Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2011
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,520 முறை படிக்கப்பட்டுள்ளது!

லிபியா சொல்லும் சேதி!

நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்!

இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும். 1960களில் அந்த வாலிபன், எகிப்தின் கமால் அப்துல் நாசரை வாசித்தான்; சீனாவின் மாவோவை படித்துப் பார்த்தான். அப்பொழுது அவனின் வயது இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தான்! சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியவர்கள் இளையவர்களை மட்டம் தட்டி வைப்பதை அந்த இளைஞனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் இராணுவ வேலைக்குப் போனான். போனவுடன் தலைமைப் பதவியா கொடுப்பார்கள்? மூன்றாம் நிலைதான். அடுத்தவர்கள் தனது தலைவிதியை நிர்ணயிப்பதை அந்த “”இளம் ரத்தம்” ஏற்றுக் கொள்ளவில்லை. தனது 27 வயதில் தானே தன் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்க ஆரம்பித்தான்.

அனைவரிடம் பேசினான்! மன வலிமையையும் புத்திக் கூர்மையையும் பிரயோகித்து இரத்தம் சிந்தாமல் ஒரு தேசத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.

  • அறிவித்த நாள் செப்டம்பர் 01,1969,
  • அந்த தேசத்தின் பெயர்: லிபியா,
  • அந்த மாவீரனின் பெயர் : முஅம்மார் கடாஃபி.

மரியாதைக்குரிய கடாஃபி அவர்களின் வரலாற்றை நான் எழுதவில்லை. நிறைகளும், சாதனைகளும், வீரமும் மிகுந்த அந்த மனிதனிடம், குறைகளும், பிழைகளும் இருந்தன. அதனால்தான் அவர் சறுக்கிக் கொண்டிருந்தார். இன்று மார்ச் 01-2011 கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தில், விளிம்பில் நிற்கிறார் அந்த மாவீரர். “மாவோ’வை வாசித்த இந்த மனிதர் ஏன் “உமரை’ மறந்தார்? இதுதான் எனது சந்தேகம்! என்ன செய்வது? பிழை செய்தால் விலை கொடுப்பது என்பதுதானே வரலாறு.

கடாஃபி என்னென்ன செய்து தன் தேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்? என்னென்ன விசயத்தில் கட்டுப்பாட்டை இழந்தார் என்பதை கொஞ்சம் பார்ப்போம்!

  • மது, மாது, சூது இல்லாத அற்புத தேசம் லிபியா!

 

மதுக் கடைகள் திறந்தால்தான் அரசின் கஜானா பெருகும் என்று பல நாடுகள் பட்ஜெட் தயாரிக்கிறார்கள். ஆனால் லிபியாவில் மதுவும் கிடையாது, மதுக்கடையும் கிடையாது.
பாவங்களின் தாய் எனப்படும் மதுவையும் ஒழித்து, பெரும்பாவங்களில் முக்கியமான விபச்சாரத்தையும் இல்லாமல் வைத்திருந்தது கடாஃபியின் சாதனை என்றால் மிகையாகாது.
அது போலவே பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களே கிடையாது.

பெரும்பாலான ஊர்களில் (நவீன அடுக்கு மாடி வீடுகள் தவிர) அனைத்து வீடுகளிலும் (காம்பவுண்ட்) மதில் சுவர் 8 அடி முதல் 10 அடி உயரம் வரை இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்களை அந்நியர் யாரும் வெளியிலிருந்து நோட்டம் விட முடியாத நல்ல சிஸ்டம், முஸ்லிம் அல்லாதவர்கள் இதனை “”பெண்கள் கொடுமை” என்பார்கள். அதே சமயம் தனது சகோதரியோ, தாயோ, மகளோ, அடுத்தவன் கண்களால் மேயப்படுவதை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனைத்தானே கடாஃபியின் அரசு கண்காணித்து வந்தது!

எல்லாம் நன்றாகத்தானே போய்க் கொண் டிருக்கிறது. எங்கே கடாஃபி இடறினார்? ஏன் இந்த மாவீரர் இன்று பலமிழந்து நிற்கிறார்?
அவரின் குறைகளை படிக்குமுன் அவரது அரசு குடிமக்களுக்கு என்ன செய்தது என கொஞ்சம் பார்ப்போமா?

கடாஃபி அவர்கள் எந்த மாட மாளிகையிலும், பங்களாவிலும் இன்று வரை வசித்ததில்லை. “ராணுவ டெண்ட்’ எனப்படும் கூடாரம் தான் அவரது வீடு. இன்றுவரை அவர் பேணிவரும் அவரது எளிமைதான் 40 வருடமாக மக்கள் மனதில் இருக்கிறது.

