Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2016
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,257 முறை படிக்கப்பட்டுள்ளது!

டானிக்! டானிக்!! டானிக்!!!

 p32aஇரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS)  மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் விளம்பரம் வழியாகவும் ஊட்டப்பட்ட அரைகுறைத் தெளிவுடன் இருக்கும் இளைய தலைமுறையினரும் மாசத் தொடக்கத்தில் புளி, பருப்போடு, இரண்டு பாட்டில் இரும்பு டானிக், ஒரு பாக்கெட் உயிர்ச்சத்து மாத்திரை வாங்கிவருவதைப் புத்திசாலித்தனமான அக்கறையாகக் கருதுகிறது.

‘அவசர உலகில் அரக்கப்பறக்கத் தின்று திரியும்போது, இப்படி டானிக்குகள், பி-காம்ப்ளெக்ஸ் மாத்திரைகள் தினம் ஒன்று எடுத்தால் நல்லதுதானே?’, ‘அப்போதைக்கப்போது ‘கட்டிங்’ போடும் பழக்கம் உள்ள எனக்கு லிவர் டானிக் நல்லதுதானே செய்யும்?’ என்போருக்கு ஒரு தகவல்… செய்த குற்றங்களுக்கு இப்படி டானிக்குகளைச் சாப்பிடுவது என்பது பாவத்தைக் கழுவும் பிராயச்சித்தம் அல்ல; தவிர, அவசியம் இல்லாமல் எடுக்கப்படும் இந்த மருந்துகள் ஆபத்தைத்தான் தரும். எப்படி?

p32இரும்புச் சத்து டானிக் என்பது வெகு அதிகமாக மக்களால் அவசியம் இன்றிப் பயன்படுத்தப்படும் ஒரு சத்து மருந்து. சோகை நீக்க மிக அவசியமான அந்த மருந்து, அவசியம் இன்றி அதிகம் பயன்படுத்தப்படும்போது, இரைப்பைக் குடலில் புண்களையும், மலச்சிக்கலையும், சில நேரங்களில் ஈரல் பாதிப்பையும்கூட ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சாக்லேட், பிஸ்கட் வாங்கிச் செல்வதுபோல, ‘எதற்கும் இருக்கட்டும்’ என இரும்புச் சத்து டானிக் வாங்கிச் செல்வது அந்தக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடும் என எச்சரிக்கிறது நவீன மருத்துவ உலகம். இரும்புச் சத்து ஏற்கெனவே ஏராளமாக நம் அன்றாட உணவில் பொதிந்திருக்கிறது. இரும்பை உடல் உட்கிரகிக்க வைட்டமின் சி சத்து அவசியம்.

பட்டை தீட்டிய வெள்ளை அரிசியில் இரும்புச் சத்து கிட்டத்தட்ட கிடையாது. ஆனால், கம்பு அரிசியில் ஏராளம். குதிரைவாலியிலும் வரகு, சாமையிலும்கூட அதிகம். அந்தச் சிறுதானியங்களில் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுவது, வைட்டமின் சி சேர்த்து இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவதற்கு இணையானது. இது தவிர, முருங்கைக் கீரை சூப், கோழி ஈரல், நிலக்கடலை மிட்டாய், நெல்லிக்கனிச் சாறு, உலர்ந்த திராட்சை இவை அனைத்தும் இரும்புச் சத்தை இயல்பாகத் தரும். இப்படிச் சாப்பிடுபவருக்கு இரும்புச் சத்துக்கு என தனி டானிக் தேவை இல்லை.

நாகச் சத்து (zinc), குழந்தை டானிக்குகளில் பிரபலம். உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தருவதிலும், கேன்சர் நோய்த் தடுப்பிலும், ஹார்மோன் சுரப்பைச் சீர்ப்படுத்துவதிலும் அதன் பயன்குறித்து ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன. இந்த நாகச் சத்து நம் ஊர் நிலக்கடலை, சோயா, பீன்ஸ், மாதுளம் பழம், கோழி மற்றும் ஆட்டு ஈரல், பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதையில் ஏராளம். பூசணி, தர்பூசணியைச் சாப்பிடும்போது/சமைக்கும்போது விதையைத் தூர எறிந்துவிடாமல் உலர்த்தி எடுத்து, அவ்வப்போது சாப்பிட்டால் நாகச் சத்து தாராளமாகக் கிடைக்கும்.

இப்படி நாகச் சத்தைச் சாப்பிடாமல், டானிக்காக அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு நல்லது செய்யும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மற்ற வைட்டமின்கள் உட்கிரகிக்கப் படுவதைக் குறைத்து, குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தன்மையைக் கொடுத்துவிடும் என பாதிப்புகளை வரிசையாகப் பட்டியலிடுகிறது உலகின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக்.

வைட்டமின்கள் மிக அவசியமான உணவுக் கூறுகள் என்பது புது விஷயம் இல்லை. அதே, ‘உடம்பு சோர்வாக இருக்கிறது; தோல் இன்னும் பளபளப்பாக இருந்தால் நல்லா இருக்குமே; கணக்கில் சென்டம் வரலையே’ என்று காலை, மதியம், இரவு என வைட்டமின் மாத்திரைகளை இஷ்டத்துக்குச் சாப்பிடுவது, உயிர்ச் சத்தாகாமல், உயிரை எடுக்கும் சத்தாகிவிடும். அளவுக்கு அதிகமான ஃபோலிக் அமிலம் எனும் பி9 வைட்டமின் மலக்குடல் புற்றைத் தரக்கூடும். அளவுக்கு அதிகமான வைட்டமின் சி சிறுநீர்ப்பை புற்றைத்தரக் கூடும். ஆனால், இந்த இரண்டு வைட்டமின்களையுமே இயற்கையாக அளவோடு எடுத்துக்கொள்ளும்போது புற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றலுடன் செயல்படும்.

‘பையனுக்கு இந்த டானிக் கொடுத்தீங்கன்னா, அடுத்த சீன்லயே உலக செஸ் சாம்பியன் ஆகிடுவான்’ என்று மூளைக்கு டானிக் விற்பது, ‘இந்தப் புரத பானம் குடிக்கக் குடிக்க இந்திய கிரிக்கெட் அணியில் அவனுக்கான இடம்  கர்ச்சீப் போட்டுவைக்கப்படும்’ என்பது போன்ற கற்பனை கமர்ஷியல்களுடன் தினமும் நாலு டானிக் கம்பெனிகள் சந்தையில் இறங்குகின்றன. பிளாஸ்டிக் பக்கெட், குடம் சைஸில் மாத்திரை டப்பாக்கள், இன்று ஒவ்வொரு ஜிம்முக்கு அருகிலும் ஊட்டச் சத்து உணவுகளாக விற்கப்படுகின்றன. அவசியம் இல்லாமல், அளவு தெரியாமல், குடும்ப மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதற்கு வசப்படுவது என்பது ‘சொ.செ.சூ’தான்!