Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2011
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,020 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை வாழை சமையல்

பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…

திருமணம் தொடங்கி நம்முடைய அத்தனை மங்களகரமான நிகழ்வுகளிலும் ஓர் அங்கமாகவே வந்து கொண்டிருப்பதில் வாழைக்கு நிகர் வாழைதான். அதுமட்டுமல்ல… பல்வேறு நோய் தீர்க்கும் மூலிகையாகவும் அது செயல்படுவது, அதன் சிறப்புத் தகுதியாகும். அதனால்தான், ‘கற்பக விருட்சம்’ என்று மிக உயரிய இடத்தில் வைத்து வாழையைப் போற்றுகிறார்கள்.

வாழையின் இந்தப் பாகம்தான் என்றில்லாமல்… இலை, தண்டு, பூ, காய், பழம் என அத்தனை பாகங்களும் முழுமையாக சமையலுக்குப் பயன்-படுவது… சிறப்போ சிறப்பு!

இதோ… வாழைத்தண்டு சூப், வாழைத்தண்டு பொரியல் என உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கான ரெசிபிகள்; வாழைக்காய் போண்டா, கட்லெட் என மாலை நேர நொறுக்குத் தீனி பிரியர்களுக்கான ரெசிபிகள்; வாழைப்பழ அல்வா, பனானா கேக் என குட்டீஸ்களை குதூகலிக்க வைக்கும் ரெசிபிகள் என்று விதம்-விதமாக சமைத்து ஆச்சரியமூட்டுகிறார் ‘சமையல் கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.

“சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பும்போது, அப்பா ஒரு டஜன் வாழைப்பழம் வாங்கி வர, ‘அட, மதியமே நம்ம பழவண்டிக்காரர்கிட்ட ரெண்டு டஜன் வாங்கி வச்சுட்டேனே…’ என்று நொந்து கொள்வார் அம்மா. பிறகென்ன, டேபிளிலேயே அழுகி, கொசு மொய்த்துக் கொண்டிருக்கும். ஆனால், வாழைப்பழ கஸ்டர்டு, வாழைப்பழ பஜ்ஜி என செய்து கொடுத்தால் நிமிடத்தில் அத்தனை டஜனும் காணாமல் போய்விடும்” என்றபடி பார்த்துப் பார்த்து பரிமாறுகிறார் வசந்தா.

பிறகென்ன… நீங்களும் அசத்துங்க!

வாழைப்பழ ஜாம் ரோல்ஸ்

தேவையானவை: கெட்டியான ரஸ்தாளி (அ) பச்சை வாழைப்பழம் – 2, ஏதேனும் ஒரு ஃப்ரூட் ஜாம் – அரை கப், முந்திரி, பாதாம் (பொடித்தது) – ஒரு கப்.

செய்முறை: பழத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஃப்ரூட் ஜாமில் சிறிதளவு சுடுதண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும். நறுக்கிய வாழைப்பழத்தை அந்தக் கலவையில் தோய்த்து எடுக்கவும். பிறகு, பொடித்து வைத்துள்ள முந்திரி, பாதாமில் ஒருமுறை உருட்டி எடுத்துப் பரிமாறவும்.

இது, திடீர் விருந்தாளிகளுக்கான உடனடி டெஸர்ட்!


வாழைத்தண்டு சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். அதனை, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும்; சிறுநீரகக் கல் கரையும்.


வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கெட்டித் தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும். பிறகு, தண்ணீரை வடித்து, சீரகம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன், வேக வைத்த வாழைத்தண்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நன்றாகக் கடைந்த கெட்டித் தயிரை விட்டுக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.


பாசிப்பருப்பு – வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். அதனுடன், வாழைத்தண்டு, ஊற வைத்த பாசிப்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். வெந்ததும் இறக்கி, தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்


வாழைப்பூ வடை

தேவையானவை: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், கடலைப்பருப்பு – 2 கப், சோம்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை குக்கரில் போட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு வடை பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், வேக வைத்த வாழைப்பூவை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அரைத்த கலவையுடன் வெங்காயம், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். அந்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடையாகத் தட்டி, எண்-ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இதற்கு, தேங்காய் சட்னி சூப்பர் சைட் டிஷ்!


வாழைப்பூ உசிலி

தேவையானவை: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு (கலந்தது) – கால் கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்-ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்க-வும். அதனுடன், அரைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். உதிரியாக வந்ததும், வேக வைத்த வாழைப்பூ, உப்பு சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளற.. வாழைப்பூ உசிலி தயார்!