மத்திய தரைக்கடல் கடற்கரைதான் லிபியாவின் மேற்கு எல்லை. கிரிஸ், இத்தாலி எல்லாம் கைக்கெட்டும் தூரம். தெற்கில் இருந்து அடிக்கடி வீசும் சஹாரா மணல் புழுதிக் காற்று மட்டும் இல்லையென்றால், லிபியாவை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை! அப்படிப்பட்ட பூகோள அமைப்பு!

2010-ல் பெங்காசி நகருக்கு அருகில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருப்பதால் பல அனுபவங்களை நேரில் அறியக்கூடிய வாய்ப்பு இறையருளால் கிட்டியது.

பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் உல்லாச விடுதிகள் கட்டுவதுதான் எல்லா நாடுகளும் செய்கின்றன. கடாஃபிக்கு இதில் உடன்பாடு இல்லை. அது மேற்கத்திய கலாச்சாரத்துக்கு வழிவிடும் என்று எச்சரித்தார்.

கடற்கரையில் ஆண்கள் அமர தனி பகுதி! பெண்களுக்கு தனி பகுதி! குடும்பமாக அமர வேண்டுமா? அதற்கும் தனி பகுதி! இதெல்லாம் கடாஃபியின் ஒழுக்க மேம்பாட்டு திட்டங்களுக்கு உதாரணங்கள்!

கடற்கரைக்கு வந்து தங்கி அடுத்தவர் வீட்டு பெண்களை ரசிக்கும் மனோநிலை உள்ள சுற்றுலா பயணிகள் லிபியாவை பற்றி “What a hell”  என்று சபிப்பார்கள்!

லிபியாவின் எண்ணெய் வளம்தான் கடாஃபியின் பலமும், பலவீனமும். இது மனித இயல்பும் கூட. கை நிறைய காசிருந்தால் உழைத்து சாப்பிட மனம் அவ்வளவாக முன்வராது! கடாஃபி எண்ணெய் வளத்தை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டார். “”இருக்கிறது” எல்லோரும் சாப்பிடுங்கள் என்று சொல்லி நாடு முழுவதும் மாதா மாதம் உதவித் தொகைகள் குடும்பங்களை தேடி வந்தன.

வேலைக்கு போகாமல் சாப்பிடும் மனோ நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வந்தது. இது மக்களின் நிலை. அதை நாடி பிடித்து தலைவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய “”அதிகார வட்டம்” தலைவருக்கு ஜால்ரா அடித்து, புறங்கையில் வடிந்த தேனை நக்கியது, அதனால் அடித்தட்டு மக்கள் மேலும் மேலும் கீழ்நிலையிலேயே இருந்தார்கள்.

லிபியா வரலாறு கொஞ்சம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல! வரலாற்றின் பக்கங்களிலும் முக்கிய இடம் உண்டு. பண்டைய கிரேக்க சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரம் லிபியாவில்தான் உள்ளது. பெயர்: சைரின், சிதைந்து போன அடையாளங்களுடன் கூடிய அந்த வரலாற்று சிறப்புமிக்க நகரை இன்றும் காணலாம்.

முழு அரபுலகத்திற்கும் அவதார புருஷனாக வரவேண்டும் என நிறையக் கனவு உண்டு அவருக்கு! அதனால்தானோ, என்னவோ, அடிக்கடி அமெரிக்காவை சாடுவதும், திட்டுவதும் அவரது வழக்கமான பாணியாகவே இருந்தது. அதே சமயம் இந்த பேச்சு தம் தேசத்து மக்களிடம் தனக்கு மதிப்பையும் உயர்த்தி தந்து கொண்டே இருந்தது!

ஆனால் எந்த அரபு நாடும் கடாஃபியை தலைவர் என்றோ, குறைந்தபட்சம் ஒருங்கிணைப்பாளர் என்றோ கூட கருதியதில்லை. கடாஃபியும் தன் நாட்டை இஸ்லாமிய நாடு என்று இன்று வரை கூறியதே இல்லை! முஸ்லிம் நாடு என்றுதான் கூறுவார்.

