இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி
ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.
அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வந்திருந்தது. அமெரிக்கக் கனவுகள் அரும்பியிருந்த நேரம்.
கல்லூரி வளாக அறிவிப்பு பலகையில் புதிய அறிக்கை ஒன்று தெரிந்தது. புகழ்பெற்ற டெல்கோ நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அது. நல்ல கல்விப் பின்புலம், புத்திக் கூர்மை, கடின உழைப்பு, நிறைய மதிப்பெண்கள் கொண்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றிருந்த அறிவிப்பில் ஓர் அடிக்குறிப்பு. பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம்!!
அதைப் பார்த்ததும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அந்தப் பெண்ணுக்குள் அலை மோதியது. பாலின பாகுபாடு முகத்திலறைந்த முதல் அனுபவம் அவருக்கு. விடுதிக்கு வந்தவர் ஓர் அஞ்சலட்டையை எடுத்துக் கடிதம் எழுதத் தொடங்கினார். அப்போதொரு சந்தேகம். யாருக்கு எழுதுவது? அந்தக்குழு நிறுவனங்களின் தலைவர் ஜே.ஆர்.டி. டாடா என்பது அவருக்குத் தெரியும்.
டாடாவுக்கே எழுதினார். ”இந்தியாவின் கட்டமைப்புக்கும், கல்விக்கும் காரணமானது டாடா. நான் கல்வி கற்கும் ஐ.ஐ.எஸ் உருவாகக் காரணம் டாடா. அப்படிப்பட்ட நிறுவனத்தில் எப்படி பாலின பாகுபாடு இருக்கலாம்?”
கனல் பறக்கும் கேள்விகள் கொண்ட அஞ்சலட்டையை அஞ்சல் பெட்டியில் சேர்த்தார். எழுந்த கோபம் எழுதினால் தீரும். அந்த அஞ்சலட்டை விவகாரத்தை மறந்தே போனார். பத்து நாட்களுக்குப் பிறகு தந்தி ஒன்று வந்தது. டெல்கோ நிறுவனத்தின் செலவில், பூனாவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது அந்தத் தந்தி.
இந்தியாவில் வேலை பார்க்கும் எண்ணம் இல்லாத அந்தப் பெண்ணுக்கு டெல்கோ செலவில் பூனாவை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு. போய் வருமாறு தோழிகள் வற்புறுத்தினர். பூனாவில் புடவை வாங்கி வரச் சொல்லி ஆளுக்கு முப்பது ரூபாயும் அளித்தனர்.
போய் இறங்கியதுமே அந்தப் பெண்ணுக்கு பூனா பிடித்து விட்டது. டெல்கோ அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு. ஆறு பேர் கொண்ட குழு அமர்ந்திருந்தது. ”இந்தப் பெண்தான் ஜே.ஆர்.டி.க்கு கடிதம் எழுதியது” என்ற கிசுகிசுப்பு கேட்டது. தனக்கு வேலை தரப்படப் போவதில்லை. கடிதம் எழுதியதற்காக கண் துடைப்பு அழைப்பு என்று அந்த இளம் பெண்ணுக்குத் தோன்றியது.
சில கேள்விகள் கேட்கப்பட்டன. நல்ல விதமாக பதிலளித்தார். ஆறுபேர்களில் மூத்தவர் ஒருவர் மெல்ல பேசத் தொடங்கினார். ”இது ஒரு தொழிற்சாலை, எனவேதான் பெண்களை நாங்கள் வேலைக்கு எடுப்பதில்லை. கல்வியில் நீங்கள் முதல் மாணவி. பாராட்டுக்கள். ஆனால் நீங்கள் ஆய்வுக் கூடங்களில் இருக்க வேண்டியவர். தொழிற் சாலையில் அல்ல.”
