சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 9
விஜயன் கைவசத்தில் இருந்த தங்கக்காசுகள் நிரம்பிய பை, வேலையைத் துரிதமாக முடிக்கப் பேருதவியாயிருந்தது.
ஒவ்வொரு கட்டமாக நன்கு காய விட்டு வேலை செய்ய வேண்டியிருந்ததால் மொத்த வேலையும் முடிய நாலைந்து மாதங்கள் ஆயிற்று.
நான்கு புறமும் பலம்வாய்ந்த சுற்றுச் சுவர்! உள்புறம் வீரர்களுக்கான விடுதி. குதிரைலாயம், நடு நாயகமாக விஜயன் வசிப்பதற்கான அரண்மனை. முகப்பில் உறுதியான இரட்டைக் கதவு.
“சிற்றரசன் கோட்டை” உருவாகி விட்டது.
இது நடந்த காலம் கி.பி. சுமார் 1175.
முதலாவது பிரச்னை சுமுகமாக நிறைவேறியது.
கண்டியான்தாவுப் பாலத்திற்கு சற்று வடக்கே தள்ளி ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. இதை வெள்ளரித் தாவு என்று கூறுவார்கள். சுமார் 60,70 வருடங்களுக்கு முன்னால் இது அகன்ற படுகையாகயிருந்தது. கோட்டைச் சுவருக்குக் கரம்பை என்று சொல்லும் களிமண் எடுத்த இடம் இது தான்.
வெங்குளம் பாதைக்கு வடக்கில் சுண்டிக்குளம் என்று ஓர் இடம் உள்ளது. நாலைந்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது கோட்டைச்சுவருக்காகப் புற்று மண் எடுத்த இடம். இப்போது பாதிக்கு மேல் விவசாய நிலமாக மாற்றி விட்டார்கள்.
அடுத்து இரண்டாவது கட்டவேலை ஆரம்பமாகியது.
வடக்கில் தேவிபட்டினம் எல்லையில் இருந்து தெற்கே அத்தியூத்து எல்லை வரையும் மேற்கில் புல்லங்குடி எல்லையில இருந்து கிழக்கே கடற்கறை வரையும் தனது ஆதிக்க எல்லையை விஸ்தரித்தான்.
குடியிருப்பு நிலங்கள் கொல்லை கொடிக்கால் மா, புளி, வாழை மரங்கள் உள்ள தோப்புகள் நீங்கலாக மீதி நிலங்கள் அரசனுக்குச் சொந்தமானது என்று பிரகடனம் செய்தான்.
விவசாய நிலங்களும் காடுகளும் தரம் பிரிக்கப்பட்டு தனித்தனியே தீர்வை விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலங்களில் நஞ்சை, புஞ்சை விவசாயம், மற்றும் பனை தென்னை முதிலிய பலன் தரும் விருட்சங்கள் வளர்த்தும் பராமரிக்க விரும்புவோர் அரசுக்குரிய தீர்வைப் பணத்தைச் செலுத்தி விட வேண்டும்.
நீர்நிலைகளைத் தூர்வாரியும், தேவைப்பட்ட இடங்களில் புதிதாகக் குளங்கள் வெட்டியும் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டான்.
போக்குவரத்துப் பாதைகள் சீர் செய்யப்பட்டது. களவுப்பயம் ஒழிக்கப்பட்டது. இதனால் வணிகர் குழுக்கள் அச்சமின்றி இங்கு வந்து போக முடிந்தது.
அமைதியான சூழலில் விவசாய வேலைகள் நடந்தேறியது. தங்கு தடயற்ற வணிகர் குழுக்கள் வருகையும்,
விவசாயமும் வாணிபமும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறியதால் மக்களின் வாழ்க்கை வளம் பெற்றது.
எல்லோரும் இளவரசனை வாயார வாழ்த்தினார்கள்.
இந்த இரண்டாவது கட்ட வேலை முடிந்ததுமே மூன்றாவது கட்டமும் நிறைவேறி விட்டது. எப்படி?
விவசாயிகளிடமிருந்து கிடைக்கும். தீர்வையும், வணிகக் குழுக்கள் மூலம் கிடைக்கும். சுங்கத் தீர்வையும் சேர்ந்து அரசு நிர்வாகச் செலவுகளுக்கு மேல் மிச்சமாகவே பணம் கிடைத்து விடுகிறது. அப்புறம் கவலை ஏன்?
