மருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள், ‘தசைகளையும் வளர்க்கிறது’ இப்போது!!
என்னங்க, எல்லாரும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா?
என்ன அப்படி பார்க்குறீங்க?
ஆஹா, இந்த மேலிருப்பான் திரும்பவும் ஆப்பிளோட வந்திருக்கானே….., இந்த முறை என்னத்த சொல்லப்போறானோ அப்படீன்னு பார்க்குறீங்களா?
அட, அது வேற ஒன்னுமில்லீங்க! ஆப்பிள், குறைந்தபட்சம் இருதய நோய் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவாவது மருத்துவரை கண்டிப்பா தூரத்திலே வைக்கக் கூடிய திறன் கொண்டது அப்படீன்னு முந்தைய ஆப்பிள் பதிவுல பார்த்தோம் இல்லீங்களா?
இப்போ என்னடான்னா, “ஆப்பிள் மருத்துவரை தூர வைக்கிறதோடு மட்டுமில்லாம, நம்ம உடலில் இருக்குற தசைகளையும் வளர்க்கிறது” அப்படீன்னு ஒரு செய்தி வெளியாகியிருக்குங்க! அதப்பத்தி உங்ககிட்ட சொல்லிட்டு போகலாமுன்னு வந்தேன். வாங்க, இந்த ஆப்பிள் எப்படித்தான் நம்ம தசைகளை வளர்க்கிறது அப்படீன்னு கொஞ்சம் விளக்கமா, தோண்டி-துருவி பார்த்துடுவோம்……
நோய்கள் அல்லது உடல் உபாதைகள் மற்றும் வயது முதிர்ச்சி ஆகிய இவ்விரண்டு இயற்கை நிகழ்வுகளின்போதும் தசைகள் விரயமாகின்றனவாம். இந்நிகழ்வினை தடுக்கும் திறனுள்ள ஒரு மருந்தை கண்டறியும் நோக்கத்திலான ஒரு ஆய்வு முயற்சியில், எதிர்பார்த்த திறனுள்ள ஒரு இயற்கையான வேதியல் பொருளையே கண்டுபிடித்துவிட்டார்கள் அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இதுல விசேஷம் என்னன்னா, அந்த இயற்கை வேதியல் பொருள் ஆப்பிளின் தோலில் இருக்கிறது என்பதுதான்! அடடே, இது நல்லாருக்கே….!
தசைவிரயமும் (atrophy) மருந்தாகும் ஆப்பிள் தோலும்!
‘தசைவிரயம்’ என்பது நோய்களுக்கும், வயது முதிர்ச்சிக்கும் ஒன்னுவிட்ட சொந்தம் போலிருக்கு. அட ஆமாங்க, இது மூனும் எப்பவுமே ஒன்னாவே நிகழுமாம்! அதுமட்டுமில்லாம, இந்த தசைவிரயத்தினால் மருத்துவமனையிலேயே நீண்ட நாட்கள் தங்குவது, நோய் குணமடைவது தள்ளிப்போவது போன்ற பல பிரச்சினைகளும் இருக்குதாம். இதுக்கான காரணம் என்ன, இதுக்கு மருந்து என்ன இப்படி எதுவுமே இன்னும் புரியல அப்படீங்கிறாரு ஆய்வாளர் க்ரிஸ்டோபர் ஆடம்ஸ்!
இந்த நிலைமைக்கு ஒரு தீர்வுகாண புறப்பட்ட ஆடம்ஸ், தசைவிரயத்துக்கு காரணமான மரபணுக்களை தேடினார். தேடலின் முடிவில், மனிதர்கள் மற்றும் எலிகளில் சுமார் 63 மரபணுக்களை கண்டறிந்தார். பின்னர், அதனை உயிர்தூண்டும் வேதியல் பொருட்களால் உயிரணுக்களை தூண்டுவதால் ஏற்படும் மரபணு மாற்றங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அதனடிப்படையில் ‘உர்சோலிக் அமிலம்’ என்னும் ‘உயிர்தூண்டும்’ வேதியல் பொருளுக்கு தசைவிரயத்தை கட்டுப்படுத்தும் திறனிருக்கிறது என்பதை கண்டறிந்தார்.
இப்போ, நாம திரும்ப ஆப்பிளுக்கு வருவோம். இந்த உர்சோலிக் அமிலம் நாம அடிக்கடி சாப்பிடுற ஆப்பிளின் ‘தோலில்’ இருக்கிறதாம்! இந்த உர்சோலிக் அமிலத்தையும் எலிகளுக்கு கொடுத்து, அது தசை விரயத்தை தடுக்கிறது என்பதை நிரூபித்தார் ஆடம்ஸ்!
தசைவிரயத்தை தடுக்கும் அதேசமயம் உர்சோலிக் அமிலமானது தசை வளர்ச்சியை தூண்டுகிறது என்பது கண்டறியப்பட்டது. இங்கேதான் ஆடம்ஸ் நம்ம எல்லாருக்கும் உதவி செஞ்சுருக்காரு. ஏன்னா, உர்சோலிக் அமிலம் நிறைந்திருக்கும் ஆப்பிளானது நோயாளிகளுக்கு மட்டும் பயனுள்ளதா இல்லாம, தசை வளர்ச்சியை தூண்டுவதன் மூலம் ஆரோக்கியமான மக்களுக்கும் பயனுள்ளதா இருக்குன்னு கண்டுபிடிச்சி சொன்னாரு இல்லீங்களா, அதனால!
எல்லாத்தையும் விட ஆச்சரியமான விஷயம், உர்சோலிக் அமிலம் கொடுக்கப்பட்ட ஆய்வு விலங்குகளின் உடல் மெலிதாகி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை (க்ளூக்கோஸ்), கொலஸ்டிரால் மற்றும் ட்ரைக்ளிசரைடுகள் எனப்படும் கொழுப்புச்சத்து ஆகியவையின் அளவும் குறைந்துபோனதாம். அதனால என்ன அப்படீங்கிறீங்களா? அட, இந்த மூனும் குறைவா இருந்தாத்தாங்க உடல் ஆரோக்கியமா இருக்கும்!
இந்த ஆய்வின் அடுத்தகட்டம், எலிகள் மீதான ஆய்வுகளில் கிடைத்த இம்முடிவுகள் எல்லாம் மனிதர்களிலும் சாத்தியப்படுமா என்ற நோக்கத்திலான ஆய்வு முயற்சிகளே என்று ஆராயத்தொடங்கிவிட்டார் ஆடம்ஸ்! வாழ்த்துக்கள் ஆடம்ஸ்……
“ம்ம்ம்….இனிமே ஆப்பிள் சாப்பிடும்போது, ‘ஆப்பிள் மருத்துவரை மட்டும் தூர வைக்கவில்லை. நம்ம தசைகளையும் வளர்க்கிறது’ அப்படீங்கிறத நினைவில் வச்சிக்கிட்டு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் எடுத்துச்சொல்லுங்க!
நன்றி: மேலிருப்பான்