தக்காளி-வாழைப்பூ கிரேவி

தேவையானவை: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப், தக்காளிச் சாறு – ஒரு கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… வாழைப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வெந்து கொண்டிருக்கும் வழைப்பூவுடன் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு… தக்காளிச் சாறு, உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கெட்டியாக வந்ததும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


வாழைக்காய்-கசகசா பொரியல்

தேவையானவை: நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகள் – 2 கப், கசகசா – 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து… காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், அரைத்த கசகசா கலவை போட்டு நன்கு கிளறவும். மணம் வந்ததும், பொரித்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்-கள் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: வாழைக்காய் – 2, நறுக்கிய பச்சை மிளகாய் – 2, முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை இரண்டாக நறுக்கி வேக விடவும். வெந்ததும், ஆற வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு, முந்திரித் துண்டுகள் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, மஞ்சள்-தூள், உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய், உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து பரிமாறவும்.


வாழைக்காய் மிளகு கூட்டு

தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4 , மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். புளிக் கரைசலில் வாழைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் தேங்-காய் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு, அரை கப் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள அரை கப் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, மிக்ஸியில்அரைத்த கலவை, புளித் தண்ணீரில் வேக வைத்த வாழைக்காய், உப்பு போட்டு கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.


பனானா கேக்

தேவையானவை: கெட்டியான வாழைப்பழம் – 1, அரிசி மாவு – முக்கால் கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், வாழை இலை, செர்ரிப்பழம் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: தேங்காய்ப்பாலில் உப்பு, சர்க்கரை, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். இட்லி மாவு பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். வாழைப்பழத்தை, 2 இஞ்ச் நீளத்துக்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை, ஒவ்வொன்றாக மாவு கலவையில் நனைக்கவும். அந்தத் துண்டுகளை வாழை இலையில் வைத்து மெதுவாக மடித்து, இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். செர்ரிப் பழம் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.


வாழைக்காய் போண்டா

தேவையானவை: வேக வைத்து, தோல் உரித்து, மசித்த வாழைக்காய் – 2 கப், தோசை அல்லது இட்லி மாவு – 2 கப், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய பச்சை மிளகாய் – தலா 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பச்சைப் பட்டாணி – கால் கப், நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை: வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும். பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுக்க.. வாழைக்காய் போண்டா தயார்!

இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!


வாழைக்காய் பெப்பர் ரோஸ்ட்

தேவையானவை: கெட்டியான வாழைக்காய் – 2, மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.

ரெகுலரான வாழைக்காய் சிப்ஸில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும்.


வாழைப்பழ அல்வா

தேவையானவை: நன்கு பழுத்த வாழைப்பழம் – 4, சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், – முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரியை வறுத்தெடுக்கவும். அதே பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். நிறம் மாறியதும், சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கிளறி, முந்திரி சேர்க்கவும். விருப்பப்பட்டால், மற்ற பழங்களையும் சேர்க்கலாம்.

விருந்தாளிகளுக்கு உடனடியாக செய்து கொடுக்கக்கூடிய சுவையான டிஷ் இது!


வாழைப்பூ துவையல்

தேவையானவை: ஆய்ந்து, சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 4, புளி – 50 கிராம், தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம், ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் புளி, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க… வாழைப்பூ துவையல் ரெடி! விரும்பினால், வாழைப்-பூவை வதக்கி அரைக்கலாம்.

இதை சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.


பனானா ஜெல்லி

தேவையானவை: வாழைப்பழத் துண்டுகள் – அரை கப், சர்க்கரை – முக்கால் கப், சைனா கிராஸ் பவுடர் ( டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சைனா கிராஸ் பவுடரைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் ஊற விடவும். பிறகு, அதனை மிதமான தீயில் வைத்து, 2 கப் தண்ணீர் சேர்த்து சுட வைக்கவும். அதில், சர்க்கரையைப் போட்டு மெதுவாக கரைய விடவும். பாத்திரத்தை இறக்கி லேசாக ஆற வைத்து, இளம் சூட்டில் இருக்-கும் போது, வாழைப்-பழத் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து, கிண்ணங்களில் விட்டு, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு, ‘ஜில்’லென்று பரிமாறவும்.


சீரக வாழைக்காய்

தேவையானவை: துண்டுகளாக நறுக்கி, வேக வைத்த வாழைக்காய் – 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைத்தண்டு சாலட்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், நறுக்கிய வெள்ளரிக்காய், குடமிளகாய் – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வாழைத்தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இதனை சாப்பிடலாம்.


வாழைத்தண்டு பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், மாதுளை முத்துக்கள் – கால் கப், பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன், புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப், கடுகு – கால் டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் கடைந்த தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



வாழைக்காய் குணுக்கு

தேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மூன்று வகை பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைக்கவும். அதனுடன்… மசித்த வாழைக்காய், அரிசி மாவு, தேங்காய்ப்பல், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.


