Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2011
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,450 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! 2/2

காளான் மிளகுப் பொரியல் தேவை: காளான் 200 கிராம், சின்ன வெங்காயம் 1 கப், இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், மிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, சீரகம் அரை டீஸ்பூன். செய்முறை: காளானை சுத்தம் செய்து இரண்டிரண்டாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை சூடாக்கி சீரகத்தைத் தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் தூவி வதக்குங்கள். வதங்கியதும் காளானைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி மேலும் மூன்று நிமிடம் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பீட்ரூட் பொடிமாஸ் தேவை: பீட்ரூட் அரை கிலோ, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், வேகவைத்த கடலைப் பருப்பு அரை கப், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு. செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி துருவுங்கள். எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து துருவிய பீட்ரூட், உப்பு சேர்த்து, மிதமான தீயில் பீட்ரூட் வேகும் வரை கிளறுங்கள். பிறகு மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பனீர் பொடிமாஸ் தேவை: பனீர் 200 கிராம், சின்ன வெங்காயம் 15, இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், பச்சை மிளகாய் 4, தக்காளி 1, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவைக்கு, சோம்பு அல்லது கடுகு அரை டீஸ்பூன். செய்முறை: பனீரை உதிர்த்து வையுங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி சோம்பு (அல்லது கடுகு) தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்துக் கிளறி பனீர், மல்லித்தழை, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பனங்கிழங்குப் பொரியல் தேவை: பனங்கிழங்கு 4, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு 1 டேபிள் ஸ்பூன். பொடிக்க: மிளகாய் வற்றல் 10, தனியா, கடலைப் பருப்பு, தேங்காய்த்துருவல் தலா 1 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன். செய்முறை: பனங்கிழங்கின் தோலை நீக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள். ஆறியதும் தோல், நடு நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்குங்கள். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்து தாளித்து நறுக்கிய பனங்கிழங்கு, அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

வெண்டைக்காய் பொடிப் பொரியல் தேவை: பிஞ்சு (விரல் நீள) வெண்டைக்காய் அரை கிலோ, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், மாங்காய் (ஆம்சூர்) தூள் 1 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், உப்பு முக்கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன். செய்முறை: வெண்டைக்காய்களை காம்பு, வால் பகுதிகளை நீக்கிவிட்டு நடுவில் லேசாகக் கீறி வையுங்கள். காய், எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலக்குங்கள். இந்தப் பொடியை வெண்டைக்காய்களுக்குள் சிறிது சிறிதாக தூவி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி, அதில் பொடி அடைத்த காய்களைப் போடுங்கள். மீதமுள்ள பொடிகளையும் தூவி மிதமான தீயில் அவ்வப்போது பிரட்டிவிட்டு மொறுமொறுப்பாக வேக வைத்தெடுங்கள்.

——————————————————–

அவரைக்காய் மசாலா பொரியல் தேவை: அவரைக்காய் அரை கிலோ, சின்ன வெங்காயம் 1 கப், தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு. செய்முறை: அவரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த் தூள், அவரைக் காய், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி, மிதமான தீயில் வேக வையுங்கள். வெந்ததும் தீயை அதிகப்படுத்தி தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பலாக்கொட்டை சோயாப் பொரியல் தேவை: பலாக்கொட்டை 15, சோயா 10 உருண்டைகள், பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு. செய்முறை: பலாக்கொட்டையை உப்பு சேர்த்து வேகவைத்து இரண்டாக நறுக்குங்கள். சோயாவை கொதி நீரில் இரண்டு நிமிடம் வைத்திருந்து அலசி எடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் போட்டு இரண்டு மூன்று முறை நன்கு அலசிப் பிழிந்து, இரண்டாக நறுக்கி வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, பலாக்கொட்டை சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். கடைசியாக சோயா, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள். ——————————————————–

வாழைக்காய் முருங்கை கறி பொரியல் தேவை: வாழைக்காய் 1, முருங்கைக்காய் 2, வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப்பால் கால் கப், உப்பு தேவைக்கு எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன். கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன். செய்முறை: வாழைக்காயைப் பொடியாக நறுக்குங்கள். முருங்கைக்காயின் சதைப் பகுதியை வழித்தெடுத்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலையை தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் வாழைக்காய், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, வெந்ததும் தேங்காய்ப்பால், முருங்கையின் சதைப் பகுதி ஆகியவற்றைச் சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