2008ல் ஆப்பிரிக்காவில் உள்ள சுமார் 200 மன்னர்களை அழைத்து விருந்து போட்டு, தன்னை “KING OF KINGS” என்று சொல்ல வைத்தார். சமீப காலமாக நல் உறவாடி வந்த மேற்குலகம் கடாஃபியை சந்தேதிக்க ஆரம்பித்து விட்டது. ஏன் என்றால் “United States of Africa” என்று கடாஃபி வலியுறுத்தியதாக கூட இருக்கலாம்.

கடந்த காலங்களில் அமெரிக்காவால் பல தடவை லிபியா குறி வைக்கப்பட்டது. பிற காரணங்களால் அவை தள்ளி போயின. அது ஆப்கானாக இருக்கலாம் அல்லது சதாமாக இருக்கலாம்.

கடாஃபி இஸ்ரேலுக்கு எதிராக PLO விற்கு நிறைய உதவி செய்து ஆதாரித்தார். பல ஆப்பிரிக்க நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பது கடாஃபிக்கு காப்பி குடிப்பது போல. இதன் விளைவை 1986ல் சந்திக்க ஆரம்பித்தது லிபியா நாடு. பெர்லினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் அமெரிக்க ராணுவ வீரர் இரண்டு பேர் பலியானதற்கு கடாஃபிதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. திரிபோலி, பெங்காசி நகர்கள் மீது அமெரிக்க ராணுவம் குண்டு வீசி 60 பேரை கொன்றது. இந்த தாக்குதலில் கடாஃபியின் வளர்ப்பு மகள் பலியானார். (கடாஃபிக்கு 1மகள் + 8 மகன்கள்)

அடுத்தடுத்து ஸ்காட்லாந்து ட்சாட் நாடுகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும் கடாஃபிக்கும் தொடர்பு உண்டு என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கிடையில் எந்த உலக நாட்டு உதவியும் இல்லாமல், உலக வங்கியிடமும் சொல்லாமல் உள்நாட்டில் மிகப்பெரிய வேலை ஒன்றை செய்தார் கடாஃபி. அதாவது பெரும்பகுதி பாலைவனம்.

லிபியா மொத்த பரப்பளவு : 1759540 Km2  (தமிழ் நாட்டைப் போல 14 மடங்கு கூடுதல் பரப்பளவு). உணவுத் தேவைக்கு உயிர்நாடி விவசாயம்; விவசாயத்துக்கு தேவை தண்ணீர். நம்மிடம் எண்ணெய் வளம் உள்ளது. ஆறுகளே கிடையாது. இருக்கும் பணத்தைக் கொண்டு அடுத்த நாட்டில் கையேந்தாமல் சொந்த மண்ணில் பாலைவனக் காடுகளில் நீர்நிலை ஆதாரங்களை கண்டுபிடித்து ராட்சத போர் போட்டார். செயற்கை ஆறை உருவாக்கினார்.

Man Made River என்று பெயர் (GMRA Project) எண்ணெய் வள நாடுகளில் பெரிய பெரிய Projects  செய்யும் Brown & Root  நிறுவனம் டிசைன் செய்து தென்கொரிய கம்பெனி உதவியால் பாலைவன மணலைக் கிழித்து, ராட்சத பைப்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 6000 கி.மீ. நீள இந்த ஆற்றின் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. கட்டிடப் பொறியியல் துறை வல்லுனர்கள் உலகளவில் இந்த ஆற்றிற்கு சூட்டிய பெயர் “எட்டாவது உலக அதிசயம்’ (8th Wonder of the World)

அமெரிக்கா கூட்டிக் கழித்துப் பார்த்தது. கடாஃபியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். இல்லையயன்றால் ஆபத்து என்று நினைத்திருக்க வேண்டும்.

ஆனால் கடாஃபி அமெரிக்காவை திட்டுவார், இஸ்ரேலை திட்டுவார், அவ்வளவுதான் தன் நாட்டைவிட்டு எங்கும் போகமாட்டார். இருப்பினும் லிபியாவின் வளர்ச்சி அமெரிக்காவை கவலை கொள்ள வைத்தது. 1990களில் லிபியா மீது பொருளாதார தடை. பல்வேறு நெருக்கடிகள் லிபியா மீது. கடைசியில் இரண்டு லிபிய கைதிகளை ஒப்படைத்தால் பரிகாரம் உண்டு என்று அமெரிக்கா கூறி கடாஃபியை நிர்பந்தித்தது. நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்கு பின் இரண்டு குற்றம் சாட்டப்பட்ட லிபியர்களை ஒப்படைத்தார். (அந்த குடும்பங்களுக்கு $ 2.7 பில்லியன் கொடுத்து உதவினார் என்று சொல்கிறார்கள்)

வழக்கம்போல இரசாயன ஆயுத கிடங்கு லிபியாவில் உள்ளது என்று கூட பென்டகன் குற்றம் சாட்டியது. கடைசியில் அதெல்லாம் வீட்டு மனை கட்டிட வேலைகள்!