வாழைப்பழ ஸ்மூத்தி

தேவையானவை: பால், தயிர் – தலா ஒரு கப், வாழைப்பழம் – 2, பாதாம்பருப்பு – 8, சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்-களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுக்க.. நுரை பொங்க வரும். அதனை உடனே பரிமாறவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்; எதிர்பாராத விருந்தி-னர்களுக்கு உடனடியாக தயார் செய்து கொடுக்கலாம்.


பனானா பஜ்ஜி

தேவையானவை: மைதா, சர்க்கரை – தலா 100 கிராம், வாழைப்பழம் – 4, சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மைதாவில் சீரகம், சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வாழைப்பழத்தை நீளவாக்கிலோ அல்லது வட்டமாகவோ நறுக்கவும். வாழைப்பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து, பரிமாறவும்.

வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பனானா பஜ்ஜி.


வாழைத்தண்டு ஊறுகாய்

தேவையானவை: மெல்லியதாக, நீளவாட்டில் நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய், கடுகு தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து பயன்படுத்தவும்.

‘நறுக் நறுக்’ என்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த ஊறுகாய்.


வாழைக்காய் கோஃப்தா

தேவையானவை – உருண்டைக்கு: வாழைக்காய் – 6, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

கிரேவிக்கு: சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், தயிர் – ஒன்றரை கப், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் – தலா அரை டீஸ்பூன், கிராம்பு – 4, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 3, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை – உருண்டைக்கு: வாழைக்காய்களைத் தோலுடன் குழையாமல் வேக விடவும். ஆறியதும், தோல் உரித்து கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாகப் போட்டு பொரித்து எடுக்கவும்!

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்துக் கொள்ளவும். பிறகு… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்க்கவும். அதில், பொரித்த உருண்டைகளைப் போட்டு ‘சிம்’மில் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்.


வாழைக்காய் புளிக் கூட்டு

தேவையானவை: சிறு சிறு சதுரங்களாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், வேக வைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு (கலந்தது) – கால் கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – கால் கப்.

செய்முறை: புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டிய கரைசலை, அடி கனமான பாத்திரத்தில் விடவும். வாழைக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். வேக வைத்த பருப்புகளைச் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து இறக்கவும்.

இது சாதம், சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.


வாழைக்காய் க்ரிஸ்பீஸ்

தேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், அரிசி மாவு – 2 கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எள் – 2 டீஸ்பூன், இஞ்சி- பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, மசித்த வாழைக்காய் எள், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், நெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். அந்தக் கலவையை விரல் நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

இது, மாலை நேரத்துக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.


வாழைப்பழ கஸ்டர்டு

தேவையாவை: பால் — ஒரு லிட்டர், வாழைப்பழத் துண்டுகள் – 2 கப், வெனிலா கஸ்டர்டு பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு குளிர்ந்த பாலில் கஸ்டர்டு பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். மீதி பாலை, மிதமான தீயில் காய்ச்சவும். சிறிதளவு வற்றியதும், கரைத்து வைத்துள்ள கஸ்டர்டு பவுடரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். அப்போது பால் கெட்டியாகும். உடனே இறக்கி சர்க்கரை சேர்க்கவும். நன்றாக ஆறியதும், வாழைப்பழத் துண்டுகள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்று பரிமாறவும்.


வாழைக்காய் புளி கொத்சு

தேவையானவை: வேக வைத்த பாசிப்பருப்பு – 1 கப், வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், கெட்டியான புளிக் கரைசல் – கால் கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் புளிக் கரைசல், மஞ்சள்தூள், வாழைக்காய்த் துண்டுகள், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். அதனுடன், மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து மீண்டும் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

இதனை தோசை, உப்புமா போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.


வாழைக்காய் பராத்தா

தேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், கோதுமை மாவு – 2 கப், பச்சை மிளகாய்-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்த வாழைக்காய், பச்சை மிளகாய்-பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, சப்பாத்திக் கல்லில் இட்டு சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.


வாழைக்காய் கட்லெட்

தேவையானவை: வேக வைத்து, மசித்த வாழைக்காய் – 2 கப், பிரெட் ஸ்லைஸ் – 4, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன், பொடித்த அவல் – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு தண்ணீரில் பிரெட் ஸ்லைஸை ஒவ்வொன்றாக அமிழ்த்தி நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அவற்றுடன் மசித்த வாழைக்காய், பொடித்த வேர்க்கடலை, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டம், சதுரம் என பிடித்த வடிவங்களில் செய்து, அவல் பொடியில் இருபுறமும் புரட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, தயார் செய்தவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்க… வாழைக்காய் கட்லெட் ரெடி!

நன்றி:- சமையல் கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன் – நன்றி:- அவள் விகடன்