள் உள்ளன..எந்த நில அமைப்பு மோசமாக உள்ளது என அவன் அறிந்திருப்பான். சாணம், எரு போன்றவை, தொழு உரம்,இவற்றை மக்கச் செய்து பயிருக்குப் போடுவதால் மகசூல் கூடுவதுடன், மண் வளம் காக்கப் படுகிறது. இலைகள்,அழுகிய காய்கறிகள் , சோளத் தட்டு,கடலைஓடு இவற்றை மக்கச் செய்வதால் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.

ஒரே பயிரை திரும்பத் திரும்ப பயிரிடாமல் மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் நிலத்திற்கு பயிர் சுழற்சி கொடுப்பதுடன்..மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.பூச்சி நோய் தாக்கம் குறைகிறது.இப்படிச் செய்வதால் ஆண்டுக்கு ஒரு முறை உளுந்து,பாசிப்பயிறு,காராமணி ஆகியவற்றை பயிரிடலாம்.

நிலத்தின் மண் பரிசோதனை மிகவும் அவசியம்.மண்ணில் உள்ள சத்துகள் பற்றி அறிந்து அம் மண்ணிற்கு ஏற்ற உரம் இடுவதால் மகசூலை அதிகரிக்கலாம். சிக்கிம் மாநிலத்தில் 2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரசாயன விவசாயமான தற்போதைய விவசாயத்திற்கு விடை கொடுக்கப்படும்.இம் மாநிலத்தில் 1997 முதல் பிளாஸ்டிக்..மற்றும் ரசாயன கழிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வேதியியல் விவசாயத்தை ஒழித்துக் கட்ட வேதியியல் ரசாயன மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறினாலும் இவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பலன் உடனடியாகக் கிடைக்கவில்லை.ஆனால் தொடர் முயற்சியால் தற்போது மலடாயிருந்த மண்வளம் மீட்கப்பட்டு..நற்பலன்கள் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளனவாம். சிக்கிமின் இந்த வெற்றி மெதுவாக இமாச்சல பிரதேசம்,அந்தமான் நிகோபார்
தீவுகளிலும் பரவத் தொடங்கிவிட்டது.

வாழும் சூழலும்..உழவும்..இரண்டுமே மனித வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. பூச்சிக் கொல்லி ரசாயனம்..உப்பு உரங்கள் இவற்றால் லாபமும் கிடையாது, விவசாயிக்கும் கடன் அதிகரிக்கும், விளை நிலமும் தரிசு நிலமாகும்.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுகையில் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி காடாக இருந்தது.ஆனால் 1986 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட ராக்கெட் 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியுள்ளது.அதிலும் மூன்று விழுக்காடு முற்புதர்கள்.(உலகளவில் ஐந்தில் நான்கு பங்கு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன..)

இயற்கை வழி மேலாண்மை என்பது யூரியாவிற்கு பதில் சாணி போடுவதில்லை.உயிர் இல்லா இயற்கை..உயிர் உள்ள இயற்கை இவற்றிற்கிடையே உள்ள உறவுகளை அறிந்து பயிர் செய்வது.எடுத்துக் காட்டாக பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம்.அவற்றை உண்ணும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம்.பூச்சிகளைக் கொல்ல நஞ்சு தெளிக்கையிலே நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்தன.

ரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்த உற்பத்தி செய்யப்பட்டது அல்ல.உலகப்போரின் போது போர்க்களத்தில் வெடி உப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு..போரில்லாக் காலத்திலும் லாபம் உண்டாக்கவே ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.அதுபோல பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொல்ல கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.இரண்டாவது உலகப் போரில் ரஷ்ய படை வீரர்களைக் கொல்ல கிணற்றிலும்,ஆற்றிலும் கொட்ட ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவை.போர் முடிந்த பின்னும் இக் கம்பெனிகள் லாபம் ஈட்ட பூச்சி மருந்து என விவசாயிகளின் தலையில் இவை கட்டப்பட்டன.

இதன் விளைவாக தானியம்,பருப்பு,காய்கறி,இறைச்சி,பால் அவ்வளவு ஏன் ..தாய்ப்பாலும் நஞ்சானது.இதனை 1984ஆம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது.ஆனால் 26 ஆண்டுகள் கடந்தும்..இதுவரை இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு பற்றி அரசு புதிதாக எதுவும் முயற்சி எடுக்காதது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.

இன்று..

நிறைய விளைச்சல் எடுத்த நிலம் வளமிழந்து தரிசாகி விட்டது.விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியாத விவசாயிகள் வேலை தேடி தங்கள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். பல விளைச்சல் நிலங்களில்..தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு விட்டன. பல விளைச்சல் நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டுவிட்டன. பல விளைச்சல் நிலங்களில் குடியிருப்பிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன.

இதையெல்லாம் அறிந்தும் இன்று விஞ்ஞானிகள் மண்ணுக்கும்,உழவிற்கும்,மனித குலத்திற்கும் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களையும், மரபணு மாற்ற விதைகளையும் பரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். வணிகத்திற்காக..ரசாயன உரங்கள்,எந்திர வேளாண்மை ஆகியவை புகுந்ததால் தான்
வேலையில்லாத் திண்டாட்டமும் உருவாகிறது, விவசாயிகளும் அழிகின்றனர் காடுகள் அழிந்ததால் மழை அழிந்தது.சாகுபடி இழப்பு,வடிகால்கள்,ஏரிகள்,கண்மாய்கள் தூர் வாராததால் வெள்ளப் பெருக்கும்..சாகுபடி இழப்புமேற்படுகிறது.