சிக்கலான பிரச்சனைகள் தீர்ந்து விட்டதால் இப்பொழுது இளவரசன் வேறு வேலைகளில் ஈடுபட்டான்.
தானும் தன்மனைவியும் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்காக சுமார் முப்பது ஏக்கர் நிலத்தை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து அதில் மா,பலா,வாழை,முந்திரி, கொய்யா போன்ற பழ மரங்களைப் பயிரிடச் செய்தான்.
இது தான் “அரமனைத் தோப்பு” எனப் பெயர் பெற்றது.
மரங்களுக்கு நீர்ப்பாய்ச்ச பெரிய ஊற்று அமைத்தான். இதுவே தோப்பூத்து (தோப்பு ஊற்று) எனப் பெயர் பெற்றது.
இதைப் பற்றி மேலும் விவரங்கள் பின்னர் வரும்.
பறவைகள், முயல் முதலியவற்றை வேட்டையாடுவதற்காக நந்திக்காட்டுப் பக்கம் போய் வருவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
அரமனைத் தோப்புக்கும் நந்திக் காட்டுக்கும் இடையில் தனது குல தெய்வமான ‘ராஜராஜேஸ்வரி’ சிலையைப் பிரதிஷ்டை செய்து ஒரு சிறிய கோவிலையும் கட்டினான்.
இதுவே இப்பொழுது ‘ராஜ கருப்பண்ண சாமி கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
இதன் நேர் வடக்கில் ஓர் அம்மன் கோவில் கட்டி அதற்கு “வீரமாகாளி அம்மன் கோவில்” எனப் பெயரிட்டான்.
இதன் மேற்குப்புறத்தில் ஒரு குளம் வெட்டினான். அரசு ஆவணங்களில் அது “விஜயன் ஊரணி” எனப்பதிவாகியுள்ளது.
விஜயன் வருவதற்கு முன் சித்தார்கோட்டைக் கண்மாயில் மட்டும் தான் நஞ்சை விவசாயம் நடந்து கொண்டிருந்தது.
மழைக்காலத்தில் கண்டியான் தாவு ஓடையில் அதிகமான தண்ணீர் வரத்தின் காரணமாக உரிய நேரத்தில் விவசாய வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது.
இந்தக் குறையைத் தீர்க்கும் பொருட்டு அதற்கு வடக்கே தரவைக் காட்டில் புதிய கண்மாய் ஒன்றை வெட்டினான். இதுவே பிற்காலத்தில் தரவைக்கண்மாய் – துண்டுக்கண்மாய் – இரண்டாங்கண்மாய் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.
விஜயன் செய்த சீர்திருத்தப் பணிகளில் இதுவே மிகச்சிறந்த பணி. எனினும் மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறி விட்டார்கள்.
சமீபகாலங்களில் அதைப் புதுப்பிக்கப் பலதரம் முயன்றும் பாசனதாரர்களுக்கிடையே உட்பூசல் மலிந்திருந்ததால் முயற்சி கைகூடவில்லை.
போதாக்குறைக்கு உப்பளம் வேறு வந்து விட்டது!
மக்களின் வளமான வாழ்க்கைக்குத் தேவையான உள்கட்டுமானப் பணிகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டது.
நாட்டில் அமைதி நிலவியது, எதை நாடி வந்தானோ அது கிடைத்து விட்டது . நிம்மதிப் பெருமூச்சு விட்டான். உள்ளூர மகிழ்ந்தான்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைத்ததா?
அமைதியாகக் கழிந்து கொண்டிருந்த அவனுடைய வாழ்க்கையில் விதிவிளையாடி விட்டது.
சுழன்றடிக்கும் சூறாவளியில் சிக்கிக் சிதைந்த குருவிக் கூடு போல் அவனுடைய அமைதியான வாழ்க்கை சிதறடிக்கப்பட்டு விட்டது.
ஓர் ஓலைச்சுருள் வடிவில் விதி அவனைத் தேடி வந்தது.
ஆசிரியர்: சி. அ. அ. முஹம்மது அபுதாஹிர்
சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை | சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும் |