அந்த இளம்பெண் துடுக்காக பதில் சொன்னார், ”ஆனால் நீங்கள் எங்காவது தொடங்கத்தான் வேண்டும். இல்லையென்றால் உங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்காமலே போய்விடும்!”
நீண்டு கொண்டே போனது நேர்காணல். அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அவர் எதிர்பார்க்கவேயில்லை. பூனாவில் பணிக்குச் சேர்ந்தார். பணிபுரிகிறபோதே உடன் பணிபுரிந்த – கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
யோசிக்காமல் தான் ஆவேசமாக அஞ்சலட்டை அனுப்பிய ஜே.ஆர்.டி. டாடாவை சந்திக்கும் வாய்ப்பும் ஒருநாள் வந்தது. அப்போது அந்தப் பெண், மும்பைக்கு பணி மாற்றலாகிச் சென்றிருந்தார்.
ஜே.ஆர்.டி. டாடாவுக்கு அறிமுகப்படுத்தப் பட்டார் அந்தப் பெண். பெயரைக் கேட்டுவிட்டு, ”பொறியியல் துறைக்கு நம் நாட்டின் பெண்கள் வருவது நல்ல விஷயம்தான்” என்று சொல்லி நகர்ந்தார் டாடா.
பிறகொரு முறை அலுவலகம் முடிந்து தன் கணவருக்காகக் காத்திருந்தார் அந்த இளம்பெண். தன் காருக்காகக் காத்திருந்த ஜே.ஆர்.டி. டாடா, ”அலுவலகம் முடிந்துவிட்டதே! கிளம்ப வில்லையா?” என்றார். கணவனுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னதும், ”அவர் வரும்வரை நான் இருக்கிறேன்” என்றார் டாடா. அந்த எளிமையில் இந்த இளம்பெண்ணின் இதயம் திக்குமுக்காடியது. நல்ல வேலையாக அவர் கணவர் வந்தார். புறப்படும் முன், ”உன்னை இனி காக்க வைக்கக் கூடாது என்று உன் கணவரிடம் சொல்லி வை” என்று குறும்பாகச் சொல்லி விட்டுக் கிளம்பினார் டாடா.
1982. வேறு வழியில்லாமல் துளியும் மனமில்லாமல் வேலையை விட வேண்டிய சூழல் அந்தப் பெண்ணுக்கு. எல்லாம் முடிந்து கிளம்பும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்தார் டாடா. தன் கணவர் ஒரு நிறுவனம் தொடங்குவதால் வேலையை விட்டு விலகுகிற விபரத்தை அவரிடம் சொன்னார் அந்தப் பெண்.
”நல்லது! உங்கள் நிறுவனம் வெற்றி பெற்றால் என்ன செய்வீர்கள்?” என்றார் டாடா. ”வெற்றி பெறுமா என்று தெரியவில்லையே” தயங்கிச் சொன்னார் அந்தப் பெண். ”இந்த சந்தேகமே கூடாது. நம்பிக்கையோடு தொடங்குங்கள். இந்த சமூகம் உங்களுக்கு நிறையவே தரும். வளர்ந்தபிறகு சமூகத்திற்கு திருப்பிக் கொடுங்கள். என் வாழ்த்துக்கள்” சொல்லிக்கொண்டே நகர்ந்தார் டாடா.
தயக்கமில்லாமல் ஓர் அஞ்சலட்டை எழுதியதால் தேசத்தின் தலைசிறந்த தொழிலதிபர் ஒருவரை சந்தித்து அவருடைய ஆசியுடன் தன் கணவருக்குத் துணையாய் தொழிலில் ஈடுபட்ட அந்தப் பெண்ணின் அப்போதைய பெயர் சுதா குல்கர்னி. இப்போதைய பெயர் சுதா மூர்த்தி. அவருடைய கணவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி!!
தயக்கம் உடைத்தால் வெளிச்சம் கிடைக்கும்!!
நன்றி: – ரிஷபாரூடன் – நமது நம்பிக்கை