65000 ஏரி,கண்மாய்,குளம்,குட்டைகள் இருந்தன தமிழகத்தில் மட்டும்.ஆனால் இன்று பெரும்பான்மையானவை வரப்புகள் வெட்டப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், அரசு குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. பூமியை ஆழமாக ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணீரை எடுத்து, தென்னை,கரும்பு பயிர் சாகுபடியாகின்றன.

மரபணு கத்திரிக்காயில் பூச்சி இருக்காதாம்.எப்படி இருக்கும்..அதில் நச்சுத்தன்மை உள்ளதே!அதனுள் பூச்சி எவ்வாறு வளரும். ஆனால் இயற்கை வளத்தில் பிறந்த கத்திரிக்காயில் பூச்சியைக் கொல்லும் விஷம் இல்லைஅதில் உள்ள புழுவை..நாம் காயை நறுக்குகையில் அப்புறப்படுத்தலாம்.ஆனால் அதேபோல நஞ்சை அப்புறப் படுத்த முடியாதே.

மரபணு மாற்று..

உணவை நஞ்சு உள்ளதாக இருக்க வைக்கும் மனித உடலில் ஒவ்வாமையை உண்டு பண்ணும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும் ஆண்மை அற்றவனாக ஒருவனை ஆக்கும் பீ.டி.மரபணு கத்திரிக்காய் மட்டுமல்ல வெண்டை,நிலக்கடலை,தக்காளி,சோளம்,கடுகு,நெல்,உருளைக் கிழங்கு,வாழை என அனைத்துப் பொருள்களிலும் மாசை ஏற்படுத்தும். மரபணு புகுந்து விட்டால் எதையும் இயற்கையில் விளைந்தது என சொல்ல முடியாது. சர்க்கரை நோய்,புற்று நோய்,ஆண் மலடு,நரம்புக் கோளாறு,சளித்தொல்லை ஆகியவற்றை இவை ஏற்படுத்தும்.

சரி..இயற்கை வேளாண்மைக்கு உடனடியாக மாற முடியுமா?

முடியும்.. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால், முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும்.வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும்.

வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும் வேதியல் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக, உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் பயன் படுத்தப் பட வேண்டும்.டிராக்டர்களுக்குப் பதிலாக கால்நடைகளைக் கொண்டு உழ ஆரம்பிக்கலாம். நீர்ப்பாசனத்தை நம்பினால் பருவகாலங்களில் மழையின் அளவைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பயிரை பயிரிடலாம்.

விவசாயத்தில் இதனால் அதிக உள்ளூர் மக்கள் ஈடுபட வேண்டியிருக்கும்.இதனால் விவசாயிகள் நகரங்களுக்கு வெளியேறுவது குறையும். மூன்று வருஷங்களிலிருந்து..ஐந்து வருஷங்களுக்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும்.மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பயிருக்குக் கூடுதல்
விலை கிடைக்கும்.ஆனால் மண்வளம் எப்போதும் பாதுகாக்கப் பட வேண்டும்.

இதற்கு ஒரு உதாரணம்..கியூபா.. கியூபாவில் நாடு முழுதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியது.மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும் அரசு பண்ணைகளும் பயிர் பாதுகாப்பிற்காக பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தன. மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப் படுத்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டன.களைகளைக் கட்டுப் படுத்த பயிர் சுழற்சி கடைபிடிக்கப் பட்டது.

மண்ணை வளப்படுத்தி..கால் நடைகளிலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும்,தாவர உரங்களை பயன்படுத்தியும், வீட்டுக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தும்..மண்புழுக்களைக் உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரித்து பயன்படுத்தினர்.உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை உரங்கள் பயன்படுத்தப் பட்டன.

இவ்வாறு மிகப் பெரிய அளவிற்கு இயற்கை வேளாண்மைக்கு கியூபா மாறாமல் இருந்திருந்தால்..சோமாலியாவில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை இங்கும் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் இயற்கை வேளாண்மை நிலையை உருவாக்க.. மரம்,செடி வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை வேளாண்துறை இலவசமாக தீர்த்து வைத்து..உதவவும் செய்கிறது.

விவசாயத்தில் ஈடுபட இளஞர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இளைஞர்கள் அத்துறையில் நிறைய சாதிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்கு வந்து விவசாயத்தைக் கவனிக்க வேண்டும்.அவர்களை அரசும் ஊக்குவிக்க வேண்டும். .மலைக்காடுகள் அழியாமல் ..பசுமைக் காடுகளை உருவாக்கி..இயற்கை வளத்தை மீட்க வேண்டும்.

இப்போது தமிழகத்தில் நம்மாழ்வார் போன்றவர்கலும்..கர்நாடகாவில் பாலேக்கர் ஆகியவர்களும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர். நாடு முழுதும் இயற்கை விவசாயம் மீண்டும் உருவாகி..விவசாயிகள் வாழ்வு தழைத்து..தற்கொலைக்கு அவர்களை விரட்டாத நாள் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும்..

கடைசியாக ..பல அரசுகளை தன் குடையின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவன்
விவசாயி..அவனையும்..அவனால் பயிடப்படும் ..நம் வயிற்றை நிரப்பும் கடமை நமக்கு உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (உழவு 1031)

(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.ஆகவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

நன்றி: மணற்கேணி