கோவைக்காய் கொண்டைக்கடலை பொரியல் தேவை: கோவைக்காய் அரை கிலோ, கொண்டைக் கடலை அரை கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத்தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, கறிவேப்பிலை சிறிதளவு. செய்முறை: கோவைக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீளமாக, சன்னமாக நறுக்குங்கள். கொண்டைக்கடலையை ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றலை தாளித்து பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு கோவைக்காய், மிளகாய்த் தூள், தனியாத் தூள், தக்காளி, உப்பு, வேகவைத்த கடலை ஆகியவற்றைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

கத்தரி பொடி பொரியல் தேவை: கத்தரி அரை கிலோ, உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன். பொடிக்க: முழு உளுந்து 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 5, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், முந்திரி 5. செய்முறை: கத்தரிக்காயை நீளவாக்கில்நறுக்குங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை தனித் தனியே வறுத்து (பச்சை மிளகாயை சிறு தீயில், நன்கு வெளுப்பாகும்வரை வறுக்க வேண்டும்) பிறகு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நைஸாக பொடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்தை தாளித்து கத்தரிக்காயை, தேவையான உப்பு சேர்த்து லேசாகக் கிளறுங்கள். மிதமான தீயில், மூடி வைத்து வேகவைக்க வேண்டும். கத்தரிக்காய் வெந்து, தண்ணீர் வற்றியதும் பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

வாழைக்காய் ப்ரெட் பொரியல் தேவை: வாழைக்காய் 2, உப்பு ப்ரெட் 3 ஸ்லைஸ், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, உப்பு, எண்ணெய் தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன். அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல். செய்முறை: வாழைக்காயை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாக சற்று கனமாக நறுக்குங்கள். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூளைப் போட்டு அதில் வாழைக்காயைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி காய்களைத் தனியே எடுத்து வையுங்கள். எண்ணெயைக் காயவைத்து அதில் காய்களை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுங்கள். ப்ரெட்டையும் விரல் நீளத்துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்தைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பிறகு வாழைக்காயைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கிளறி, வறுத்த ப்ரெட், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

சேம்பு ரோஸ்ட் பொரியல் தேவை: சேப்பங்கிழங்கு அரை கிலோ, பெரிய வெங்காயம் 1, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன். அரைக்க: சின்ன வெங்காயம் 10, சீரகம் 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 4 பல். செய்முறை: கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு நான்காக நறுக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிதளவு எண்ணெயை சூடாக்கிக் கிழங்குகளை வறுத்தெடுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்தைத் தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு மிளகாய்த் தூள், சேப்பங் கிழங்கு, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பிறகு அரைத்த விழுது சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

முள்ளங்கி பொரியல் தேவை: வெள்ளை முள்ளங்கி கால் கிலோ, வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, சோம்பு தலா அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், பூண்டு 4 பல். செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய முள்ளங்கியை தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டை நசுக்கி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கிளறி பிறகு முள்ளங்கி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

சோளப் பொரியல் தேவை: உதிர்த்த மக்காச் சோள முத்துக்கள் 1 கப், கேரட் 1, பனீர் 100 கிராம், பீன்ஸ் 10, பட்டாணி அரை கப், எண்ணெய் 1 டீஸ்பூன், சீரகத் தூள், மிளகாய்த் தூள் தலா அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு. செய்முறை: சோள முத்துக்களை சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். கேரட், பீன்ஸை பொடியாக நறுக்குங்கள். சோளம் வேக வைத்த தண்ணீர் நிறைய மீதமிருந்தால் அதிலேயே நறுக்கிய காய்கள், பட்டாணி, பனீர் ஆகியவற்றை வேக வைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி அதில் சோள முத்துக்கள், வேக வைத்த காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிளகாய்த் தூள், சீரகத் தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

மினி கோஸ் மஷ்ரூம் பொரியல் தேவை: குட்டி கோஸ் 100 கிராம், காளான் 1 பாக்கெட், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு, மிளகு 1 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு. செய்முறை: கோஸை நடுவில் பாதியளவுக்கு இரண்டாகக் கீறி வையுங்கள். காளானை இரண்டாகவும், வெங்காயம், தக்காளியைப் பொடியாகவும் நறுக்குங்கள். மிளகு, சோம்பு, கறிவேப்பிலையை வறுத்து பொடியுங்கள். எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயத்தை வதக்கி, பிறகு தக்காளி, கோஸ், மிளகாய்த் தூள் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள். காய் வெந்து பச்சை வாடை போனதும், காளானைச் சேர்த்து பொடித்து வைத்திருக்கும் பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள். ஆசிரியர்: சமையல் திலகம் ரேவதி சண்முகம் – நன்றி:- அவள் விகடன் (தொகுப்பு: அக்ஷயா)