சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நாட்டிலேயே முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் திவ்யதர்ஷினி.
பி.ஏ., பி.எல் படித்துள்ள திவ்யதர்ஷினி, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படித்தவராவார். இவர் 2010ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பது குறித்து திவ்யதர்ஷினி பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல ரேங்க் கிடைக்கும் என்று எனக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் ரேங்க் கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
அரசுப் பணியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த நான் விரும்புகிறேன். ஊழல் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக செயல்பட நான் ஆர்வமாக உள்ளேன் என்றார்.
2வது ரேங்க்கை ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.டெக் படித்த ஸ்வேதா மொஹந்தி பெற்றுள்ளார்.
ஆண்களிலும் சென்னையைச் சேர்ந்தவரே முதலிடம்
அதேபோல ஆண்களைப் பொறுத்தவரை முதலிடத்தைப் பிடித்துள்ளார் வருண்குமார். இவரும் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு ரேங்குகள் தமிழகத்திற்கு முதல் பத்து இடங்களில் வந்துள்ளவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புதிய பெருமையாகும்.
அருண்குமார் 3வது இடம், சங்கரன் – 4வது இடம், அரவிந்த் – 8வது இடம் பிடித்துள்ளனர்.
மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 36 பேர் பிரிலிமினரி தேர்வை எழுதினர். இவர்களில் 12,491 பேர் மெயின் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களில் 2589 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களில் 920 பேர் (இவர்களில் 717 பேர் ஆண்கள், 203 பேர் பெண்கள்) வெற்றி பெற்று தற்போது தர வரிசைப்படி ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் பிற சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
முதல் 25 இடங்களைப் பிடித்துள்ளவர்களில் 20 பேர் ஆண்கள், ஐந்து பேர் பெண்கள். இவர்களில் 15 பேர் என்ஜீனியர்கள், 5 பேர் வர்த்தகம், நிர்வாகவியல், ஹியுமானிடிக்ஸ், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரிகள். ஐந்து பேர் மருத்து அறிவியல் படித்தவர்கள்.
டாப் 25 பேரில் எட்டு பேர் முதல் முறையிலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். நான்கு பேர் 2வது முயற்சியிலும், 9 பேர் மூன்றாவது முயற்சியிலும், 3 பேர் நான்கு மற்றும் ஒருவர் ஐந்தாவது முயற்சியிலும் வென்றுள்ளனர்.
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம் – www.upsc.gov.in.
நன்றி: thatstamil.oneindia.in