வயதிற்கு வந்த ஆண்/பெண் திருமணம் முடிக்காமல் இருந்தால் (அல்லது) தாமதித்தால் குழப்பம் விளையும் என்று நபி(ஸல்) சொன்ன ஹதீஸ் இருப்பதாக பயானில் கேட்டதுண்டு!

தமிழ்நாட்டு ஒரு பாமர முஸ்லிமாகிய என் காதில் விழுந்த இந்த பொன்மொழி எப்படி அரபியான கடாஃபியின் செவிகளை தொடவில்லை?

கலீஃபா உமர்(ரழி) அவர்களின் நாட்களில் அம்ர் இப்னுஅல்ஆஸ்(ரழி) அவர்களின் மேற் பார்வையில் வட ஆப்பிரிக்கா முழுவதும் இஸ்லாம் பரவியதாக வரலாற்றில் படித்ததுண்டு.

கலீஃபா உமர் அவர்கள் இரவில் மாறு வேடம் பூண்டு தன் தேசத்தில் உள்ள கீழ்நிலை மக்களின் பொருளாதார நிலைகளை தானே கண்டதை ஏன் கடாஃபி மறந்தாரோ, தெரியவில்லை. விளிம்பு நிலை சமூகம், ஏழை சமூகம் பரவலாக லிபியா முழுவதும் உள்ளார்கள். குறிப்பாக “மஹர்’ விசயத்தில் பெண்கள் போதிய வழிகாட்டுதல் இல்லாததாலோ என்னவோ, சொந்த வீடு இல்லாத ஆண்களுக்கு அவ்வளவு சுலபமாக திருமணம் நடந்துவிடாது. 35, 40 வயது வரை ஆண்கள் திருமணம் முடிக்காமல் உள்ளனர்.

இந்த விஷயம் “நாட்டின் தலைவர்’ என்ற முறையில் கடாஃபி தீர்வு காணாத வரலாற்றுத் தவறு என்று நான் கூற விரும்புகிறேன்.

இரண்டாவது வரலாற்று தவறு என்னவென்றால் 1980, 1990களில் உலகம் முழுவதும் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. தொழில் நுட்பம், கல்வியியல், கணினி என்று புதிய தலைமுறை தலையெடுக்கும்போது, கடாஃபி 1960களில் தான் எழுதிய Green Book விலிருந்து வெளியே வராதது கடாஃபி செய்த பெரும் பிழை. அதன் விலை 2011 பிப்ரவரி 17ல் வெடிக்க ஆரம்பித்தது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, போதை வஸ்துக்களான பீர், பிராந்தி விஸ்கியை என்னவென்றே தெரியாத லிபிய இளைஞர்கள் மத்தியில் இலை மறைவு காய் மறைவாக கடந்த ஆண்டுகளில் போதைப் பொருட்கள் புழங்க ஆரம்பித்துள்ளன. 35,40 வயது வரை திருமணம் ஆகாத இளைய தலைமுறை இந்த சாத்தானிய வலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபட ஆரம்பித்துள்ளது. அதேபோல விபச்சாரம் கடந்த சில ஆண்டுகளில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

இந்த சமூக பிரச்சினையை நேர்மையாக சிந்தித்துத் தீர்ப்பதுதான் பொறுப்புள்ள தலைமையின் பணி. இதை விட்டுவிட்டு இது என் மக்களை வழிகெடுக்க அந்நிய நாட்டின் சதி என்பதெல்லாம் சும்மா வெட்டிப் பேச்சு.

எது எப்படியோ எல்லா நாட்டிலுமே அரசாங்கத்தை வெறுப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தலைமையை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் எது சாக்கு என்று காத்திருப்பார்கள்! அவர்கள் யார் தூண்டினாலும் சிக்குவார்கள் சதி செய்ய! அப்படிப்பட்ட கூட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது.

அவர்களிடம் கீழ்காணும் அம்சங்கள் காட்டப்பட்டிருக்கலாம்.

  1. கடாஃபியின் மகன்களை பார், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலாகா மந்திரி; உன்னைப் பார், நீ ரொட்டிக்கே அல்லாடுகிறாய்.
  2. எல்லா நாட்டிலும் ஆங்கிலம் பேசுகிறார்கள். உனக்கோ அரபியே அரைகுறை! உன் சந்ததி எப்படி உருவாகும் இப்படி இருந்தால்?
  3. பக்கத்து நாடுகளைப் பார்! பாரிசைப் பார்! ரோமைப் பார்! மால்டாவைப் பார்! அட பக்கத்திலுள்ள கெய்ரோவைப் பார்! எவ்வளவு சுதந்திரம்! அப்பப்பா. உன் தலைவிதி இப்படியா?
  4. கடந்த காலங்களில் இதையயல்லாம் பல நண்பர்கள் பேசினார்கள்! அவர்கள் எல்லாமே இன்று சிறைகளில்! அல்லது கப்ரில்! எப்பொழுது விடியல்?

இப்படித்தான் லிபியா மட்டுமல்ல, அரபு தேசம் முழுவதும் கலகக் குரல்கள் விதைக்கப்படுகின்றன. கலகக்காரர்கள் தங்களை போராட்டக்காரர்கள் என்கிறார்கள். அல்ஜசீரா சுடச் சுட சேதி சொல்வதில் குறியாக உள்ளது.

BBC யும், CNN ம் அந்த போராட்டக்காரர்களை சுதந்திர போராட்ட தியாகிகளாக காண்பிக்கிறது. எல்லா நாடும் வேடிக்கை பார்க்கிறார்கள்! எல்லா எண்ணெய் நாடுகளிலும் சம்பாதித்தார்கள். இன்றோ யாரும் தீர்வு பற்றி பேசுவதே இல்லை.

01.03.2011 இன்று அமெரிக்க போர்க்கப்பல் லிபியாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று சர்வதேச கோர்ட்டில், கடாஃபி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முந்தா நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கள் எப்படிக் கவனமாக நகர்த்தப்படுகிறது என்பதை கவனித்தால் ஒன்று புரிகிறது. கடந்த காலங்களில், ஈராக்கில், ஆப்கானில் எல்லாம் நிறைய செலவு செய்து, உயிர் இழப்பு செய்து கைப்பற்றிய ஃபார்மூலாவை மாற்றி உள்ளூரில் உள்ள கலகக்காரர்களை கொஞ்சம் உசுப்பேத்தி போராட வைத்தால் போதும்.

ரீகன், புஷ். கிளிண்டன் ஃபார்மூலாக்கள் போய் ஒபாமா ஃபார்மூலா வந்துள்ளது. காரியம் முடிய கனவில் உள்ளார்கள். இறைவனின் கணக்கு வேறாக இருக்கும் என்பதே எமது துஆவாகும்.

May 31-2002-_ Indian Express-ல் வந்த செய்தி:
இந்தியாவிலிருந்து ஒரு குழு லிபியா போய் கடாஃபியை நேரில் பார்த்து பேசியது. பூரி சங்கராச்சாரியர், மெளலான ஆஸாத் மதனி, தலித் தலைவர் உதித்ராஜ் மற்றும் பல அறிஞர்கள் தலைவர்களுடன் சில தேவ்பந்த் உலமாக்களும் அந்த குழுவில் அடக்கம்.

  • அவர்களிடம் கடாஃபி சொன்ன சேதி இதுதான். அமெரிக்கா கடந்த காலத்தில் ஈரானையும் ஈராக்கையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது. இப்பொழுது இந்தியாவையும் பாகிஸ்தானையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க விரும்புகிறது.இந்த சதித் திட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விழுந்து விட்டது எப்படி?
  • மேலும் கடாஃபி கூறினார், கடவுளின் பெயரைக் கூறி சமுதாயத்தில் சண்டை மூட்டுவது (Dividing people in His name) மோசமான பாவம்.
    நிறைவாக கடாஃபி சொன்னாராம், “நான் இந்தியா வந்தால், அனைத்து மக்களையும் அழைத்து அமைதி வேண்டி தொழுகை நடத்துவேன்’.

மீடியாக்களில் கொடுங்கோலனாக சித்தரிக்கப்படும் கடாஃபியின் மென்மையான உன்னதமான உள்ளம் உண்மையானது. என்ன செய்வது, இன்றோ பலர் அந்த கடாஃபிக்கு “ஜனஸா தொழுகை’ எப்படி எங்கே நடத்துவது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்! இறைவன் மகா பெரியவன்! கருணையாளன்!

தோழர் பஷீர், பொறியாளர், அண்மையில் லிபியாவிலிருந்து திரும்பியவர் – readislam.net